- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 30.03.2024 – லக்னோ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்க்ஸ்
லக்னோ அணி (199/8, டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43*, பூரன் 42, சாம் கரன் 3/28, அர்ஷ்தீப் சிங் 2/30) பஞ்சாப் அணியை (178/5. ஷிகர் தவான் 70, ஜானி பெயர்ஸ்டோ 42, லிவிங்க்ஸ்டோன் 28*, மயங்க் யாதவ் 3/27, மொஷின் கான் 2/34) 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் லக்னோவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (54 ரன்) நன்றாக ஆடினார்.
ராகுல் (15 ரன்), படிக்கல் (9 ரன்), பதோனி (8 ரன்), ரவி பிஷ்னோய் (பூஜ்யம்), மோஷின் கான் (2 ரன்) ஆகியோர் வந்தார்கள் போனார்கள் ரகம். நிக்கோலஸ் பூரன் (42 ரன்) மற்றும் க்ருணால் பாண்ட்யா (43 ரன் ஆட்டமிழக்காமல்) நன்றாக ஆடியதால் லக்னோ அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்கு வந்தது.
இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (50 பந்துகளில் 70 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) பெயர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் ஆடவந்த பிரப்சிம்ரன் சிங் (19 ரன்), ஜிதேஷ் ஷர்மா (6 ரன்), சாம் கரன் (பூஜ்யம்) ஆகியோர் வெற்றி பெறும் நிலையில் இருந்த பஞ்சாப் அணியை தோல்வியை நோக்கித்தள்ளினர்.
17ஆவது ஓவரின் அடுத்தடுத்தடுத்த பந்துகளில் மொஷின் கான் ஷிகர் தவான் மற்றும் சாம் கரன் விக்கட்டுகளை எடுத்தார். அந்த இடத்தில் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்துவிட்டது. அதன் பின்னர் லியம் லிவிங்க்ஸ்டோன், ஷஷாங்க் சிங் இருவராலும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் பஞ்சாப் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
லக்னோ அணியின் மயங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடக்கவுள்லது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.