மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தங்கப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் விசாலாட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் விசாலாட்சி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து மனைவி இறந்த செய்தியைக் கேட்ட தங்கப்பன் அதிர்ச்சி அடைந்து திடீரென மயங்கி விழுந்து விட்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் உறவினர்கள் கணவன் மனைவி இருவரின் உடலையும் ஒரே இடத்தில் தகனம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.