
நெடுஞ்சாலைப் பாதையிலே …
– ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட் –
அண்மையில் என் குடும்பத்தினருடன் காரில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தேன். சுத்தமான, அகலமான, நால்வழி சிமெண்ட் சாலை. வாகனங்கள் சீறிக் கொண்டு சென்றதோ அழகு. சாலையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள். சாலை ஓரங்களில் தேவையான தடுப்பு சுவர்கள், சாலையின் நடுவே அழகான பூக்களைத் தாங்கிய சிறிய செடிகள். இந்த ஆண்டு கோடை வெயிலிலும் அந்தச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலை செல்லும் பகுதியில் இருந்த கிராமத்து மக்களும் தங்கள் இருசக்கர வண்டியில் பயணித்து ‘ஸ்லிப் ரோடு’ மற்றும் ‘செர்வீஸ் ரோடு’ களின் மூலமாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இந்தச் சாலையை வடிவமைத்தவர்கள், அவர்களின் ஆணையை பின்பற்றி உழைத்த பணியாளர்கள் என பலரின் பங்கெடுப்பால் எங்கள் நெடுஞ்சாலைப் பயணமானது அற்புதமாய் தான் இருந்தது. நெடுஞ்சாலைத் துறை ஆங்காங்கே கட்டியுள்ள கழிப்பறைகள் எல்லாம் சுத்தமாக, துர்நாற்றம் இல்லாமல் பராமரிக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் அருகில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களின் நிலமையோ கொஞ்சம் சுமார் தான்.
முன்பெல்லாம் ஏழு மணி நேரத்தில் எங்கள் ‘டெஸ்டினேனுக்கு’ சேர்ந்த நாங்கள் அன்று 5 மணி நேரத்திலேயே எங்கள் பிரயாணத்தை முடித்தோம்.
‘வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நம் இந்தியாவில் நாம் நிறையவே ‘பாரதத்தை’ இழந்து விட்டோமோ ‘ -என…
இந்த முறை என் நெடுஞ்சாலையில் பயணித்த போது என் மனதில் தோன்றியது. ஆம்!! வழிநெடுக தெரியும் கிராமங்களை நாம் காண முடிவதில்லை. கிராமத்து மக்களை பார்க்க முடியவில்லை. தார் சாலைகள் இல்லை. உயரமான வேகத்தடைகள் இல்லை. வீட்டு விலங்குகளின் சாலை மறியல் இல்லை.பொட்டிக் கடைகள் இல்லை. பல்லாண்டாக நிழல் கொடுத்த மரங்கள் இல்லை. இன்று இச்சாலையில் நடப்பட்ட மரங்கள் நமக்கு நிழலும், ஆக்ஸிஜனும் கொடுக்கும் வரை நம்மால் காத்திருக்க முடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் என் மனதில் எழுந்தன.
எங்கள் வேலை முடிந்தவுடன் அதே நெடுஞ்சாலையில் மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது. இப்போது எங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும் நேரமும் வந்தது. அந்த நெடுஞ்சாலையில் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 10 கிமீ வரை பெட்ரோல் பம்ப் இல்லையென்று எங்களுக்கு ‘கூகுள்’ வாயிலாக தெரிய வந்தது. எங்களுக்கு அங்கு ஒரு சிறிய கடை ‘நீர் ஆஹார்’ என்ற போர்டுடன் தெரிந்தது. அங்கே வண்டியை நிறுத்தி பெட்ரோல் பம்ப் பற்றிக் கேட்டோம். அங்கிருந்த ஒரு பையன் இன்னும் இரண்டு கிலோ மீட்டர் சென்றவுடன் அங்கு ஒரு ‘ஸ்லிப் ரோடு’ வரும், அதில் செல்லுங்கள், என்றார் அவர்.
நாங்களும் ‘ஸ்லிப் ரோடு’ வழியாக சிறிது நேரத்தில் ஒரு அழகான ‘தெலுங்கானா கிராமத்தை’ சென்றடைந்தோம். அங்கு இருந்த கிராம மக்களைப் பார்த்ததும் என் மனம் மகிழ்ந்தது. அவர்கள் தெலுங்கில் கூறியதை புரிந்துக் கொண்ட என் கணவர் (!) நேராக பெட்ரோல் பம்ப்பிற்கு சென்றார். அங்கு கரெண்ட் இல்லையெனக் கூற அடுத்த பெட்ரோல் பம்ப் 500 மீட்டரில் இருந்தது. அங்கு, நல்ல வேளையாக கரெண்ட் இருந்தது.
ஆனால், கார்டு மெஷின் வேலை செய்யவில்லை. என் கணவரின் நெட்டும் முறுக்கிக் கொண்டது. உடனே, என் மொபைலை பார்த்தேன். எப்போழுதும் முறுக்கிக் கொள்ளும் ‘ இந்தியாவின் அடையாளமாய்’ இருக்கும் நாலெழுத்துக் கொண்ட அரசாங்க நெட்வொர்க் என்னைப் பார்த்து கண் சிமிட்டியது. உடனே, நானும் காரில் இருந்து ஸ்டைலாக இறங்கி, கெத்தாக க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து முடித்தேன். அங்கே மயிலின் அகவல் எங்கள் இருவருக்கும் கேட்டது.
நாங்கள் அதைப் பற்றி விஜாரித்த போது ‘ மோர் இதர் நஹி ஹை’, என்றார், அங்கிருந்த ஊழியர். நாங்களும் அங்கிருந்து கிளம்பிய சிறிது நொடிகளிலேயே அங்கு இருந்த வயலில் ஒரு அழகிய ஆண் மயில் எங்களுக்கு தென்பட்டது. அதை கேமராவில் கைது செய்யப் போன எனக்கு என் காலடியில் நல்ல பாம்பின் தோல் கிடைத்தது.
சிறிது தூரம் நடந்தவுடன் ஒரு முட்டை ஒன்றும் வயல் வெளியில் அனாதையாக கிடந்தது. பின்னர், ஒரு கடையில் தேநீர் அருந்தினோம். அங்கே கிராமத்தினரும் அருமையாய் சமோசாவை சுவைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு பக்கத்துக் கடையில் ‘சைனீஸ் ஃபுட்’ என்று போட்டிருந்த பெயர் பலகையில் இரண்டுப் பக்கமும் வரையப்பட்டிருந்த ‘ட்ராகன்ஸ்’ எங்களை பயமுறுத்தியது.
இவ்வாறாக எனக்கு கிராமத்துக் காட்சிகளை பார்த்ததனால் நான் எதிர்பார்த்த ‘பாரதத்தை’ நேரில் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர், நாங்கள் ‘ஸ்லிப் ரோடு’ வழியாக மீண்டும் நெடுஞ்சாலையில் வந்து இணைந்தோம்.
நெடுஞ்சாலைகளில் பயணப்பவர்கள், பயணிக்கப் போகிறவர்கள் ‘ஸ்லிப் ரோடில்’ போறத ‘ஸ்லிப்’ பண்ணாம நம் பாரத்தின் உயிர்நாடியான கிராமங்களையும் பார்த்து வந்தால் இந்தியாவிற்குள் இருக்கும் பாரதத்தையும் ரசிக்க முடியும் என்பது திண்ணமே.