
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டில் பிரபலம் ஆனவர் என்பதால், தமது கட்சியில் வந்து சேர்ந்துவிடும்படி இஸ்ரேல் பிரதமர் பென்னட் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாரதப் பிரதமர் மோடி உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்த உச்சி மாநாட்டின் இடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசி வருகிறார். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை மோடி இன்று சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே இருவரும் தோள் மீது கையைப் போட்டபடி இயல்பாக பேசிக்கொண்டிருந்த வீடியோவை மோடி பகிர்ந்திருந்தார்…
இந்நிலையில் இன்றைய இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிப் பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்… வாருங்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். இதைக் கேட்டு பிரதமர் மோடி கலகல வென சிரித்தார்.
அவர்களது பேச்சால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.
முன்னாள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் உள்ளார்ந்த நட்புறவைப் பேணினார் பிரதமர் மோடி. தற்போது, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக சந்திக்கிறார்.