
<- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ->
காலிறுதி ஆட்டங்களில் இரண்டு பெரிய அணிகள் வெளியேறியுள்ளன. பிரேசில், போர்ச்சுகள் ஆகிய அணிகள் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. அரையிறுதிக்கு குரேஷியா, அர்ஜெண்டைனா, மொராக்கோ, பிரான்சு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதல் காலிறுதி ஆட்டம் – பிரேசில் vs குரேஷியா – பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த குரேஷியா
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 09.12.2022 அன்று இரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனும், முதல் வரிசை அணிகளில் ஒன்றான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.
பரபரப்புக்கு பஞ்சமில்லதாக இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக போராடின. இதனால், பதற்றமும், எதிர்பார்ப்பும் அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அடுத்த பாதியிலும் கோல் அடிக்கவில்லை. பின்னர் ஆட்டம் மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது 105ஆவது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடித்து மிரட்டினார். ஆனால், அவர்களின் குஷி ஆட்டம் சிறிது நேரத்தில் அடங்கிப்போனது.
குரேஷியாவின் புருனோ பெட்கோவிச் 116ஆவது நிமிடத்தில் பந்தை பிரேசிலின் வலையில் தள்ளவே, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. இறுதி முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டுவரப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோல் அடித்து மிரட்டியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. இதனால், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2ஆவது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கோப்பைபை வெல்லும் கனவொடும், வாய்ப்போடும் இருந்த 5 முறை சாம்பியன் பிரேசில் கால்இறுதியிடன் நடையைக் காட்டியுள்ளது.
உலக கால்பந்து அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் பிரேசில் 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 என 5 முறை ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2002ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி உலகக் கோப்பை தேடலில் இருந்து வரும் நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் அந்த தேடலுக்கு முடிவு எழுதுவார் என்று ரசிகர்கள் பெருங்கனவுடன் இருந்தனர். இந்த நிலையில், காலிறுதியில் குரோஷியாவிடம் அதிர்ச்சி தோல்வி பெற்று விடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய்மர் கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டபட்ட நிலையில், அவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இரண்டாவது காலிறுதி ஆட்டம் – அர்ஜெண்டைனா vs நெதர்லாந்து – அரை இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா
உலக கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா, நெதர்லாந்து அணிகள் 09.12.2022 இரவு மோதின. நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில், 35ஆவது நிமிடத்தில், அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது. 2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கான 2ஆவது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83ஆவது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இடையில் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11ஆவது நிமிடத்தில் வெக்ஹோர்ஸ்ட் மீண்டும் இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார். அடுத்து தரப்பட்ட 30 நிமிட கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இந்த ஆட்டத்தில் இரு அணி வீரகளுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அர்ஜெண்டைனா வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மூன்றாவது காலிறுதி ஆட்டம் – போர்ச்சுகல் vs மொராக்கோ – போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி
மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மொராக்கோ அணி இந்தத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. தோகாவில், அல்துமாமா மைதானத்தில் 10.12.2022 அன்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.
நான்காவது காலிறுதி ஆட்டம் – இங்கிலாந்து vs பிரான்சு – நடப்பு சாம்பியன் பிரான்சு வெற்றி
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 10.12.2022 அன்று நள்ளிரவு நடைபெற்ற நாலாவது காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இடையில் ஆட்டம் தடைப்பட்டதற்காக வழங்கப்பட்ட கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டங்கள்
டிசம்பர் 13ஆம் நாள் அர்ஜெண்டைனா-குரேஷியா அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. 14 டிசம்பர் அன்று பிரான்சு- மொராக்கோ அரையிறுதி ஆட்டம் நடக்கவுள்ளது.