கோயில்களில் யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

சற்றுமுன்

மதுரை:

கோயில்கள் மற்றும் வீடுகளில் யானை வளர்க்கத் தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

யானைகள் இயற்கைச் சூழலில் வனத்தில் இருக்கும் போது அதிக நாள்கள் வாழ்கின்றன. வீடுகள், கோயில்கள், மிருகக்காட்சிசாலைகளில் யானைகளைக் கட்டி வைப்பதால் குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் யானைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பயிற்சி என்ற பெயரில் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன.

கோயில் திருவிழாக்களில் யானைகளின் முதுகில் அதிக பாரம் ஏற்றுவது, பல மணி நேரம் வெய்யிலில் நிறுத்தி வைப்பது, உணவு கொடுக்காமல் விடுவது என தொந்தரவுகள் தொடர்கின்றன. யானைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே தமிழகத்தில் கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதித்து, அவற்றை முதுமலை அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இதற்கு அக். 6 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக உள்துறைச் செயலர், வனத்துறை முதன்மைச் செயலர், அறநிலையத்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.