புது தில்லி: 2012ல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவனாக முன்னிறுத்தப் படுவேன் என நான் நம்பினேன் என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் லான்ஸ் பிரைஸ். இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ‘மோடி விளைவு: இந்தியாவை மாற்ற நரேந்திர மோடியின் பிரசாரம்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், மோடி, பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரிடம் பேட்டி எடுத்துள்ளார். அவர்களிடம் பேசியபோது பெற்ற தகவல்களை வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, மோடியின் மனநிலை குறித்து பேட்டியாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி, ‘தேர்தல் முடிவு வெளியான நாள் (16-5-2014) அன்று காலை, நான் டி.வி. எதுவும் பார்க்கவில்லை. ஒரு தனி அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். 12 மணிக்குப் பிறகே தொலைபேசி அழைப்புகளையும் எடுத்தேன். அவ்வாறு நான் முதலில் ஏற்றுக்கொண்ட தொலைபேசி அழைப்பு ராஜ்நாத் சிங்கிடமிருந்து வந்தது. அவர் என்னிடம் ஏற்கெனவே எதிர்பார்த்தது போல, நாம் வெற்றி பெறும் நிலையில் உள்ளோம் என்று கூறினார் என்று கூறியுள்ளார் மோடி. நீங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவீர்கள் என்று நினைத்தீர்களா என்று கேட்டதற்கு, கடந்த 2012–ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக நான் இருப்பேன் என்று நம்பினேன் என மோடி கூறியுள்ளார். எனினும் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கட்சியிடம் எப்போதும் நான் கேட்டுக் கொள்ளவில்லை; இந்த நிலையை அடைவேன் என ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
