
ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 29.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வெள்ளிக் கிழமையன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையே ஷார்ஜாவில் நடைபெற்றது. பூவாதலையாவில் வென்ற வங்கதேச அணி மே அணியை மட்டையாடச்சொன்னது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் இந்த ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை. அவர்கள் அணி பந்துவீசும்போது அவர்களின் ஃபீல்டிங்கும் மிகவும் சுமார். நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் அடித்த 40 ரன்னும் ஆண்ட்ரூ ரசல் வீசிய கடைசி ஓவரும் அவர்களுக்கு வெற்றியைத் தந்தன.
கடைசி ஐந்து ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஏழு சிக்ஸர்கள் அடித்தனர். அதற்கு முன்னர் எதுவும் அடிக்கவில்லை. பூரன் நாலு, ஹோல்டர் இரண்டு, பொலார்ட் ஒன்று என சிக்சர்கள் விளாசினர். இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 142 ரன் எடுத்தது. வங்கதேச அணியும் நான்கு முறை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களை ஆட்டமிழக்கசெய்யும் வாய்ப்பைத் தவறவிட்டனர்.
வங்கதேச அணியில் ஷகீப் பந்துவீசும்போது காயமடைந்தார். எனவே அவர் பவர்ப்ளேயில் அடித்து விளையாடட்டும் என தொடக்கவீரராக மட்டையாட அனுப்பினர். நாலாவது ஓவரில் ஷகீப் அவுட்டானார். அப்பொது லிட்டன்தாஸ் ஆடவந்தார். அவர் 19ஆவது ஓவர் முடிவில் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இடையில் ஆடவந்தவர்கள் சரியாக ஆடவில்லை. கடைசி ஓவரை ரசல் வீச வந்தபோது வங்கதேச அணிக்கு 13 ரன் தேவைப்பட்டது. ஆனால் ரசல் சிக்சர், ஃபோர் முதலியவை அடிக்கவிடாமல் 9 ரன் கொடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று மட்டையாட முடிவுசெய்தது. பவர் ப்ளேயான முதல் ஆறு ஓவர்களில் அந்த அணி நாலு விக்கட்டுகள் இழந்து 49 ரன் எடுத்தது. அணித்தலைவர் முகம்மது நபி 35 ரன்னும் குல்பதீன் நயீப் 35 ரன்னும் அடித்ததால் ஆப்கானிஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது.
பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடியது. விரைவில் ஆட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் ஆப்கன் அணியின் முஜீபுர் ரஹ்மான் நாலு ஓவர் வீசி 14 ரன் கொடுத்து ஒரு விக்கட் வீழ்த்தினார். ரஷீத் கானும் முதல் மூன்று ஓவர்கள் சிறப்பாக பந்து வீசினார். பத்தொன்பதாவது ஓவரை கரீம் ஜனத் பாகிஸ்தான் வீரர் அசிபலிக்கு வீச வரும்போது பாகிஸ்தான் அணி 12 பந்துகளில் 24 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அச்சியலி முதல் பந்து, மூன்றாவது பந்து, ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளில் நாலு சிக்சர் அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இந்த வெற்றியோடு அநேகமாக பாகிஸ்தான் அணி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுவிட்டது எனவே சொல்லலாம்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் தென ஆப்பிரிக்க-இலங்கை அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் முதல் ஆட்டம். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே துபாயில் இரண்டாவது ஆட்டம்.