முன்னாள் காங்கிரஸ் எம்.பியின் வீட்டில் மர்ம தீ: மருமகள், 3 பேரன்கள் கருகி பலி

இந்தியா

வாரங்கல்:
தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி.யின் வீட்டில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து, வீடு கருகியது. இதில், அவரது மருமகள், மூன்று பேரன்கள் கருகி பலியாகினர்.

தெலங்கானா மாநில வாரங்கல் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிர்சில்லா ராஜய்யாவின் மகன் அனில். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தன்னுடன் பணி புரிந்த சாரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபினவ் (8), அயேன், ஸ்ரீயேன் என 3 மகன்கள்.

இவர்கள் அனைவருமே ராஜய்யாவுடன் வாரங்கல்லில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கீழ்த் தளத்தில் ராஜய்யாவும், மாடியில் சாரிகா தன் குழந்தைகளுடனும் தங்கி இருந்தார். இந்நிலையில், அனிலுக்கும், சாரிகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் மீது போலீசில் சாரிகா வரதட்சணை புகார் அளித்திருந்தார். மேலும் அவருக்கு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னைப் பிரிந்து தனியாக வேறொரு பெண்ணுடன் வசிப்பதாகவும் கூறியிருந்தார். இதே போல் மகனைக் கண்டிக்காமல் அவருக்கு ஆதரவாக இருப்பதாக மாமனார் ராஜய்யா மீதும் காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சாரிகாவும், அவரது 3 மகன்களும் தீயில் கருகி பிணமாகக் கிடந்தனர். அவர் தங்கி இருந்த வீடும் தீக்கிரையாகியிருந்தது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததாக ராஜய்யா போலீசில் தெரிவித்தார். ஆனால் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்யவோ, போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே இல்லை. இன்று காலைதான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே சாரிகா தீ விபத்தில் பலியானாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டார்களா? என்பதில் மர்ம நிலவுகிறது.

தீப்பிடித்த போது கீழ்த் தளத்தில் ராஜய்யாவும், அனிலும் இருந்துள்ளனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.பி.யான ராஜய்யா வாரங்கல் சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று காலை அவர் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்புவதாக இருந்தார். இதற்காக ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டில் குவிந்தனர். ஆனால் வீட்டில் மருமகள், பேரன்கள் கருகி பலியானதை அறிந்து தொண்டர்கள் கவலை அடைந்தனர்.

ராஜய்யா தேர்தலில் போட்டியிடவும், மருமகள் சாரிகா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்துக்கும் புகார் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.