வீடு தேடி வருகிறது அஞ்சலக வங்கி சேவை. ஏழைகளின் நலனுக்காக மோடி எடுத்துள்ள திட்டத்தின் செயலாக்கம் இன்று நடமுறைக்கு வந்தது.
PM @narendramodi launches #IndiaPostPaymentsBank #IPPB ; PM says this marks a historic day in banking sector pic.twitter.com/qf9fTMiZuP
— Doordarshan News (@DDNewsLive) September 1, 2018
ஏழை மக்களின் வீட்டு வாசலுக்கே வங்கி சேவையை கொண்டுவரும் நோக்கில் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கிராம மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய பணப் பட்டுவாடா வங்கி என, அஞ்சலக வங்கி சேவை திட்டத்தை நாடு முழுவதும் இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. மேலும், இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங் என்ற மொபைல் ஆப்-பினையும் வெளியிட்டார். இன்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது குறித்துப் பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் மோடி.
ஜீரோ பேலன்ஸ் என்ற அடிப்படையில், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளை துவக்கலாம். சுமார் 650 கிளைகள், 3250 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இன்று தொடங்கி வைக்கப் பட்டன. முதல் நாளிலேயே சுமார் 50 ஆயிரம் பேர் இதில் கணக்கு துவக்கினர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவை, இந்திய நாட்டின் பெரும்பாலான அஞ்சலகக் கிளைகளுடன் இணைக்கப்படும் அவ்வகையில் சுமார் 1.55 லட்சம் அஞ்சலக கிளைகளை இதில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அஞ்சலக வங்கி சேவை திட்டத்தை மத்திய அரசின் கண்காணிப்பில், ரிசர்வ் வங்கி நிர்வகிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வீட்டு வாசலுக்கே சென்று தபால்காரர் மூலம் வங்கிச் சேவையை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதன் மூலம் வங்கித்துறையில் வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அஞ்சல் துறை வங்கி சேவையில் கால்பதிக்கும் வகையில் இந்திய அஞ்சல் வங்கி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற ஜன்தன் யோஜனாவின் தொடர்ச்சியாக இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஜன் தன் மூலம் மக்கள் வங்கிகளை நாடி வந்தனர். தபால் துறை வங்கிச் சேவையைத் தொடங்கியுள்ளதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த திட்டம் மூலம், வங்கிகள் ஏழை எளிய மக்களையே தேடிச் செல்கிறது. இது எங்கள் கனவு. ஒவ்வொருவரின் வீடுகளையும் இந்த சேவை தேடி வரும். அஞ்சலக திட்டத்தில், 1.55 லட்சம் அஞ்சலக கிளைகள் இணைக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிக் கொள்கைகளால் வங்கித் துறையை சீரழித்துவிட்டது. அப்போது வங்கிகள் சீரழிக்கப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிகளின் பணம் கிடைத்தது. அவர்கள் செய்த ஊழலை மறைக்கவே அவர்கள் பெரு முயற்சி செய்தனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வங்கி துறைக்கு பெரும் உதவி செய்தது.
இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை காங்கிரஸ் ஏற்படுத்தியது. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வங்கிப் பணிகளை கொடுத்தது. ஆனால், தேஜகூ ஆட்சியில் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது
India Post Payments Bank offers several facilities and benefits common citizens. Here is my speech to mark its laun… https://t.co/HUYuzVSpKy
— Narendra Modi (@narendramodi) September 1, 2018
பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே சென்று தபால்காரர் மூலம் வங்கிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதால் நாட்டின் மூலை, முடுக்கிலும் வங்கிச் சேவை மக்களைச் சென்றடையும். வங்கித் துறை வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று பேசினார் மோடி.
இந்த திட்டத்தில் கடன் வழங்குதல், கிரெடிட் கார்ட் வழங்குதல் உள்ளிட்ட கடன் சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. ஆனால் பணம் டெபாசிட் செய்தல், மொபைல் பேமன்ட்ஸ், பணப் பரிமாற்றம், கொள்முதல் சேவை, ஏ.டி.எம்., நெட்பேங்கிங், மூன்றாம் நபர் பண பரிவர்த்தனை, சிறுசேமிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
நாடு முழுவதும் 11 ஆயிரம் தபால்காரர்கள் மூலம் வீட்டு வாசலுக்கே வரும் வங்கி சேவைகளின் பட்டியலில், வங்கிக் கணக்கு துவங்குதல், பணம் எடுத்தல், பண பரிமாற்றம், ரீசார்ஜ், கட்டணம் செலுத்துதல், காப்பீடு, முதலீடு, பண பரிமாற்ற அறிக்கை பெறுதல் உள்ளிட்டவை அடங்கும். இந்த வங்கி முறையில், டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணமும், ரொக்கப் பரிமாற்றம் ஒன்றுக்கு ரூ.25 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




