ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை (7)
பாசுரமும் விளக்கவுரையும்
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
கீசு கீசு என்(று) எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்தத் தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய் (7)
பொருள்
பேதைப் பெண்ணே! குருவிகள் எழுப்பும் ‘கீச் கீச்’ என்ற ஒலி உனக்குக் கேட்கவில்லையா? மணம் வீசும் கூந்தலை உடைய இடையர் குலத்துப் பெண்கள் தயிர் கடைகிறார்கள். இதனால், அவர்கள் கழுத்தில் உள்ள தாலிகள் கலகல என்று ஒலிக்கின்றன. மத்தினால் தயிர் கடையும் ஓசையும் எழுகிறது. இவையெல்லாம் உன் காதில் விழவில்லையா? பெண்கள் தலைவியே! நாங்கள் நாராயணனின் அவதாரமான கண்ணனின் திருப்புகழைப் பாடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் பாடல்கள் உன் காதில் விழுந்தாலும் நீ இன்னும் படுக்கையிலேயே இருக்கிறாயே! ஒளிவீசும் முகத்தை உடைய பெண்ணே, எழுந்து வந்து கதவைத் திறப்பாயாக!
அருஞ்சொற்பொருள்
கீசு கீசு – பறவைகள் எழுப்பும் கீச் கீச் என்ற சப்தம்
ஆனைச்சாத்தன் – வலியன் குருவி (கீச்சாங்குருவி)
கலந்து பேசும் பேச்சு அரவம் – (இரைதேடச் செல்லும்போது) கூட்டமாக எழுப்பும் சப்தம்
பேய்ப்பெண்ணே – பேதைப்பெண்ணே
காசும் பிறப்பும் – கழுத்தில் அணியப்படும் தாலி, காசு மாலை முதலியன
கைபேர்த்து – (தயிர் கடையும்போது) கைகளை முன்னும் பின்னும் மாறி மாறி அசைத்தல்
கேட்டே கிடத்தியோ – (நாங்கள் பகவந்நாமாக்களைப் பாடுவது) காதில் விழுந்த பின்னரும் எழாமல் படுக்கையிலேயே கிடக்கிறாயே!
தேசம் உடையாய் – தேஜஸ் உடைய, ஒளிமிக்க
காசும் பிறப்பும் – அச்சுத்தாலி (காசுத்தாலி), ஆமைத்தாலி (முளைத்தாலி) ஆகிய இரண்டும் என்றும் பொருள் சொல்லலாம். முற்காலங்களில் சுமங்கலிகள் அச்சுத்தாலி, ஆமைத்தாலி என்ற இரட்டைத் தாலி அணிந்தனர். அச்சுத்தாலி என்பது (நாணயம் போன்று) அச்சினால் உருவாக்கப்பட்டது. முளைத்தாலி என்பது முளை முளையாகச் செய்து தாலிச் சரட்டில் கோக்கப்பட்டது.
காசு என்பது கழுத்தில் அணியப்படும் அணி, பிறப்பு என்பது கையில் அணியப்படும் வளையல்கள் என்று பொருள் கொண்டாலும் சரியே.
மொழி அழகு
பேய்ப்பெண்ணே என்று ஒரு தோழியை அழைக்கிறாள் ஆண்டாள். இதே பெண்ணை இதே பாசுரத்தில் நாயகப் பெண்பிள்ளாய் என்றும், தேசமுடையாய் என்றும் விளிக்கிறாள். இத்தகைய பதங்கள் அனைத்தும் தன்னை ஒத்த வயதுடைய சிறுமிகளை அவள் அன்புடன் கூப்பிடும் விதம். இனிவரும் பாசுரங்களில் கேலி, கிண்டலும் இடம்பெறும். இவையெல்லாம் சம வயதுப் பெண்கள் ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கு.
அதேநேரத்தில், இந்தப் பாசுரங்களில் கோகுலத்தின் இயற்கை அழகு, இடைக்குலத்தின் அப்பாவித்தனம், செல்வச் செழிப்பு, வீரம் முதலிய குணங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
***
குருவிகள் எழுப்பும் ஓசை என்ற இயல்பான விஷயத்தை அவள் கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் என்று சொல்லும் பாங்கு அனுபவிக்கத் தக்கது. இது ஆண்டாளுக்கே உரிய தனித்துவம் மிக்க மொழிநடையாகும்.
***
கீசுகீசென்று என்ற சொற்பிரயோகம் குருவிகளின் ஓசையைப் போன்றே ஒலிப்பதும், காசும் பிறப்பும் கலகலப்ப என்பது மத்தினால் கடையும் ஓசையை ஒத்திருப்பதும் கவனிக்கத்தக்கவை.
ஆன்மிகம், தத்துவம் பகவந் நாமாக்கள் காதில் விழுந்தாலும் படுக்கையிலேயே விழுந்து கிடக்கும் பெண்ணை உதாரணமாகக் காட்டி நமக்குப் பாடம் சொல்கிறாள், ஆண்டாள். இறை சிந்தனையை மறைப்பவை உலகாயத விஷயங்கள். அவற்றை உதறித் தள்ளி இறைவனையே பற்றி நிற்க வேண்டும் என்பது கருத்து. உலகாயத விஷயங்களில் நாம் நாயகர்களாகவும், தேஜஸ் உடையவர்களாகவும் இருந்தாலும், ஆன்மிக சுகத்தை அறியாத பேதைகளாகவே இருக்கிறோம்.
வாச நறுங்குழல் ஆய்ச்சிகளின் கூந்தலை மணம் மிக்க கூந்தல் (வாச நறுங்குழல்) என்று வர்ணிக்கிறாள் ஆண்டாள். இதேபோல, நப்பின்னையை கந்தம் கமழும் குழலீ என்று அழைக்கிறாள் (உந்து மதகளிற்றன் பாசுரம்). இதன் பொருளும் வாச நறுங்குழல்தான். கண்ணனது குழலின் நறுமணத்தை நாற்றத் துழாய் முடி (துளசி மணம் பொருந்திய தலைமுடி) என்று வர்ணிக்கிறாள். (நோற்றுச் சுவர்க்கம் பாசுரம்) மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் கண்ணனுக்குச் சிங்கத்தை உவமையாகக் காட்டி, அதன் பிடரி மயிரை வேரி மயிர் (பரிமள வாசம் மிக்கது) என்று வர்ணிக்கிறாள்.
.