athichanallur - 2026

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: ஆக.5ல் அடிக்கல் நாட்டுகிறார் நிர்மலா சீதாராமன்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
athichanallur - 2026

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.
தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற உள்ளதாகவும், முதலில் சி சைட்டிலும், பின்னர் பி சைட்டில் கண்ணாடி மூலம் ஆய்வில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்த உள்ள இடத்தையும் பார்வையிடுகிறார்.

அதன்பின்னர் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.