- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 31.03.2024 – இரண்டு ஆட்டங்கள்
குஜராத் டைடன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்றது.
குஜராத் vs ஹைதரபாத்
ஹைதராபாத் அணியை (162/8, அபிஷேக் ஷர்மா 29, அப்துல் சமத் 29, கிளாசன் 24, மோஹித் ஷர்மா 3/29) குஜராத் அணி (168/3, சாய் சுதர்ஷன் 45, டேவிட் மில்லர் 44*, கில் 36, சஹா 25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று முதல் போட்டி குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கும் அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக போட்டி ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் நன்றாக விளையாடினார்கள். இருப்பினும் அதிரடி ஆட்டம் எதுவும் எடுபடவில்லை. தொடர் இடைவெளியில் விக்கட்டுகள் விழுந்தன. ஐந்தாவது ஓவரில் மயங்க் அகர்வால் (16 ரன்), ஏழாவது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் (19 ரன்), பத்தாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா (29 ரன்), 15ஆவது ஓவரில் மர்க்ரம் (17 ரன்) என விக்கட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. கிளாசன் (24 ரன்), ஷபாஸ் அகமது (22 ரன்), அப்துல் சமது (29 ரன்) சற்று அதிரடியாக விளையாட முற்பட்டு தங்களது விக்கட்டுகளை இழந்தனர்.
இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமன் சஹா (13 பந்துகளில் 25 ரன்), ஷுப்மன் கில் (28 பந்துகளில் 36 ரன்) ஆகிய இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். அந்த அடித்தளத்தின் மீது தங்களது ஆட்டத்தை அமைத்து சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 45 ரன்), டேவிட் மில்லர் (27 பந்துகளில் 44 ரன்), விஜய் ஷங்கர் (11 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் 19.1 ஓவரில் 168 ரன் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
குஜராத் அணியின் மோஹித் ஷர்மா சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சென்னை vs டெல்லி
டெல்லி அணி (191/5, வார்னர் 52, ரிஷப் பந்த் 51, பிருத்வி ஷா 43, பதிரனா 3/31) சென்னை அணியை (171/6, ரஹானே 45, தோனி 37, மிட்சல் 34, ஜதேஜா 21, முகேஷ் குமார் 3/21, கலீல் அகமது 2/21, ) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று இரண்டாவது போட்டி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் (35 பந்துகளில் 52 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), பிருத்வி ஷா (27 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆகிய இருவரும் 10 ஓவர் வரை பிரமாதமாக ஆடினர். நீண்ட நாட்களாக சரியாக ஆடாத பிருத்வி ஷா இன்று சிறப்பாக ஆடினார். ஆனால் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த நான்கு ஓவர்களுக்கு ரிஷப் பந்த் (32 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மார்ஷ் (12 பந்துகளில் 18 ரன்)ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்டப்ஸ் இரண்டு பந்துகள் மட்டுமே விளையாடி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 19ஆவது ஓவர் முடிவில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 191 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா அவுட்டானார். அஜிங்க்யா ரஹானே (30 பந்துகளில் 45 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மிட்சல் (26 பந்துகளில் 34, ஒரு ஃபோர், 2 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மிட்சல் 11ஆவது ஓவரிலும் ரஹானே 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ரஹானே ஆட்டமிழந்த பின் அடுத்த பந்தில் சமீர் ரிஸ்வி அவுட்டானார். ஷிவம் துபே 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் தோனி 16.1 ஓவரில் மைதானத்திற்கு ஆடவந்தார். வந்ததும் முதல் பந்து ஃபோர் போனது. அவர் வந்தபோது 24 பந்துகளில் 72 ரன் எடுக்க வேண்டிய நிலை. 19ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டும் கொடுத்தார்.
இருபதாவது ஓவரில் 41 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை. தோனி பேட்டிங். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்தால்கூட 36 ரன் மட்டுமே வரும். எனவே தோல்வி நிச்சயம் என்ற நிலையில், அந்த ஓவரில் தோனி இரண்டு ஃபோர் மற்றும் இரண்டு சிக்சர் அடித்தார். இரண்டு டாட் பந்துகள். எனவே சென்னை அணி 20 ரன் கள் வித்தியாசத்தில் இந்த சீசனில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.
டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அனியும் விளையாடவிருக்கின்றன.