நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கும் நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது யதேச்சையானது என்று கருதுவதற்கு இடமில்லை. ஊழலற்ற ஆட்சியை அளிப்போம் என்று கூறி கடந்த பத்தாண்டுகளாக மக்கள் நலப் பணிகளில் சரியான வகையில் திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டு சுமத்த முடியாதா என்று குயுக்திகளால் நிரம்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடு தேர்தல் பத்திர விவகாரம் என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் குறித்த வலையில் அதன் கூட்டணி கட்சிகளே அதிகம் விழுந்து காயப்பட்டு கிடக்கின்றன என்பது இண்டி கூட்டணிக்கு விழுந்து உள்ள பேரடியாக பேசப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் எனும் நடைமுறை அரசியலில் வெளிப்படை தன்மையும் தூய்மையும் இருக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. அதாவது அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் மறைமுகமாக கணக்கில் வராத கருப்பு பணத்தை கொடுத்து காரியங்கள் சாதித்துக் கொள்வதை தடுப்பதற்காக, வெளிப்படையாக தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கிகளின் மூலமாக கணக்கில் வரும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் எந்த கட்சி எந்த நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றது என்ற விவரத்தை அதிகாரபூர்வமாக பராமரிக்க முடியும்.
இந்நிலையில் தான் ‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் எஸ்பிஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வாறு வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, பல்வேறு தயக்கங்களின் ஊடாக, அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ., வழங்கியது. இந்தத் தகவல்களை தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் வெளியிட்டது.
இரண்டு தொகுப்புகளாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 337 பக்கங்கள் உள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பு ஆகியவை வெளியிடப்பட்டு உள்ளன. அடுத்து 426 பக்கங்கள் உள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களை பணமாக்கியுள்ளன என்ற விவரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விவரங்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாகப் பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விவரமும் இதில் வெளியிடப்படவில்லை. இந்த பட்டியலின் படி…
நன்கொடை அளித்த நிறுவனங்கள்
- பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் – 1,368 கோடி ரூபாய்
- மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் — 966 கோடி ரூபாய்,
- குயிக் சப்ளை செயின் நிறுவனம் – 410 கோடி ரூபாய்,
- வேதாந்தா நிறுவனம் – 400 கோடி ரூபாய்,
- ஹால்தியா எனர்ஜி – 377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
- பார்த்தி குழுமம் – 247 கோடி ரூபாய்,
- எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் – 224 கோடி ரூபாய்
என தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடைகளை வழங்கியுள்ளன.
நன்கொடை பெற்ற கட்சிகள்
பாஜக., காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், திமுக., பாரத் ராஷ்டிரீய சமிதி (பிஆர்எஸ்.,), அதிமுக., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் என, பெரும்பாலும் நாட்டின் அனைத்து கட்சிகளுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதி எவ்வளவு?
எஸ்பிஐ அழித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டதன் புள்ளிவிவரத்தின் படி,
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக தேசிய கட்சியான பா.ஜ.க. ரூ.6,060.51 கோடி நிதி திரட்டிyuள்ளது.
தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சி ரூ.1,421.86 கோடி நிதியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.65.45 கோடி நிதி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் மொத்தம் ரூ.5,221 கோடி நிதி பெற்றுள்ளன. நிதி திரட்டிய பிராந்திய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக. 4-வது இடத்தில் உள்ளது.
பிராந்திய கட்சிகள் பெற்ற நிதி விவரம்:
- திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,609.53 கோடி
- பாரத் ராஷ்டிர சமிதி – ரூ.1,214.70 கோடி
- பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி
- தி.மு.க. – ரூ.639 கோடி
- ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் – ரூ.337 கோடி
- தெலுங்கு தேசம் கட்சி – ரூ.218.88
- சிவ சேனா – ரூ.159.38
- ராஷ்டிரிய ஜனதா தளம் – ரூ.73.5
- மதச்சார்பற்ற ஜனதா தளம் – ரூ.43.40
- சிக்கிம் கிரந்திகாரி கட்சி – ரூ.36.5
- தேசியவாத காங்கிரஸ் – ரூ.31 கோடி
- ஜன சேனா கட்சி – ரூ.21 கோடி
- சமாஜ்வாடி கட்சி – ரூ.14.05 கோடி
- ஐக்கிய ஜனதா தளம் – ரூ.14 கோடி
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ரூ.13.5
- அகாலி தளம் – ரூ.7.2 கோடி
- அ.தி.மு.க. – ரூ.6.05 கோடி
- சிக்கிம் ஜனநாயக முன்னணி – ரூ.5.5 கோடி
மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு கோடிக்கும் குறைவான நிதியை பெற்றுள்ளன.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ., வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண் ஏன் குறிப்பிடப்படவில்லை தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விவரங்கள் முழுமை பெறும். எனவே அதனை எஸ்.பி.ஐ., தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கட்சியான பாஜக 18 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது ஆனால் அது பெற்ற நன்கொடை தனித்தனியாக பார்த்தால் மிகக் குறைவு. அதே நேரம் ஒரு மாநிலத்தை மட்டுமே ஆளக்கூடிய மாநிலக் கட்சிகள் உச்சபட்ச அளவாக நன்கொடை பெற்றுள்ளன. எனவே முழுமையான புள்ளி விவரங்கள் வரும்பொழுது மாநில கட்சிகளின் வண்டவாளம் தெரிய வரும் என்கின்றனர் அரசியல் நோக்கங்கள்.