
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு நேற்று இரவு சென்றிருந்தேன். தரிசனம் முடித்து விட்டு இரவு 8.10 மணிக்கு ராஜ கோபுரம் வழியாக வந்தேன்.ராஜ கோபுரத்தின் கதவுகள் பூட்டியிருந்தன. அருகிலுள்ள திட்டி வாசலும் பூட்டியிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள் தான். மேல்மருவத்தூருக்கு மாலை போட்டிருந்த சில வெளியூர் பெண்களும் இருந்தனர்.
“கோவில் நடை சாத்தும் நேரம் மாறியிருக்கிறதா?” என்று கேட்டோம். “அதெல்லாம் இல்லை. திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே போங்க. ராஜ கோபுரம் சாவிகள் ஆபீசுக்கு போயாச்சு. இனிமேல் திறக்க மாட்டோம்” என்று கோவில் ஊழியர்கள் கடுகடுத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் வயதான சில உள்ளூர்வாசிகளும் இருந்தார்கள். திட்டிக் கொண்டே வெளியே வந்தோம் (திருமஞ்சன கோபுரம் வழியாகத்தான்)
அருணாசலேஸ்வரர் கோவிலை ஒட்டி வாழும் உள்ளூர்வாசி ஒருவரிடம் விசாரித்தேன். *சில வாரங்களாக இப்படித்தான் 7.30 – 8 மணிக்கெல்லாம் மூடிடறாங்க. 9.30 மணிக்கு நடை சாத்தினாலும், கோவிலுக்கு வரும் ஆதிபராசக்தி பக்தர்களை வெளியேற்ற 11 மணி ஆகிறதாம். முறையான அறிவிப்பெல்லாம் இல்லை.
இப்படி 8 மணிக்கே ராஜ கோபுரம் மூடப்படுவதால், எங்களைப் போல தினமும் இரவு பள்ளியறை தரிசனம் செய்பவர்களுக்கு சிக்கல். கூட்டம் குறையும்னு நானும் காத்துண்டிருக்கேன்” என்றார்.
பக்தர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடாமல் கோவில் ராஜ கோபுரத்தை மூட ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை இருக்கிறதா என்பதே நமது கேள்வி.
-சி.பிரவீண்குமார்