இலங்கை, கண்டி மாவட்டத்தின் கண்டி காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமல் படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்கு உத் தரவு இன்று காலை 6 மணியுடன நீக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கலவரம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்து சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினமும், நேற்றும் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற கலவரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி தெல்தெனிய பகுதியில் ரோந்து வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் ஒரு வண்டியில் சென்ற சிலரால் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படும் காட்சி, அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மறுநாள் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முதல் தெல்தெனிய நகர் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கலவரக்காரர்களில் சிலர், நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவற்றுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நேற்று பிற்பகல் சிலர் தெல்தெனிய பகுதிகளில் மீண்டும் கலவரத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்
இதனிடையே கண்டி – திகன பகுதில் நேற்று நடைபெற்ற கலவரச் சம்பவம் தொடர்பாக, நடுநிலையான சுதந்திரமான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அங்கே பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக சிறப்பு செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.



