எங்களை என்ன போக்கத்தவங்கன்னு நெனச்சிட்டீங்களா? ஊடகங்களை மிரட்டும் முதலமைச்சர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

02 June16 Kumarasamy - 2026

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? எங்களை சிறுமைப் படுத்துவதற்கு நீங்கள் யார்? உங்களை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போகிறோம் என்று ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மைசூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், ஊடகங்களை கடுமையாக சாடிப் பேசினார். ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த ஊடகங்களான நீங்கள் யார் என்றும் கேள்வி எழுப்பியதுடன், அரசியல்வாதிகளான எங்களை வேலை வெட்டி இல்லாதவர்களாக நீங்கள் நினைக்கிறீர்களா என்றும் மிரட்டினார்.

மேலும், நாங்கள் என்ன நீங்கள் வரையும் கார்ட்டூன் சித்திரங்கள் போல உங்களுக்குத் தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாகக் காட்ட உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? எங்களை சிறுமைப்படுத்தி எழுதவும் காட்டவும் நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்று மிரட்டல் தொனியில் பேசினார் குமாரசாமி. ஒரு மாநில முதல்வர் இவ்வாறு பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போது, காங்கிரஸ் மஜத., கூட்டணி இடையே விரிசல் பெரிதாகி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, இந்தக் கூட்டணி அனேகமாக கழன்று கொள்ளும் என்றும், பாஜக.,வுடன் சேர்ந்து குமாரசாமி அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப் படுகிறது. மேலும், சித்தராமையாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை வெளியிடும் ஊடகங்களால் குமாரசாமி கடும் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆட்பட்டுள்ளார்.

hdkumarasamy - 2026 hdk - 2026

மேலும் அண்மைக் காலமாக குமாரசாமி குறித்து கேலிச்சித்திரங்கள் அதிகம் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றால் கொதிப்படைந்துள்ளார் குமாரசாமி. சாதா குமாரசாமி இவர், ஹெச்டி (ஹை டெஃபனிஷன்) குமாரசாமி இவர் என்றெல்லாம் சமூக ஊடகங்களிலும் கேலிசித்திரங்கள் அதிகம் உலா வருகின்றன.

மேலும், மோடி குறித்து ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்தி வெளியிடுவதாகவும் தாக்கிப் பேசியுள்ளார். நாங்கள் கோயிலுக்குப் போனால்… கோயில் கோயிலாக ஓடுகிறார்கள் என்று செய்தி போடுகிறார்கள். மோடி கேதாருக்கும் பத்ரிநாத்துக்கும் போனால், அதை பெரிய செய்தியாக வெளியிடுகிறார்கள் என்று கொட்டித் தீர்த்துள்ளார் குமாரசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.