தேர்தல் தில்லுமுல்லு! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழகம் பொது தகவல்கள்
stalin - 2026

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுந்தரப்பு தில்லுமுல்லுகளை அரங்கேற்ற முயற்சிக்கும் என்றும், இறுதிவரை கவனமுடன் இருந்து வெற்றியை உறுதியோடு செய்ய வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தையும் காவல்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மோசடிகளையும் முறைகேடுகளையும் அரங்கேற்றி வாக்குகளை விலைக்கு வாங்க ஆளுந்தரப்பு ஆரம்பம் முதலே திட்டமிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 அன்று நடைபெறவிருக்கிறது. அப்போது தி.மு.கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இன்னும் கூடுதலான விழிப்புடன் இருந்து, வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் நமது கூட்டணிக்குச் சேர்த்திட வேண்டிய பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றுள்ள தேர்தல் என்பதால், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களை இடைவிடாது கூர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குப் பிறகு, மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் இருந்த மையத்தின் பாதுகாப்பான அறைக்குள்ளேயே ஆட்கள் நுழைந்த நிகழ்வுகளை மறந்திட முடியாது.

இப்போது நடைபெறுவது மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஊராட்சித் தேர்தல். முன்பைவிட கூடுதல் கண்காணிப்புடன் கழகத்தினர் இருந்திடல் வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களுக்குக் கூடுதலான பாதுகாப்பு அளித்து, வாக்கு எண்ணிக்கை நடுநிலையுடன் முறையாக நடைபெறுவதற்காக கழகத்தின் சட்டத்துறை நீதிமன்றத்தின் துணையை நாடியுள்ளது.

மோசடிகளையும் முறைகேடுகளையும் தகர்த்தெறிந்து உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நாம் பெறப்போகும் வெற்றி என்பது நாளைய நல்லாட்சிக்கான முன்னோட்டமாகும்.

அதனால் இரண்டாவது கட்டத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, ஒன்றியக் கவுன்சில்-மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்வு என இறுதி வரை கவனம் செலுத்தி, வெற்றியை உறுதி செய்வோம்.
.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.