இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி
– கே.வி. பாலசுப்பிரமணியன் –
இந்தியாவின் பந்துவீச்சுத் திறமை
ஓவல் மைதனத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி (25.2 ஓவரில் 110 ஆல் அவுட், ஜாஸ் பட்லர் 30, டேவிட் வில்லி 21, பும்ரா 6/19, ஷமி 3/31) இந்திய அணியிடம் (18.4 ஓவரில் விக்கட் இழப்பின்றி 114, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 31) பத்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியில் விராட் கோலி காயம் காரணமாக இன்று ஆடவில்லை. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னார். ஜானி பெயர்ஸ்டோவும் ஜேசன் ராயும் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கினர். முதல் ஓவரை முகம்மது ஷமி வீசினார். இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜேசன் ராய் கிளீன் போல்ட் ஆனார். அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஜோ ரூட் விக்கட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார்.
பும்ரா தனது மூன்றாவது ஓவரில் பெயர்ஸ்டோவை அவுட்டாக்கினார். தன்னுடைய அடுத்த ஓவரில் லிவிங்க்ஸ்டோனை ஆட்டமிழக்கச் செய்தார். எனவே எட்டாவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 26 ரன் எடுத்திருந்தது. பும்ரா 4 ஓவர், 2 மெய்டன், 6 ரன், 4 விக்கட் எடுத்திருந்தார். பும்ராவின் ஐந்தாவது ஓவரில் மொயின் அலி கொடுத்த ஒரு கஷ்டமான கேட்சை ரிஷப் பந்த் பிடிக்கவில்லை.
அதன் பின்னர் இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 25.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 110 ரன் எடுத்தது. பும்ரா 7.2-3-19-6 என்ற ஓவர் கணக்கோடு இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த ரன் கொடுத்து அதிக விக்கட் எடுத்த பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த 6/23 சாதனையாக இருந்தது.
111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாட வந்த இந்திய அணி, முதல் பந்தில் ஷிகர் தவான் விக்கட்டை ரன் அவுட்டில் இழந்திருக்கும். நல்லவேளை அதிர்ஷ்டம் தவான் ஆட்டமிழக்கவில்லை.
தவானும் (54 பந்துகள், 31 ரன்) ரோஹித்தும் (58 பந்துகள், 76 ரன்) 18.4 ஓவரில் 114 ரன் எடுத்து வெற்றி இலக்கை எளிமையாக அடைந்தனர். ரோஹித் ஐந்து சிக்சர்கள், ஏழு பவுண்டரிகள் அடித்தார்.
கால் திசையில் அவர் அடித்த சிக்சர்கள் அனைத்தும் பிரமாதம். பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்த போட்டி 14 ஜூலை லார்ட்ஸ் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும்.