
- கட்டுரையும் படமும் :ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் கூறிய மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தின் மூன்றாம் நாள், இன்று.
மார்கழி மாதம் என்றாலே ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் அவர் இயற்றிய திருப்பாவையும் நம் மனதில் வரும் அற்புதமான விஷயங்கள்.
மார்கழி மாதத்தின் மூன்றாம் நாள் பாசுரமான ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ பாடலைப் பாடி பக்தர்கள் பக்தி என்னும் சாகரத்தில் இருந்து நல்ல முத்துக்களை பெறுகின்றனர்.
ஒங்கி உலகளந்த பெருமானின் சித்திரமானது மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தொலைவில் உள்ள எல்லோராவின் உலகப்புகழ் வாய்ந்த குகைச் சிற்பங்களில் ஒன்றாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வு துறையால் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக எல்லோரா குகை அறிவிக்கப்பட்டு, அத்துறையினால் பராமரிக்கப்படுகிறது.
எல்லோராவில் 15-வது குகையில் தசாவதார குகை என்றழைக்கப்படும் குகையில் இரண்டு அடுக்குகளாக உள்ள தளத்தின் மேல் தளத்தில் ஓங்கி உலகளந்த பெருமானின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
நரசிம்மாவதாரம், கூர்மாவதாரம், ரெங்கநாதர் சிற்பங்களும் அங்கு குகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குகை சிற்பங்களும், பக்தி இலக்கியங்களும் நம் பாரத பூமி ஆன்மீக பூமியென பறைசாற்றுவதாய் உள்ளது.