மெக்ஸிகோவைச் சேர்ந்த 46 வயதான நபர் எரிக் ஃபிரான்செஸ்கோ ரோப்லெடோ , இவரின் இரண்டாவது மனைவி 25 வயதான இங்க்ரிட் எஸ்கமில்லா இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை, சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகுந்த குடிபோதையில் வீட்டுக்கு வந்த எரிக் தன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான சண்டை உச்சத்தை எட்டியுள்ளது.
கணவரின் தொல்லை தாங்காமல் அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் மனைவி எஸ்கமில்லா. இதைக் கேட்டு இன்னும் அதிக கோபடைந்த எரிக், என்னை கொலை செய் என்று கூறிக்கொண்டே சமையல் செய்ய உதவும் கத்தியை எடுத்து வந்து மனைவியைக் குத்தியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே விழுந்து எஸ்கமில்லா உயிரிழந்துள்ளார். அளவுக்கு அதிகமான குடிபோதையிலிருந்த எரிக், அப்போதும் ஆத்திரம் அடங்காமல் தன் மனைவியின் உடலை மறைக்க முயன்று அவரது உடலில் தோலை மட்டும் தனியாக வெட்டி எடுத்துள்ளார். பின்னர் உடல் பாகங்கள், உடல் உறுப்புகளை வெளியில் எடுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இறுதியாக அனைத்து உடல் பாகங்களையும் தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஏரியில் போட்டு மறைத்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்து கொலை நடந்த தடம் தெரியாமல் அழித்துள்ளார். அனைத்தையும் செய்துவிட்டுத் தான் எப்படிக் கொலை செய்தேன் என்பதைத் தன் முதல் மனைவிக்குப் போன் செய்து கூறியுள்ளார் எரிக்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், எரிக்கை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் மனைவியின் உடலை வீசிய ஏரியையும் அடையாளம் காட்டியுள்ளார். பின்னர் காவலர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் மிகவும் சிதைந்த நிலையிலிருந்த எஸ்கமில்லாவின் உடலைத் தடயவியல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்து பத்திரிகைக்குக் கொடுத்துள்ளனர்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகைகளும் தங்கள் அட்டைப் பக்கத்தில் அந்தப் பெண்ணின் கொடூர புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மெக்ஸிகோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களைக் கொதிக்க வைத்துள்ளது.
ஒரு பெண்ணின் மிகவும் கொடுமையான புகைப்படத்தை எப்படி வெளியிடலாம் என்றும், இந்தக் கொடுமைக்குக் காரணமானவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பல ஆயிரக்கணக்கானவர்கள் மெக்ஸிகோ சாலைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. `எஸ்மில்லாவின் கொடூர புகைப்படத்தைச் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக சில அருமையான புகைப்படங்களை எஸ்கமில்லாவின் பெயரில் வெளியிடுகிறோம்’ என்று நெட்டிசன்கள் இயற்கை, பூ போன்ற புகைப்படங்களுடன் எஸ்கமில்லாவின் பெயரை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.
க்ஸிகோவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3,142 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 10 பெண்கள் வீதம் அங்கு கொலை செய்யப்படுவதாக பெண்ணிய அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் கொடூர குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.