
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – எட்டாம் நாள் – 23.10.2022
கடைசிப் பந்தில் இந்தியா திக்திக் வெற்றி
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று இரண்டு போட்டிகள் நடந்தன. குரூப் 1 பிரிவில் அயர்லாந்து இலங்கை அணிகள் இந்திய நெரப்படி காலை 0830 மணிக்கு ஹோபர்ட் மைதானத்தில் மோதின. குரூப் 2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மதியம் இந்திய நேரப்படி 1330 மணிக்கு மெல்பர்னிலும் விளையாடின.
முதல் ஆட்டம் இலங்கை-அயர்லாந்து
அயர்லாந்து அணி (128/8, ஹாரி டெக்டர் 45, பால் ஸ்டிர்லிங் 34, ஹசரங்கா 2/25, தீக்ஷணா 2/19) இலங்கை அணியிடம் (15 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 133 ரன், குஷால் மெண்டில் 68, தனஞ்சய டி சில்வா 31, சரித் அசலங்கா 31) ஒன்பது விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆண்டி ஒரு ரன் எடுத்து இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னால் ஆட வந்த வீரர்களில் டக்கர் (10 ரன்), டாக்ரெல் (14 ரன்) ஹாரி டெக்டர் (45 ரன்) ஆகியோ மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங்குடன் (34 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்தினர். ஆனால் பிற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. எனவே அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 128 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதற்கடுத்து ஆடவந்த இலங்கை அணி இந்த எளிய இலக்கை ஊதித்தள்ளிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். 15 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து இலங்கஈ அணி வெற்றி பெற்றது. குஷால் மெண்டிஸ் 68 ரன், தனஞ்சயா மற்றும் அசலங்கா தலா 31 ரன் எடுத்தனர்.
இரண்டாவது ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி (159/8, ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51, அர்ஷதீப் சிங் 3/32, ஹார்திக் பாண்ட்யா 3/30) இந்திய அணியிடம் (20 ஓவரில் 160/6, கோலி 82*, பாண்ட்யா 40, ரவுஃப் 2/36, நவாஸ் 2/42) நான்கு விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் அர்ஷதீப் சிங் தனூடைய முதல் ஓவரிலும் இரண்டாவது ஓவரிலும் தலா ஒரு விக்கட் எடுத்தார். பவர்ப்ளே ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். அவரோடு இணைந்து ஆடிய இஃப்திகார் அகமது 51 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் பிற வீரர்கள் சோபிக்கவில்லை. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷதீப், பாண்ட்யா (தலா மூன்று விக்கட்) புவனேஷ் குமார், ஷமி (தலா ஒரு விக்கட்) நன்றாகப் பந்து வீசினர். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான் அணியை 159 ரன்னுக்கு குறைக்க முடிந்தது.
அதன் பின்னர் ஆடவந்த இந்திய அணி மிக மோசமான தொடக்கத்தைப் பெற்றது. ரோஹித் ஷர்மா (4 ரன்), ராகுல் (4 ரன்), சூர்யகுமார் யாதவ் (15 ரன்), அகசர் படேல் (2 ரன்) நிலைத்து நிற்கவில்லை. பவர்ப்லே முடிவில் இந்திய அணி நாலு விக்கட் இழப்பிற்கு 31 ரன் எடுத்திருந்தது. ஏழாவது ஓவரிலிருந்து விராட் கோலியும் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து ஆடினார்கள்
கடைசி 24 பந்துகளில் 54 ரன் அடிக்க வேண்டிய ஒரு நிலைமை. அப்போது கோலி 39 பந்துகளில் 43 ரன்னும் பாண்ட்யா 29 பந்துகளில் 34 ரன்னும் எடுத்திருந்தனர். 17ஆவது ஓவரில் கோலி 3 பந்துகள் ஆடி மூன்று ரன்னும் பாண்ட்யா மூன்று பந்துகள் ஆடி 3 ரன்னும் எடுத்தனர். அடுத்த ஓவரில் கோலி 15 ரன்கள் எடுத்தார். 19ஆவது ஓவரில் முதல் நாலு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு பந்துகளை கோலி சிக்சருக்குப் பறக்கவிட்டார்.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 16 ரன் அடிக்கவேண்டியிருந்தது. முதல் பந்தில் பாண்ட்யா ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்து கோலியை விளையாடக் கொண்டுவந்தார். மூன்றாவது பந்தில் கோலி இரண்டு ரன் எடுத்தார். நாலாவது பந்து, ஸ்பின்னர் வீசிய பந்து, இடுப்பிற்கு மேல் வீசப்பட்டதால் நோபால் ஆனது; அதனை கோலி சிக்ஸ் அடித்தார்; அங்கே ஒரு ஃபீல்டர் பிடிக்க முயன்று அது சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து வைட்டாகிப் போனது. அடுத்த பந்து அதனால் இன்னமும் ஃப்ரீஹிட் பந்தாகவே இருந்தது.
அந்தப் பந்தில் கோலி கிளீன் போல்டானார்; ஆனால் ஃப்ரீஹிட் என்பதால் கோலி ஓடி ரன் எடுக்கத்தொடங்கினார்; பாகிஸ்தான் வீரர்கள் பந்தைக் கவனிக்காமல் கோலி அவுட் எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் மூன்று ரன் கிடைத்தது. இனி 2 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் தி பெஸ்ட் ஃபினிஷர் எனக் கருதப்படும் கார்த்திக் ஸ்டெம்ப்ட் அவுட் ஆனார். அப்போது அஷ்வின் ஆடவந்தார். அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. அஷ்வின் அதனை ஆடவில்லை. இப்போது ரன் எண்ணிக்கை சமம் ஆகிப்போனது. அடுத்த பந்தை அஷ்வின் அலட்சியமாக ஸ்கூப் செய்து ஒரு ரன் எடுத்தார். இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அழகு சேர்த்தது. அனைவரும் இந்திய அணியின் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.