
அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.