இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய மக்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இங்கிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களால் கொரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது.
வரும் 15-ம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிஸன் தலைமையில் சூழலை ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது முடிவு செய்யப்படும்.
பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையில் நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் திங்கள்கிழமை முதல் இந்த நடவடிக்கை அமலாகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகிலேயே இதுவரை இல்லாத வகையில் 4 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள நிலையை அறிந்து அங்கிருந்து ஆஸ்திரேலிய மக்கள், தங்கள் தாய்நாட்டுக்குச் சென்று அங்கு கொரோனா வைரஸைப் பரப்பிவிடும் சூழல் இருக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்களை இயக்கவும் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய மக்களுக்கு கடும் கிடுக்கிப்பிடியை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹன்ட் கூறியதாவது:
‘வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள குடிமக்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வருவோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால், இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு மீறி வருவோர் மீது பயோ-செக்யூரிட்டி சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறையும், 300 டாலர் அபராதமும் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்தும் விதிக்கப்படும்.
வரும 15-ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் பிரதமர் மோரிஸன் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். அப்போது சூழலை ஆய்வுசெய்து இந்தத் தடை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்
ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களின் உடல்நலத்தையும் காக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தனிமைப்படுத்தும் முகாமில் இருப்போர் எண்ணிக்கையும் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர்’. இவ்வாறு கிரேக் ஹன்ட் தெரிவித்தார்.