இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – மூன்றாவது நாள்
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-
ஆட்டநேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸ் 202 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 266 ரன் (புஜாரா 53, ரஹானே 58, விஹாரி 40, தாகூர் 28) தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் 229 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 118/2 (எல்கர் 46*, மர்க்ரம் 31).
தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னமும் 122 ரன்கள் தேவை. இரண்டு நாட்கள் ஆட்டம் மீதியுள்ளது. இன்றைய ஆட்டத்தைத் தொடங்கிய புஜாராவும் ரஹானேயும் விறுவிறுப்பாக ஆடினார்கள்.
இன்றோடு மூன்று நாள் ஆட்டம் பாக்கியிருக்கும் நிலையில் டெஸ்ட் மேட்ச் வல்லுநர்களான இவர்கள் இருவரும் விக்கட்டைத் தக்கவைத்துக்கொண்டு அதிக நேரம் ஆடியிருக்கவேண்டும். முதல் செசஷன் ஆட்டத்திற்குப் பிறகு முதலில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் புஜாரா அவுட்டானார்.
பந்த் ரபாடாவின் பந்து ஒன்றை தூக்கி அடிப்பதற்காக இறங்கி ஆடினார். ஆனால் அந்த பந்து விக்கட்கீப்பரிடம் கேட்சாய் முடிந்தது. விஹாரி ஒருபக்கம் கட்டை போட்டுக்கொண்டிருக்க மறுபுறம் விக்கட்டுகள் விழுந்துகொண்டிருந்தன.
ஒருகட்டத்தில் இன்னிங்ஸ் முடிந்துவிடுமோ என நினைத்து விஹாரி சில டமால்-டுமீல் ஷாட்டுகள் ஆடினார். அதனால் ஸ்கோர் 266 வரை வந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்த தெனாப்பிரிக்க வீரர்கள் பயமின்றி தங்கள் ஷாட்டுகளை ஆடினர்.
ரன்ரேட் 4.5க்கு மேல் போய்க்கொண்டு இருந்தது. பின்னர் அஸ்வின், ஷர்துல் தாகூர் இருவரும் பந்து வீச வந்தபின்னர் ரன்ரேட் குறைந்தது. நாளை என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.
122 ரன்னுக்குள் இந்திய அணியின் பவுலர்கள், குறிப்பாக ஷமி, பும்ரா, தாகூர் ஆகிய மூவரும் தென் ஆப்ப்ரிக்க அணியை ஆல் அவுட் ஆக்கவேண்டும். இல்லையென்றால் வெற்றி தென் ஆப்பிரிக்க அணிக்குத்தான்.