
திமுக.,வின் ஆஸ்தான தமிழ்க் கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து அடுத்த வாரம் மலேசியாவிற்கு வரவுள்ளார். ஆனால் அவரது வருகைக்கு மலேசிய இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா பாடலாசிரியர் தனது புதிய புத்தகமான ‘தமிழாற்றுப்படை’ நூலை கோலாலம்பூரில் டிசம்பர் 3 ஆம் தேதி மலேசிய இந்திய காங்கிரஸ் (எம்ஐசி) அரங்கில் வெளியிடவுள்ளார்.
வைரமுத்து இந்தியாவில், தமிழகத்தில் ஏற்கெனவே, இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார். முதலாவதாக கடந்த ஆண்டு ஜனவரியில் தமிழகத்தின் முகவரி என்றும், தமிழ் பக்தி இயக்கத்தின் தாய் என்றும் போற்றப் படும் தென்னிந்தியாவின் 12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியாரை அவமரியாதை செய்யும் விதத்தில், ஆட்சேபனைக்குரிய சொற்களைக் கொண்டு பலபேர் கூடிய சபையில் அசிங்கமான உரையை நிகழ்த்தினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார் அன்பர்கள் பலர் கண்ணீர் விட்டுக் கதறினர். ஊடக பலமும், திமுக, ரௌடிகளின் துணையும் கொண்டிருந்த அக்கட்சியின் ஆஸ்தான கவிஞருக்கு எதிராக குரல் எழுப்ப முடியாமல், பலர் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்ததுடன், பின்னர் அறவழிப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப் பட்டும், அறநிலையச் சொத்துகளைக் கொள்ளை அடிப்பதிலும், விற்பதிலும் கவனம் செலுத்திய தமிழகத்தை ஆளும் நாத்திக அதிமுக., அரசு, வைரமுத்துவை மிகவும் ஜாக்கிரதையாகவே பாதுகாத்தது.

இதே போல், கடந்த ஆண்டு அக்டோபரில், பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி ஸ்ரீபிரதா, வைரமுத்து தன்னுடன் மட்டுமல்லாமல், வேறு சில பெண்களிடமும் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதுவும் எவராலும் கண்டுகொள்ளப் படவில்லை. காரணம், இந்த தமிழ்ப் பாடலாசிரியர், திமுக.,வுடன் கொண்டிருந்த நெருக்கமும், பிளாக் மெயில் செய்யும் ரௌடித்தனமும் பலரையும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.
திமுக மற்றும் அதன் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான வைரமுத்து மறைந்த மு.கருணாநிதி மற்றும் இப்போது அவரது மகனும் கட்சியின் தலைவருமான எம் கே ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ளார். மேலும், மலேசியாவில் திமுக., சார்புள்ள நபர்கள் அண்மைக் காலமாக மலேசிய அரசால் கவனிக்கப் படும் நபர்களாக மாறியுள்ள நிலையில், வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு நிகழ்வை மலேசியாவில் இந்த இடத்தில் நடத்த வேண்டாம் என்று மலேசியா இந்து தர்ம மாமன்றம் (மலேசியா இந்து தர்ம மன்றம்) மலேசியன் இந்தியன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளது.
ஆண்டாள் நாச்சியார் குறித்த தனது கருத்துக்கு பல்வேறு போராட்டங்களை முன்னிட்டு வைரமுத்து வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார், ஆயினும் அவர் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை. இதுவே இன்னும் தமிழகத்தில் கனன்று கொண்டிருக்கிறது. அதுபோல், மலேசியாவிலும் வந்து வைரமுத்து தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால், “மீண்டும் போராட்டங்களை” நடத்துவோம் என்று மாமன்றம் எச்சரித்தது.

குறிப்பாக, வைரமுத்துவின் கருத்துக்கள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக மன்றம் கூறியுள்ளது. மலேசிய இந்து அரசு-சாரா அமைப்புகளும் தங்களது நாட்டிற்கு வைரமுத்துவின் வருகைக்கு எதிராக மலேசிய அரசாங்கத்திடம் எதிர்ப்புகளை முன்வைத்துள்ளன.
கடந்த வாரம், பெரியார் என்ற தமிழ் திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக மலேசிய இந்து மாமன்றம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.வீரமணியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. மலேசிய ஹிந்து மாமன்றம் மலேசிய அரசாங்கத்திடம் முறையிட்டதை அடுத்து இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
மலேசியாவின் மக்கள்தொகையில் சுமார் முப்பது லட்சம் தமிழர்கள் உள்ளனர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மலேசிய நாட்டில் பெரிய துணை-இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் மலேசியாவில் உள்ள தமிழர்கள் இந்திய மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்! இதை அடுத்து, சாதி பிளவுகளும் உள்ளன. ஒரு சில மலேசிய தமிழர்கள் சாதீயவாதத்தை எதிர்ப்பதாகவும், திராவிடத்தை ஆதரிப்பதாகவும் கூறி அவர்களை போராளிகள் என்று அழைக்கின்றனர்.

கே வீரமணி அல்லது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்ற திராவிட தலைவர்களையோ அல்லது சீமான் மற்றும் திருமுருகன் காந்தி போன்ற போலி தமிழ் தலைவர்களையோ ஆதரிக்கவில்லை என்று மலேசியத் தமிழர்கள் கூறுகின்றனர்.
ஆண்டாள் சர்ச்சையைத் தொடர்ந்து, வைரமுத்து தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்பதை விடுத்து, யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் மட்டுமே தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். யார் மனதும் காயப் படுத்தப் படாமல் இருந்தால் அவர்கள் ஏன் மன்னிப்பு கேட்குமாறு அந்தப் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்? அந்த வகையிலேயே, அவர் அந்த மக்களின் மன உணர்வுகளைக் கொச்சைப் படுத்திவிட்டார். தனது கருத்துகள் எவர் மனதையும் காயப் படுத்தவில்லை என்ற வகையில் தனது செயலை நியாயப் படுத்தியிருந்தார்.
அப்போது, இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இருந்து ஒரு வாக்கியத்தை மட்டுமே தாம் மேற்கோள் காட்டியுள்ளதாகவும், அது தமது கருத்து இல்லை என்றும் பின்னர் சமாளித்தார். ஆனால், அப்படி ஒரு மேற்கோள் அந்த ஆராய்ச்சியில் இல்லை என்பது பின்னர் தெரியவந்த போது, மீண்டும் விழி விழி என விழித்தார் வைரமுத்து.
எவ்வாறாயினும், வைரமுத்து தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முயன்றார். ஆரம்பத்தில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ என்றும், பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியவர்கள் மீது நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் கூறி வந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, தனக்கு எதிராகப் பரவியிருக்கும் பொய்களைப் பற்றி தாம் கவலைப்பட போவதில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களை இழிவு படுத்தினார். தனக்கு எதிரான குற்றச்சாட்டு, “பிரபலமான ஆளுமைகளை இழிவுபடுத்தும் கலாச்சாரத்தின் அங்கம் என்று கதைத்தார்.
துரதிருஷ்டவசமாக சின்மயி மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த பெண்களுக்கும், தவறான பாலியல் நடத்தை குறித்த #Metoo இயக்கத்தில் புகார் அளித்தவர்களுக்கும் ஆதரவாகவோ, அவர்களின் புகார்களைக் காது கொண்டு கேட்கவோ, தமிழ்த் திரை உலகம் சற்றும் முன்வரவில்லை என்பதில் இருந்தே, தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களின் ஒழுக்க நிலை அப்போதே சந்தி சிரித்தது.
இவ்வளவு நடந்தும், தமிழக அரசும் நீதித்துறையும் சட்டம் ஒழுங்கு சரியாகத்தானே இருக்கிறது என்று கூறி, வைரமுத்து போன்றவர்களுக்கு எதிரான எந்த புகார்களையும் விசாரிக்கவோ, அபராதம் விதித்தல், அல்லது தண்டனை தருதல் என்ற விதத்திலோ சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், மலேசியாவில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் பக்தி சிரத்தை மிகுந்த இந்துக்கள் தங்கள் ஆன்மிக இயக்கத்துக்கு எதிரான கொள்கை கொண்ட இது போன்றவர்களை தங்களது நாட்டுக்குள் நுழைந்து விஷக் கருத்துகளாக உமிழ்வதைத் தடை செய்ய முன்னணியில் நிற்கின்றனர்.
மலேசிய அரசு கடவுளை நம்புவது என்றும், அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து முழுமையான ஒற்றுமையை விரும்பும் அரசியலமைப்பு கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டி, இவர்கள் போன்றவர்கள் மலேசியாவின் அடிப்படை ஆதார நாதத்தையே கேள்விக் குள்ளாக்கும் சதிகாரர்கள் என்பதையும் எடுத்துக் காட்டி வருகின்றனர்.
இதனால், தற்போது கி.வீரமணியைத் தொடர்ந்து, வைரமுத்துவின் நிகழ்ச்சியும் ரத்தாகும் என்று கூறப் படுகிறது.



