நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.
–
புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில் நாளை க்ருத்திகை நக்ஷத்திரத்தில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக அறிகிறோம்.
–
மஹோத்ஸவ காலத்தில் வரும் கார்த்திகை நக்ஷத்தில் புதிதாக அமைக்கப்படும் கோபுரம் ( உ+ம் ஷண்முகர் வாயில் கோபுரம், குபேரவாயில் கோபுரம்) போன்றவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யும் மரபு நல்லூரில் அண்மைக்காலத்தில் பேணப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவும் இதனை நோக்கலாம்.
–
இதன் மூலம் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் என்ற பெருமையும் நல்லூருக்கு அமையவுள்ளது.
–
தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி வேங்கடாஜலபதி கோயில், ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
–
இந்த உன்னத வைபவத்தை நிறைவேற்றுவதற்காக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும் இன்னும் சில வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.
–
ஆக, விரிவான வேத பாராயணத்துடனும் கலச பூஜை, ஹோமம் ஆகியவற்றுடனும் ஆரம்பமாகியுள்ள ஸ்வர்ண விமான பிரதிஷ்டா யாக பூஜைகள் தில்லை வாழ் அந்தணர்களால் “வைதிக” விதிப்படி நடைபெறும் என்றும் அறிய முடிகிறது.
–
இது உறுதிப்படுத்தப்படுமாயின், ஈழத்தில் விமான வைதிக ப்ரதிஷ்டை நிகழ்ந்த பேராலயம் என்ற தனித்துவமும் நல்லூருக்கே அமையும்.
–
நல்லூரில் வழமைக்கு மாறாக இம்முறை உள் வீதியில் நிகழும் இக்கும்பாபிஷேக நிகழ்வுகள் தேவஸ்தானத்தாராலேயே வெளிவீதியிலும் வீடியோவாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறியமுடிகிறது.
–
ஆனால் நல்லூரில் நடைபெறும் நிகழ்வுகளின் முழுவடிவம் அது நடைபெற்ற பின்னரே நிர்வாகஸ்தர் அல்லாத பிறரால் முழுமையாக அறிய முடியும் என்பதும் நல்லூரில் தனித்துவம் தானே?
–
தற்போதைய நல்லூர் தர்மபரிபாலகர்கள் தில்லை கூத்தன் பேரிலும் செந்திலாண்டவன் பேரிலும் அதிக பக்தி கொண்டவர்கள். அக்கோயில்களின் நடைமுறைகளை கவனித்து நல்லூரிலும் நடைமுறைப்படுத்தி வரும் பண்புடைவர்கள்.
–
அருணகிரிநாதரால் பாடப்பட்டதாக கருதப்படுவதும், முருக பக்தர்களின் அதீத பக்தி நிலையமுமான நல்லூரில் ஆறுமுகத்தழகன் தன் துணைவியரோடு இனி பொற்கூரை நிழலில் எழுந்தருளப்போகிறான். இனியேனும் அவன் நம்மை பன்னிரு கண்ணில் ஒரு கடைக்கண் நோக்காவது செய்து கடாக்ஷிக்க பிரார்த்திப்போம்.
–
முல்லையின் முறுவல் கொள் மங்கையாளுடன்
கல்லையும் கசியச் செய் கருணையாளனாய்
நல்லை பொற் கோயிலில்
நல்லருள் புரியும்
எல்லையில் அருளுடை இறையை ஏத்துவாம்
( குமாரகாவியம் -4)
–தியாக. மயூரகிரிக் குருக்கள்
#ஸ்வர்ணவிமானம் #தங்கவிமானம் #நல்லூர் #பொற்கூரை#வைதிகபிரதிஷ்டை




