மதுரை-விருதுநகர்-நெல்லை-கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ஆமை வேகத்தில் நடைபெறும் இரட்டை அகலரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை-மதுரை ரயில் வழித்தடம் இரட்டை வழித்தடமாக மாற்றப்பட்டு அடுத்தகட்டமாக மதுரை-
கன்னியாகுமரி-திருவனந்தபுரம் வரை உள்ள ரயில் பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
நெல்லை குமரி மற்றும் தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரையிலான 245 கிலோ மீட்டர் தூரம் உள்ள வழித்தடங்களை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2012-13 ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மதுரை இருவழிபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் கடந்த 2015-16ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் கன்னியாகுமரி மதுரை வழித்தடம் இருவழி பாதையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கிலோ மீட்டர் தூரம் ரூ.1,182 35 கோடியில் ஒரு திட்டமாகவும் மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் தூரம் 1,003 – 94 கோடியில் ஒருதிட்டமாகவும் கன்னியாகுமரி திருவனந்தபுரம் 87 கிலோ மீட்டர் தூரம் 1,453-90 கோடியில் ஒரு திட்டமாகவும்3கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தற்போது கன்னியாகுமரி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ஒரு இரட்டை ரெயில் பாதையும் நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே மற்றொரு இரட்டை ரெயில் பாதையும் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையேயும் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையேயும் நாகர்கோவில் – நெல்லை இடையேயும் ஏற்கனவே உள்ள ரெயில் பாதை அருகே உள்ள இடத்தில் மண் கொட்டப்பட்டு நிரப்பப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி 50 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கவும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி யில் இருந்து மதுரை மார்க்கமாக இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களுக்கு நேரடி ரயில் வசதி செய்து தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






