
வேடசந்தூர் அருகே மகப்பேறு உதவியாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையைச் சேர்ந்தவர் தனலட்சுமி(58). இவர், கரூர் கஸ்தூரிபா தாய், சேய் நல மையத்தில் மகப்பேறு உதவியாளராகப் பணிபுரிகிறார்.
அங்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை எடுத்து வந்த தனலட்சுமி, தனது வீட்டில் வைத்து கிராம மக்களுக்கு செலுத்தி உள்ளார்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பொன்.மகேஸ்வரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவர் தனலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினார்.
அங்கிருந்த 95 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பறிமுதல் செய்தார்.
விசாரணையில், வீட்டில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதலில் எடுத்து வந்ததாகவும், பின்னர் கிராமத்தில் உள்ள பலரும் கேட்டதால் மீண்டும் அவற்றை எடுத்து வந்ததாகவும் தனலட்சுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பொன்.மகேஸ்வரி கூறியதாவது: கொரோனா தடுப்பூசிகளை மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவமனை அல்லது மருத்துவ முகாம்களில் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும்.
தனலட்சுமி தனது வீட்டில் வைத்து இதுவரை 20 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அவர்களின் விவரத்தை சேகரித்துள்ளோம்.
இது குறித்து திண்டுக்கல், கரூர் மாவட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளேன். அவர் மீதான நடவடிக்கை குறித்து அதிகாரிகள் முடிவு செய்வர் என்று கூறினார்.