
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ஹைதராபாத் – அகமதாபாத் – 02.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணி (224/6, ஷுப்மன் கில் 76, ஜாஸ் பட்லர் 64, சாய் சுதர்ஷன் 48, வாஷிங்டன் சுந்தர் 21, உனத்கட் 3/35, பாட் கம்மின்ஸ் 1/40, சீஷன் அன்சாரி 1/42) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (186/6, அபிஷேக் ஷர்மா 74, ஹென்றி கிளாசன் 23, நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 21, ட்ராவிஸ் ஹெட் 20, பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 19, சிராஜ் 2/33, பிரசிட் கிருஷ்ணா 2/19, இஷாந்த் ஷர்மா 1/35, ஜெரால்ட் 1/36) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் டைடன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (23 பந்துகளில் 48 ரன், 9 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 76 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் குஜராத் அணி விக்கட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தனர். ஏழாவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தபோது ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 64 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஷுப்மன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென்று உயர்த்தினர்.
அதன் பின் வந்தவர்களான வாஷிங்டன் சுந்தர் (16 பந்துகளில் 21, 1 சிக்சர்), ஷாருக் கான் (6 ரன்), ராகுல் திவாத்தியா (6 ரன்), ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோர் குறைந்த பந்துகளில் வேகமாக ரன் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்கு 225 ரன்கள் தேவை என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாடவந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (41 பந்துகளில் 72, 4 ஃபோர், 6 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (17 பந்துகளில் 13 ரன்), ஹென்றி கிளாசன் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) அனிகேத் வர்மா (7 பந்துகளில் 3 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (10 பந்துகளில் 19 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் எவ்வளவோ முயன்றும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.





