கொரோனா பரவல் சில மாவட்டங்களில் குறைந்திருப்பதாலும், ஊரடங்கு விதிக்கப் பட்டு வெகு நாட்கள் கடந்து மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப் பட்டிருப்பதாலும் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான சமூகப் பரவல்களில் இருந்து மக்களைக் காக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படை விழிப்பு உணர்வு கூட இல்லாதவர்கள் அரசின் உத்தரவுகளை சட்டை செய்யாமல் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வீம்பு கொண்டு நாங்கள் யார் தெரியுமா என்ற அளவுக்கு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் சமூகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்கள் சமூகத்துக்குமே துரோகம் செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சமூக விலகலில் இவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் போனால், மற்ற சமூகங்கள் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்பவர்களை சமூக விலக்கலில் ஈடுபடுத்துவார்கள் என்பதையும், ஒன்றாகக் கலந்து வாழும் தன்மையில் பெரிதும் இடைவெளி ஏற்படும் எபதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!
மதத்தின் பெயரால் தாங்கள் இந்த நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப் பட்டவர்கள் இல்லை என்று வெளிக்காட்டும் போக்கு மிக ஆபத்தானது. ஆனால் அதையும் அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்ப்பதும், அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சட்டத்துறை இறங்குவதும், இந்த நாட்டு மக்களின் மன ஓட்டத்தில் இருந்து இந்த அமைப்புகளை விலக்க வைத்து, மக்கள் நம்பிக்கையை, ஆதரவை இழந்துவிடும் என்பது கடந்த கால வரலாறு.
மாநில அரசு அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலை மனத்தில் கொண்டு செயல்படுவதும், குறிப்பிட்ட வாக்கு வங்கி அரசியலில் நடுநிலை தவறிக் கெட்டுப் போவதும், பெரும்பான்மை மக்களின் ஆதரவை நிச்சயம் இழந்து விடுவதற்கான செயல்பாடுகள் தான்!
இருப்பினும், எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்ற பழமொழிக்கு ஏற்ப, மாநில அரசு ஒழுங்காக செயல்படுவதாக இருந்தால், காவல் துறையும் கடமையில் சரியாக இருக்கும் என்பதால், இதனைச் சொல்லத் தோன்றுகிறது. இந்தக் கொரோனா தொற்று பாதிப்பில், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், போலீஸார் என முக்கிய முன்னிலை வீரர்களே அகப்பட்டு சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் காவல் துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சில பணிகளும் அவர்களுக்கு சேர்ந்திருக்கின்றன.
- கொரானா வேடமிட்டு எச்சரித்தல்!
- நாடகம் செட்டப் செய்து பயமுறுத்துதல்!
- வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்தல்!
- வாகனங்கள் பறிமுதல் செய்தல்!
( கிட்டத்தட்ட 1 லட்சம்!) - அந்த வாகனங்களைப் பாதுகாத்தல்!
- அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல்!
- ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்தல்!( கிட்டத்தட்ட 3 லட்சம்!)
- தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைப் பாதுகாத்தல்!
- காய்கறி, இறைச்சி சந்தைகளில் கண்காணித்தல்
- ஊரடங்கை மீறி திறக்கப்படும் கடைகளை அதிகாரிகள் சீல் வைக்கும்போது உடனிருத்தல்!
- சிகிச்சையிலிருந்து பாதியில் தப்பியோடும் நோயாளிகளை தனிப்படை அமைத்து பிடித்து வருதல்!
- மதுக்கடைகளை உடைத்துத் திருடுபவர்களை வளைத்துப் பிடித்தல்!
- அந்த மது பாட்டில்களை இடம் மாற்றும்போது பாதுகாப்பாக இருத்தல்!
- இடம் மாற்றப்பட்ட மது பாட்டில்களை இரவு பகலாக பாதுகாத்தல்!
- ட்ரோன் பறக்கவிட்டு கேரம் போர்டு, கிரிக்கெட் ஆடும் தறுதலைகளை வளைத்துப் பிடித்தல்!
- கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைத் தேடிப் பிடித்தல்!
- கொரானாவில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கைது செய்தல்!
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்புபவர்களுக்கு வாசலில் நின்று கைத் தட்டுதல்
- 5 பேர்களுக்கு மேல் கூடுகிறார்களா என்று நகர் முழுவதும் ரோந்து வந்து கண்காணித்தல்
- சிறப்பு ரயிலோ, சிறப்புப் பேருந்தோ விடப்பட்டால் அதற்குப் பாதுகாப்புப் பணிக்குச் செல்தல்!
இவையெல்லாம் கொரானாவால் சுமக்கும் கூடுதல் பொறுப்புகள்! மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டால் இவர்களின் பணிச் சுமை பாதியாகக் குறையும். பல சிறிய நாடுகள் மிக அதிகமான போலீஸ் எண்ணிக்கை கொண்டிருக்கிறது. ஆனால் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் போலீஸ் எண்ணிக்கை குறைவு.
குறைவான எண்ணிக்கையுடன் கூடுதல் பொறுப்புகளையும் சுமந்து பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் உண்டு! ஒரு பதட்டத்துடன், பயத்துடன்தான் அந்தக் குடும்பங்களும் அவர்களைப் பணிக்கு அனுப்பி வைக்கிறது. எனவே நாட்டின் சூழலைக் கருதி, சக மனிதர்களின் வாழ்க்கைச் சூழல் இடர்பாடுகளைக் கருதி, மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
தங்களைக் காப்பாற்ற வரும் போலீஸாரை தாக்குவது, சுகாதாரப் பணியாளர்களை ஓட ஓட விரட்டுவது இவற்றில் எல்லாம் நாகரீக சமுதாயம் நிச்சயம் ஈடுபடாது. கும்பல் வன்முறைக் கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கும் காட்டுமிராண்டிகள் தான் இப்படிப்பட்ட அநாகரிகங்களில் ஈடுபடுவார்கள்! தாங்கள் நாகரீகமானவர்களா அல்லது இத்தகைய காட்டுமிராண்டிகளா என்பதை இந்த துயர் மிகுந்த தருணத்தில் மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளட்டும்!
மிக இக்கட்டான சூழலில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்தாவது, இந்தத் தளர்வுகளை நமக்காக அரசு அறிவித்திருக்கிறது; கொரோனா அல்ல என்பதை மனத்தில் கொண்டு மக்கள் தங்களை வழிநடத்திக் கொள்ளட்டும்!