சென்னையில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது எதி்ர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்ததில் 17 மின்சார ஸ்கூட்டர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது
சென்னையை அடுத்த போரூர்-குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் நடத்தி வருகிறார். இங்கு 5 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை நடைபெற்று வந்தது. இவர்களிடம் மின்சார ஸ்கூட்டர் வாங்கியவர்கள் சர்வீஸ் செய்வதற்காகவும் தங்கள் ஸ்கூட்டர்களை கொடுத்துள்ளனர்.
இந்த ஷோரூமில் உள்ள ஒரு மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் தீ விபத்தில் ஷோரூமில் நிறுத்தி இருந்த 5 புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 மின்சார ஸ்கூட்டர்கள் என மொத்தம் 17 மின்சார ஸ்கூட்டர்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.ஷோரூமிலிருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.இது குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






