டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 21 ஜூன் மற்றும் 22 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை 22.06.2024 வரை
குரூப் 1 | குரூப் 2 | |
A | இந்தியா 4 | அமெரிக்கா 0 |
B | ஆஸ்திரேலியா 2 | இங்கிலாந்து 2 |
C | ஆஃப்கானிஸ்தான் 0 | மேற்கு இந்தியத் தீவுகள் 0 |
D | வங்கதேசம் 0 | தென் ஆப்பிரிக்கா 2 |
ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
21.06.2024 அன்று நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் (140/8), ஆஸ்திரேலிய (100/2) அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் – லூயிஸ் முறைப்படி 28 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. ரசிகர்களை குஷிப்படுத்தும் அத்தனை அம்சங்களும் நிறைந்த ஆட்டம் இது. ஆட்டம் மழையால் இரண்டாவதாக ஆஸ்திரேலிய அணி ஆடும்போது 11.2 ஓவரில் நிறுத்தப்பட்டது. அதற்குள் அந்த அணியின் டேவிட் வார்னர் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ட்ராவிஸ் ஹெட் (21 பந்துகளில் 31 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) கிளன் மேக்ஸ்வெல் (6 பந்துகளில் 14 ரன், ஒரு ஃபோர், ஒரு சிக்சர்) ஆகியோர் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடினர். அதற்கு முன்னர் வங்கதேச இன்னிங்க்ஸின்போது பேட் கம்மின்ஸ் 18ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கட்டுகளையும் 20ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு விக்கட்டையும் எடுத்து ஹாட்ரிக் அடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் vs அமெரிக்கா
21ஆம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் (130/1) அமெரிக்க (128) அணிகளுக்கு இடையே ப்ரிட்ஜ்டவுனில் ஆட்டம் நடந்தது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிவந்த அமெரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் உண்மையான ஒரு கிரிக்கட் அணியைச் சந்தித்தது. டாஸ் வென்று முதலில் அமெரிக்க அணியை முதலில் மட்டையாடச் சொன்னது மேற்கு இந்தியத்தீவுகள் அணி. அமெரிக்க அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. ஆனால் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 10.5 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 130 ரன் அடித்தி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தியா vs வங்கதேசம்
இன்று 22.06.2024 அன்று நார்த் சவுண்ட் மைதானத்தில் இந்தியா (195/6) வங்கதேச (146/8) அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வங்கதேச அணி விநோதமாக முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 6 ரன் என குறைவான ரன் எடுத்தார். மற்ற வீரகளான ரோஹித் ஷர்மா (11 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), விராட் கோலி (28 பந்துகளில் 37 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ரிஷப் பந்த் (24 பந்துகளில் 36 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (24 பந்துகளில் 34 ரன், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (27 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடி 20 ஓவரில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுக்க வைத்தனர்.
அதன் பின்னர் ஆடவந்த வங்கதேச அணி பும்ராவையும் (4 ஓவர், 13 ரன், 2 விக்கட்) குல்தீப் யாதவையும் (4 ஓவர், 19 ரன், 3 விக்கட்) சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.
போட்டி எதிர்பார்த்த முறையில் போய்க்கொண்டிருக்கிறது. சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தேர்ச்சிபெறும்; குரூப் 2இல் தென் ஆப்பிரிக்காவும் மேற்கு இந்தியத் தீவுகளும் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.