கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வில்லுக்காரன் பட்டியில் வசித்து வரும் சிறுமி கீதா. இவர் வீட்டின் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை பெற்றோரிடம் இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், சிறுமியை ஊர் முழுக்க தேடியுள்ளனர்.
ஆனால், எங்கேயும் கிடைக்காத நிலையில், சிறுமியை காரில் சிலர் கடத்தி செல்வதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே குளித்தலை காவல்நிலையத்தில் சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்தனர்.
அந்த சிறுமியைத் தேட முழுவீச்சில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த சிறுமியை ஒரே நாளில் அந்த மர்ம நபர்களிடம் இருந்து மீட்டனர். காவல்துறையினர் அவர்களைப் பிடிக்க முயல்வதைத் தெரிந்து கொண்ட அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
அந்த நபர்கள் பற்றி சிறுமி கொடுத்த தகவலின் படி 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். மேலும், அந்த சிறுமியை பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.