
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
61. இயற்கைப் பாடங்கள்!
ஸ்லோகம்:
பரோபகாராய வஹந்தி நிம்னகா:
பரோபகாராய துஹந்தி தேனவ: !
பரோபகாராய பலந்தி பூருஹா:
பரோபகாராய சதாம் விபூதய : !!
– பர்த்ருஹரி.
பொருள்:
பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவே நதிகள் பாய்கின்றன. பசுக்கள் பால் சுரக்கின்றன. மரங்கள் பழமளிக்கின்றன. சான்றோரிடம் சேரும் செல்வம் பரோபகாரத்திற்காகவே!
விளக்கம்:
தன்னிடம் உள்ள செல்வத்தை தனக்காக அன்றி பிறருக்கு உதவுவதற்கு பயன்படுத்துவர் சான்றோர். நதி தன் நீரைத் தானே குடிக்காது. பசு தன் பாலைத் தானே குடிக்காது. மரம் தன் பழங்களைத் தானே தின்னாது. தனக்கன்றி பிறருக்காக, சுயநலம் இன்றி வாழ வேண்டும் என்று நினைப்பவர் சான்றோர். இயற்கை அவர்களுக்கு முன்னுதாரணம். அப்படிப்பட்ட சான்றோர் நமக்கு முன்னுதாரணம்.
இவ்வாறு பரோபகாரத்திற்காக உள்ள நதிகளை சுயநலத்திற்காக நாம் மாசு படுத்துகிறோம். பால் சுரக்கும் பசுக்களை பணத்தாசையோடு இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மரங்களை முன்னேற்றம் என்ற பெயரில் வெட்டிச் சாய்க்கிறோம்.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பாழாக்கி இயற்கைச் சீற்றத்தை விலைக்கு வாங்குகிறோம். இன்றைய நிலையை நினைத்து பார்த்தாலே அச்சமாக உள்ளது. நாம் மாறாவிட்டால் மேலும் விபரீதமே நிகழும். தெரிந்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கல்மனத்தவரே!