spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்அயோத்தி ராமர் கோயில் பிராணப்ரதிஷ்டை விழா: பிரதமர் மோடி செய்வது ஏற்புடையதா?!

அயோத்தி ராமர் கோயில் பிராணப்ரதிஷ்டை விழா: பிரதமர் மோடி செய்வது ஏற்புடையதா?!

- Advertisement -
pmmodiji in ayodhya

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடியே தன் கையால் செய்யலாமா என்று ஓர் அரசியல் சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளபியுள்ளன. இது குறித்து பலர் சமூகத் தளங்களில் விளக்கங்களைச் சொல்லி வருகின்றனர். அவற்றில் மூன்று முத்தான கருத்துகள் இங்கே….

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடியே தன் கையால் செய்யக் கூடாது! கோயிலைக் கட்டி முடிக்காமல் கும்பாபிஷேகம் செய்யவே கூடாது…

— இப்படிச் சொன்னார் பெரியவர் ஒருவர். அவர் மதிப்பான பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

இன்று காலை ஒரு நிகழ்ச்சி தொடர்பில் மயிலாப்பூர் சென்றிருந்தேன். மயிலாப்பூர் க்ளப்பில் வைத்து நிகழ்ச்சி. அதற்கு வந்திருந்தார் அந்தப் பெரியவர். நாட்டு நிலவரம் அரசியல் சூழல் எல்லாம் நம்மிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்வைத்த கருத்துகள் தாம் இவை.

அதற்கு சில விளக்கங்களைச் சொன்னேன். அவற்றில் ஒன்று…

எங்கள் தென்காசிக் கோயில். மாமன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஒரு கனவு… “காசியில் என் கோயிலை கொடியவர்கள் பாழ்படுத்தி விட்டார்கள், எமக்கு ஒரு கோயிலை தெற்கே உன் ராஜ்ஜியத்தில் எழுப்பு. உன் முன்னோர் வழிபட்ட எனது லிங்க ரூபம் இருக்குமிடத்தை காட்டித் தருகிறேன்” என்று காசி வாழ் ஈசனே கனவில் சொன்னான். ஈசன் காட்டியபடி லிங்கம் செண்பகவனத்தில் கிடைக்கப் பெற்றது. உடனே நன்னாள் பார்த்து ஈசன் கனவில் காட்டிக் கொடுத்த இடத்தில், நிலத்தை நிலைப்படுத்தி, ஈசனை முதலில் லிங்கப் பிரதிஷ்டை செய்தார். பின் கோயிலை விரிவாகக் கட்டி கோபுரம் எழுப்ப முயன்றார். ஆனால் முடியவில்லை. அடுத்து வந்தவரே கோபுரத்தைப் பூர்த்தி செய்தார்.

எனவே முதலில் கருவறை அமைத்து அதற்கு மட்டும் கும்பாபிஷேகம் செய்து, பின்னர் படிப்படியாக சுற்று சந்நிதிகள் அமைத்து தனித்தனியாக அவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்து, பின்னர் கோயில் கோபுரம் கட்டி அதற்கு தனியாக கும்பாபிஷேகம் செய்து வைப்பது நம் வழக்கத்தில் இருப்பதுதான்! இப்படி பல கோயில்கள் உண்டு. இன்னும் சில கோயில்களில், பெருவுடையார் லிங்கம், அல்லது மூலஸ்தான விக்ரஹம் சந்நிதி கருவறை வாசலை விட பெரிதாக இருக்கும். அவற்றின் அமைவும் அப்படியே!

முடியாட்சி என்றால் ராஜா. குடியாட்சி என்றால் ஆளும் பிரதானி. தஞ்சைப் பெருவுடையார் கோயிலைச் சொன்னால் சிவபாதசேகரனான அருண்மொழித் தேவனான ராஜராஜ சோழனே கண் முன் நிற்பான். நாம் கோயில்களில், வீடுகளில் யாகமோ வைதீக விழாவோ நடத்தில், செய்து வைப்பவர்கள் புரோஹிதர்கள் என்றாலும், செய்பவர் – கர்த்தா-வாக அமர்பவர் ஒரு முக்கியஸ்தரே! கிராமங்களில் இப்போதும் ஊர் நாட்டாமை அல்லது தக்கார் அல்லது கோயில் கமிட்டி தலைவர் இப்படித்தான் கர்த்தாவாக அமர்ந்து கும்பாபிஷேகம் செய்வார்கள். எனவே பிரதமர் மோடி மக்கள் பிரதிநிதியாக – ஒரு கர்த்தாவாக அமர்ந்து கும்பாபிஷேகம் செய்வதில் தவறு ஏதும் இல்லை! — என்றேன்.

என்னதான் தர்மத்தின் அடிப்படையிலான விளக்கங்களை நாம் சொன்னாலும், தர்ம சிந்தனை மனத்தில் இருந்தால் அவற்றை மனது உடனே ஏற்றுக் கொள்ளும்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

இராமன் எத்தனை ராமனடி…

சரியான நேரத்தில் சரியானதை செய்யும் நம் பாரதப் பிரதமர்.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்புவிழாவிற்கு தயாராகி வரும் நம் இந்திய தேசத்தில் ஆங்கொன்றும் இங்கொன்றுமான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அதில் பிரதானமானது நம் பிரதமரை குறித்தானது….

அவர் எப்படி சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்யலாம்…என்பதே.

இதற்கு பல்வேறு வாதங்கள்… விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆளாளாளுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சமே. அது போலவே திறப்பு விழாவிற்கு ஏன் இந்த தேதியினை தேர்ந்தெடுத்தனர் என்பதும் விவாதப்பொருளாகி வருகிறது.

அன்றைய தினம் அதாவது 22/01/2024 அன்று குறிப்பிட்ட நேரத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் வரும்படியான காலத்தை கொண்டு இருக்கிறார்கள். பொதுவில் பார்த்தால் எதனோடும் பொருந்தாத சமாச்சாரமாக தெரியும் இஃது… இதன் பின்னணியில் மிகப்பெரிய காலக் கணித விஷயம் ஒன்றும் உள்ளது. நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற காலத்தில் ரிஷப லக்னம் அமையப் பெற்றதாக ஓர் கணக்கு வருகிறது.அது தவிர மகர ராசியில் வரும் படியாக நம் தேசம் உள்ளது, அதன் அடிப்படையில் ரிஷபம் ஐந்தாவது பாவாதிபதி.பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கொண்டிருக்கிறது.இப்படியான உள்ளீடாக பற்பல கணித சமன்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

இவற்றை எல்லாம் விடுத்து நம் பிரதமருக்கு அனுஷ நட்சத்திரம் விருட்ஷக ராசி… அதற்கு நேர் பார்வையில் ரிஷப ராசி என்பதால் தான் இந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதெல்லாம் இங்கு இரண்டாம் பட்சமே.

அடுத்ததாக அவர் மணமாகி மனைவியை பிரிந்து வாழ்பவர் என்பதால் மனைவியை பிரிந்த கிரகஸ்தன் என்பதால் யாக வேள்வியை முன் நின்று செய்யும் தன்மையை இழக்கிறார் எனும் காரணத்தினால் அவர் முன் நின்று இந்த கோவில் பணிகளை மேற்கொள்ள கூடாது என கிளம்பி இருக்கிறார்கள். அவர் தன்னளவில் அந்த திருமணத்தை…. பொதுவாழ்வில் ஈடுபடும் நபராக தன் பிரமாணப் பத்திரத்தில் தகவலாக மறைக்காமலும் மறுதலிக்காமலும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அவ்வளவே. இது தவிர அன்று தன் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் நடைபெற்ற அந்த குழந்தை திருமணத்தை தாண்டி இல்லறத்தில் ஈடுபட்டதில்லை என அவரது மனைவி ஸ்தானத்தை கொண்ட யசோதா பென் என்பவரே தீர்க்கமாக எடுத்து சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இல்லற துறவி போலவே தன் வாழ்நாளில் பிரம்மச்சாரியத்தை கைக்கொண்டு வரும் இவரை தவிர வேறு யார் தகுதி வாய்ந்த நபராக இருக்க முடியும்.???

சரி,சாஸ்திரம் என்ன சொல்கிறது…??

ஓர் அரசன் அதுவும் இன்று உள்ள நிலையில் மக்கள் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்தப்பட்ட ஒருவர் முன்னின்று செய்யும் சுப காரியங்களுக்கு தனி மனித தோஷம் இல்லை என்கிறது. அப்படி உள்ள சூழ்நிலையில் ராஜரிஷி போல் வாழும் பேறு பெற்ற நம் இந்திய பிரதமர் எல்லா வகையிலும் இந்த கோவில் திருப்பணிகளை செய்ய தகுதி வாய்ந்த நபரே….. இவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். கிரகஸ்தருக்கு கிரகஸ்தன்…. பிரம்மச்சாரிக்கு பிரம்மச்சாரி. ஆகச் சிறந்த ராஜ ரிஷி.

எல்லா வகையிலும் சரியே.

இராமரை…
ஸ்ரீராமரை… இஷ்வாகு குல தனம் என்பர். அவர் இஷ்வாகு எனும் சூரிய குலத்தை சார்ந்தவராக கொண்டாடுவர். அவர்களுக்கு…. அதாவது அந்த குலத்துதித்தவர்களுக்கு ஆஸ்தான தெய்வம் நம் ஸ்ரீரங்கத்து பெரிய பெருமாள்.
இஷ்வாகு எனும் மன்னனுக்கு அடுத்து வந்த 41 தலைமுறையில் வந்தவர் தசரதன். அவருக்கும் பிள்ளை தான் ராமர். பாரோரும்…. நம் பாரதமும் கொண்டாடும் ஸ்ரீராமர். பகீரத பிரயத்தனங்களுக்கு பிறகு அவர் பிறந்த அயோத்தியில் மீண்டும் திருக்கோயில் எழுந்தருளிப்பண்ணப்பட்டுள்ளது. பகீரதனும் இதே இஷ்வாகு வழி தோன்றல் தான் என்பது இங்கு கூடுதல் சிறப்பு. அயோத்தியில் குழந்தை வடிவினில் அதாவது 14 வயது கோலத்தில் ஸ்ரீராமரை ஸ்தாபிக்க இருக்கிறார்கள். சரியாக சொன்னால் கோசலை ராமனை சிவதனுஸை முறித்து சீதையை கரம் பிடித்த கையோடு நாடு திரும்பிய கோலத்தில் இங்கு பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள். கோலாகலமான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சொல்லி வைத்தார் போல் இங்கு நம் ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் பத்து நாட்கள் உற்சவம் ஆரம்பமாகி இருக்கிறது. பூபதி திருநாள் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
இந்த வாரக் கடைசியில் பிரதமர் இங்கு வந்து செல்லவிருப்பதாக தகவலும் உண்டு. மிகப் பெரிய சகாப்தத்தின் ஓர் அங்கமாக நாமும் இந்நிகழ்வில்… இந்த கோலாகல விழாவில் பங்கேற்க இருக்கிறோம். நம் கண் முன்னே ஓர் பிரமாண்டம் நம்மை கடந்து செல்லவிருக்கிறது. அயோத்தி சென்று தான் விழா நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதில்லை….. நம் அருகில் அருள்பாலிக்கும் ஏராளமான திருக்கோவில்கள் உண்டு. அங்கு திருக்கோலத்தில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் அந்த அழகனை…. அவன் அழகை நன்றாக தரிசிக்கலாம். அன்று முழுவதும் விளக்கு எரிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.வாழ்வியலை சொல்லித் தந்த வள்ளல் அவன்.நம் மனித வடிவில் வாழ்ந்து காட்டிய வள்ளல் அவன்.இன்றுள்ள நிலையில் நாம் புரிந்து கொண்ட …. உணர்ந்து கொண்டது சொற்பமே. அவன் புகழ் பாட ஓர் கம்பன் மட்டும் போதாது. அவரவர் பார்வையில் புரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டு கொண்டாட ஏராளமான விஷயங்கள் நம் இந்திய தேசத்தில் உண்டு. அதில் பிரதானமானதாக அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா அமைந்திடட்டும். நம் அனைவரையும் ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகள் கடாக்ஷத்து ரக்ஷக்கட்டும்.

  • ’ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

முழு கோவிலும் கட்டி முடிக்காமல் பிராண பிரதிஷ்டை செய்யலாமா ? ஒரு அலசல் !!

பல நூறு வருட போராட்டங்களை கடந்து ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையிலும்,

அதனை சுற்றிய அரசியல் ஓய்வதாக தெரியவில்லை !!

கோவிலில் முழுமையான கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல், அவசர அவசரமாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது !!

மக்களவைத் தேர்தலை ஒட்டி,இந்த அரசியல் நாடகத்தை பாஜக நடத்துவதாக பலரும் அதை வசதியாக திசை திருப்பி விடுகிறார்கள் !!

ஆனால் ,

இதற்கு காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ பிரம்மஶ்ரீ ஞானேஸ்வர் சாஸ்திரி அவர்கள் தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் !!

அதாவது, ” கோவில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே பிராண பிதிஷ்டை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை !!

கோவில் கர்ப்ப கிரகத்தின் வேலைகள் முழுமையாக முடிந்த பின்பு, தாராளமாக பிராண பிரதிஷ்டை செய்யலாம் !!

காரணம், கோவில் கட்டுமான பணிகள் என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கலாம்…

ஆகச்சிறந்த உதாரணம் குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம் !!

தொடக்கத்தில் கர்ப்ப கிரகத்தின் கட்டுமானம் முடிந்த பின்பு அங்கே பிராண பிரதிஷ்டை நடந்தது !!

ஆனால்,

இப்பொழுது இருக்கும் கோவில் வளாகம் மிகப் பிரமாண்டமாக பின்பு விரிவாக்கம் செய்யப்பட்டது தான் !!

அதே போல, கோவில் கோபுரம் கலசம் நிறுவப்படுவதற்கு முன்பு பிராண பிரதிஷ்டை செய்யலாமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது !

கோவில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு, ஒரு சன்னியாசி அந்த கடமைகளை ஆகம விதிப்படி செய்வார் !!

இது சன்யாசியால் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி !!

காரணம், ஒருவேளை ,இவை குடும்பஸ்தர்களால் மேற் கொள்ளப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் சந்ததி இல்லாமல் போகலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன !!

சரி, கலசம் நிறுவப்படாமல் கோவில் திறக்கலாமா ??

ஶ்ரீ அன்ன சாஸ்திரிகள் கலச ஆரோபன விதி பற்றி எழுதியதில் , தெளிவாக குறிப்பிடுகிறார் !

ஶ்ரீ பஞ்ச ராத்ர ஆகாமம் ஈஸ்வர சம்ஹிதை பொறுத்தவரையில் ,

குறைந்த பட்சம் கோவிலின் ஒரு தளத்தின் கட்டுமானம் முடிந்து கதவுகள் அமைக்கப்பட்டால் , கலசம் பிரதிஷ்டை செய்யாமலேயே பிராண பிரதிஷ்டை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது !!

இவை அனைத்தும் எதோ பாஜகவிற்கு ஆதரவாக அரசியல் சார்புடன் எழுத வேண்டும் என எழுதியது அல்ல !!

பிருஹன் நாரத புராணத்தில் 46 அத்தியாயத்தில் 697, 698 ஸ்லோகங்களில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது !!

அதனால் ,

சகோதர சகோதரிகளே !!
உலக இந்துக்களில் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் திறப்பு விழாவில் தேவையில்லாத அரசியலை தவிர்ப்போம்!!

அமையவிருக்கும் ராமராஜியத்தை வரவேற்க தயாராவோம்!!

ஜெய்_ஶ்ரீராம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe