சித்திரை மாத அமாவாசை நாளில் (4.5.2018) “பத்தாவது இராமன்” (Rama X) என்கிற புதிய பெயருடன் தாய்லாந்தின் மன்னராக மகா வஜ்ரலாங்கோர்ன் முடிசூடியிருக்கிறார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சோழ மன்னர்கள் முடிசூடும் அதே வழக்கத்தை பின்பற்றி, தாய்லாந்தின் முடிசூட்டு விழா நடந்துள்ளது வியப்பளிக்கக் கூடியது ஆகும்.
தாய்லாந்து நாட்டில், சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னார் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது. இதே நடைமுறை சிதம்பரம் கோவிலிலும் உள்ளது!
இந்த வியப்பளிக்கும் நிகழ்வு குறித்து விரிவாக காண்போம்!
பல்லவ, சோழ மன்னர் மரபு
தாய்லாந்து ஒரு புத்தமத நாடாக இருந்தாலும், சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர்.
சோழ மன்னர்கள் முடிசூடிக்கொண்ட அதே வழியில் சிதம்பரம் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடுவது வழக்கம். முடிசூட்டு விழாவின் போது, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பொற்கூரையில் இருக்கும் “பஞ்சாட்சரப் படியில்” பிச்சாவரம் மன்னர் பரம்பரையினரை அமரவைத்து, நடராஜருக்கும் அபிஷேகம் செய்யும் வலம்புரி சங்கால் “திருஅபிஷேகம்” செய்தபிறகு, ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று ஆத்தி மாலை சூடி புலிக்கொடி கொடுத்து தில்லைவாழ் அந்தணர்கள் மன்னருக்கு முடிசூட்டுவார்கள்.
1943 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகாராஜா ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு நடைபெற்ற முடிசூட்டு விழா குறித்து 21.8.1943 இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் “தில்லை பொது தீட்சிதர் அவர்களால் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும் பட்டாபிசேகமும் நிறைவேறின” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சங்காபிஷேகமும் பட்டாபிஷேகமும் தான் தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிலும் முதன்மை பெறுகிறது.
- “ராஜ அபிஷேகம்”
“நடராஜர் சிலை”: தாய்லாந்து நாட்டில் மன்னர் முடிசூடுவதற்கு முன்பு நடராஜர் சிலை முன்பாக தீ வளர்த்து வழிபாடு செய்யப்படுகிறது. இதே நடராஜர் சிலை முன்பு தான் சிதம்பரத்தில் ராஜ அபிஷேகம் நடக்கிறது. இந்த நிகழ்வு சிதம்பரத்தில் 1943 ஆம் ஆண்டு ஆண்டியப்ப சூரப்ப சோழனார் முடிசூட்டு விழாவின் போது பாடப்பட்ட வாழ்த்துப் பாடலில் “அஞ்சேல் எனநடம் ஆடும் இறைவன்முன்” என்று குறிப்பிட்டுள்ளது.
“வலம்புரி சங்கு”: இந்தியாவின் ஐந்து புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரினை, வலம்புரி சங்கால் ஊற்றி மன்னருக்கு அபிஷேகம் நடத்த வேண்டும் என்பது தாய்லாந்து மரபாகும். ஆனாலும், தற்காலத்தில் தாய்லாந்து நாட்டின் அனைத்து ஆறுகளில் இருந்தும் புனித நீரைக் கொண்டுவந்து வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்த ராஜ அபிஷேக மரபு, சிதம்பரத்தில் 1943 ஆம் ஆண்டு வாழ்த்துப் பாடலில் “வலம்புரி சாங்கால் கங்கைநீர் பெய்து” என்று குறிப்பிட்டுள்ளது.
1943 ஆம் ஆண்டு வாழ்த்துப்பா:
“பஞ்சாக் கரத்திருப் படிமிசை யமர்த்தி
அஞ்சேல் எனநடம் ஆடும் இறைவன்முன்
வலம்புரிச் சாங்கால் கங்கைநீர் பெய்து
நலம்பெற திருஅபி டேகம் செய்த பின்
தேவரு முனிவருந் திருவுளங் கனிய
பூமக ளிலங்கு பொன்மணி மண்டபத்
தரிஆ சனத்தில் அரசனை யமர்த்தி
பிரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி
முடிதனை முனிவர் திருக்கரத் தேந்தி
சூடினர்! வாழ்த்திச் சோழனார் தமக்கே!”
- “பட்டாபிஷேகம்”
ராஜ அபிஷேகம் முடிந்த பின்னர் – தாய்லாந்தில் மன்னருக்கு முட்சூட்டுவிழா நடக்கிறது. தாய்லாந்து மன்னர் ஒன்பது படிநிலை வெண்கொற்ற குடையின் கீழ் முடிசூடுகிறார். மன்னருக்கு அளிக்கப்படும் முதன்மை பொருட்களில் வெண்சாமரமும் வீரவாளும் இருக்கிறது.
சிதம்பரத்தில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற முடிசூட்டு விழாவிலும் கிரீடம், குடை, வீரவாள், வெண் சாமரம் ஆகியன மன்னரின் அடையாளமாக வழங்கப்பட்டன. இதனை வாழ்த்துப்பா பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“ஆண்டு சுபானு ஆவணி மூன்றில்
தண்டிகை யூர்ந்து தக்கோர் சூழ
வெண்குடை நிழலில் வெண்சா மரமும்
ஆண்டகை மார்பில் ஆத்தியும் திகழ
…………
இத்தகு விருதுடன் ஏந்தல் வலமாய்”
- “மன்னர் பவனி”
முடிசூடல் நிகழ்வின் கடைசி நிகழ்வாக – மன்னர் நகர்வலமாக வந்து மக்களுக்கு காட்சி தருவது வழக்கம் ஆகும். சிதம்பரம் நகரில் சோழ மன்னர்கள் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வருவார்கள்.
இத்தகைய ஒரு மன்னர் பவனி 1908 ஆம் ஆணடு சாமிதுரை சூரப்ப சோழனார் முடிசூட்டு விழாவில் நடைபெற்றது குறித்து வித்துவான் பசுபதி நாயகர் என்பவர் எழுதியுள்ள குறிப்பில் “இரவு 9 மணிக்கு சிதம்பர தேவாலய மாடவீதி முழுமைக்கும் வாஷிங்டன் லயிட்டுகள் எனும் ஸ்தம்ப தீபங்கள் பிரகாசித்தன. ஆங்காங்கு கம்ப பாணங்களும் புதைக்கப்பட்டிருந்தன… புஷ்பப் பல்லக்கிலே ஆகாயவெடி பாணங்கள் தம்தம் என ஒலிக்க, அதிர்வெடி படீல் படீலென்று ஒலிக்க அநேகர் தீவட்டி மத்தாப்பு, புரூஸ், சைனாப்பெட்டி முதலிய பாண வேடிக்கைகளோடும் அச்சிதம்பர ஆலய மாடவீதியில் நமது சாமிதுரை சூரப்ப சோழனார் பவனி வந்த காட்சி யாவர்க்கும் வியப்பையும் பேரானந்தத்தையும் கொடுத்தன” என்று எழுதியுள்ளார்.
அதே போன்று தாய்லாந்து மன்னர் திருவீதி உலா இன்று (5.5.2019) மாலை பாங்காக் நகரில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ளது.
தாய்லாந்து: முடிசூடலும் தமிழும்
தாய்லாந்து முடிசூட்டு விழாவின் போது மன்னரில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது. தாய்லாந்து அரசரின் அரண்மணையில் இந்த பாடல்கள் பழங்கால தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மந்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக;
“தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே”
– எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,
“பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள்
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே”
– எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
அதாவது, தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டிக்கொண்ட முறைக்கு இணையாக, தாய்லாந்து மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். அதுவும் தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் ஒலிக்க – அதன் பொருளோ, மொழியோ தெரியாமலேயே – தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழா நடக்கிறது. தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் காதில் விழுந்த பின்னரே, மனிதராக இருக்கும் மன்னர், இறைவனாக அவதாரமெடுக்கிறார் என்பது தாய்லாந்து நாட்டின் நம்பிக்கை ஆகும்.
வழிவழியாக முடிசூடல் வழக்கம்
சிதம்பரத்தில், 1892-ல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், 1908-ல் சாமித்துரை சூரப்ப சோழனார், 1911-ல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943-ல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், 1978-ல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் ஆகியோர் சிதம்பரம் கோவிலில் சோழ மன்னர்களாக முடிசூட்டப்பட்டனர். இது பல்லவர், சோழர் காலத்தில் இருந்து தொடர்வது ஆகும்.
அதே வழக்கத்தை பின்பற்றி தாய்லாந்து நாட்டில் 1785, 1809, 1824, 1851, 1873, 1911, 1926, 1950 ஆகிய ஆண்டுகளில் முடிசூட்டு விழா நடந்துள்ளது. தற்போது 2019 மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்களில் மகா வஜ்ர அலங்காரன் முடிசூடும் விழா நடக்கிறது.
தமிழ்நாட்டின் மன்னர்கள் பின்பற்றிய அதே முடிசூடல் வழக்கத்தை இப்போதும் தாய்லாந்து நாட்டின் அரசர்கள் பின்பற்றுவது வியப்பளிக்க கூடியது ஆகும். இந்த வழக்கம் தாய்லாந்து நாட்டில் கடந்த 800 ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுவதாக அந்த நாட்டின் வரலாறு கூறுகிறது.
தமிழர் பண்பாடு, தமிழர் மரபு தெற்காசியா முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு தாய்லாந்தின் முடிசூடல் விழா ஒரு ஆதாரம் ஆகும்.
குறிப்பு: தாய்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ இதிகாசத்தின் பெயர் ‘ராமாகியான்’. இது தமிழ் கம்பராமாயணத்தின் தாய் மொழி தழுவல் ஆகும். தாய்லாந்து மன்னர்களின் முன்னாள் தலைநகரம் அயோத்தியா. அந்த நாட்டின் மன்னர்கள் இராமன் என்றே பெயர் சூட்டப்படுகின்றனர். அந்த வகையில் தற்போதைய மன்னர் ‘பத்தாவது இராமன்’ (Rama X) ஆகும்!
- இர. அருள்





ஆடாத இடமேத௠சிதமà¯à®ªà®° நடராஜரà¯
ஆடாத இடமேத௠?