
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs ராஜஸ்தான் – சின்னசாமி மைதானம், பெங்களூரு – 24.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (205/5, விராட் கோலி 70, தேவதத் படிக்கல் 50, பில் சால்ட் 26, டிம் டேவிட் 23, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 20, சந்தீப் ஷர்மா 2/45, ஆர்ச்சர் 1/33, ஹசரங்கா 1/30) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (194/9, யசஶ்வீ ஜெய்ஸ்வால் 49, துருவ் ஜுரல் 47, நிதீஷ் ராணா 28, ரியன் பராக் 22, சூர்யவன்ஷி 16, ஹேசல்வுட் 4/33, க்ருணால் பாண்ட்யா 2/31, புவனேஷ் குமார் 1/50, ய்ஷ் டயால் 1/33) 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் நான்கு வீரர்கள் அணியின் ஸ்கோரை நன்கு கட்டமைத்தார்கள். பில் சால்ட் (23 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர்), விராட் கோலி (42 பந்துகளில் 70 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (27 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), டிம் டேவிட் (15 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கடைசியாக களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா (10 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்தெடுத்தார்கள். 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.
206 ரன் என்ற கடினமான் இலக்கை அடைய இரண்டாவதாக மட்டையாட வந்தது ராஜஸ்தான் அணி. இவர்கள் பூவா தலையா வென்று எதற்காக பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதே புரியவில்லை. சென்ற ஆட்டத்தில் சேஸ் செய்யும்போது கடைசி ஓவரில் ரன் எடுக்க முடியாமல் தோற்றுப் போனார்கள். இம்முறையும் அதுதான் நடந்தது. முதல் 14 ஓவர்கள் வரைக்கும் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் பெங்களூரு அணியின் ரன்ரேட்டைவிட அதிகமாக இருந்தது.
இங்கேயும் முதல் நாலு மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். யசஶ்வீ ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 49 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி (12 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் வந்த நிதீஷ் ராணா (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ரியான் பாராக் (10 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (34 பந்துகளில் 47 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) என அனைவரும் சிறப்பாக ஆடினர்.
ஆனால் அதன் பின்னர் வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (8 பந்துகளில் 11 ரன்), ஷுபம் துபே (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் இறுதி வரை ஆடி வெற்றியை அணிக்குத் தந்திருக்க வேண்டியவர்கள். அவர்கள் இருவரும் சுமாரான ஷாட்டுகளில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்தவர்கள் ஹேசல் வுட்டின் பந்துவீச்சில் திணறிப்போயினர்.
இதனால் 19ஆவது ஓவரில் இரண்டு விக்கட்டுகளும் 20ஆவது ஓவரில் 2 விக்கட்டுகளும் வீழ்ந்தன. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கட்டுகள் இழந்து 5 ரன்கள் மட்டுமே அவர்களால் சேர்க்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு புள்ளிகள் பெற்றதால் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றது.





