
அகங்காரம் அகலும் வழி :
மனிதர்களிடையே அகங்காரம் அதிகமாக இருக்கிறது. பணத்தால், பதவியால், படிப்பால் இப்படி அகங்காரம் ஏற்படுகிறது. கணவன், மனைவி அலுவலகங்களில் சக வேலையாட்கள் நமக்கு கீழே வேலை செய்பவர்கள் என நமது அகங்காரத்தை காட்டி கொண்டே தான இருக்கிறோம்.
இதனை நாம் விடுவதற்கும், வினயம் நம்மிடையே வருவதற்கும் ஒரே வழி. நம்மை விட பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது.
நம்மை விட பெரியவர்கள், படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற மனோபாவம் வந்து விட்டால் இந்த அகங்காரம் நமக்கு இருக்காது. என்னைவிட படித்தவர் யார் இருக்கிறார் என்பதுதான் நம்முடைய கேள்வி யார் வந்தாலும் அவன் இவ்வளவு தான் அவ்வளவுதான் என்று நாம் சொல்வோம்.
நான்கு எழுத்துக்கள் படித்தோம் ஆனால் நமக்கு வரக்கூடிய அகங்காரத்திற்கு அளவே இல்லை. எல்லாம் அறிந்தவனும் ஒன்றும் படிக்காதவன் ஆனாலும் ஒருவாறு சரிசெய்து விடலாம் ஆனால் அரைகுறையாக படித்தவரை ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்.
நன்கு அறிந்தவன் விவேகம் இருப்பதனால் பொருத்தமாக இருப்பவற்றை ஏற்றுக் கொள்வான் ஒன்றும் படிக்கவில்லை ஆனாலும் தனக்கு தெரியாததால் எதையும் ஏற்றுக் கொள்வான்.
ஆனால் அரைகுறையாக படித்து இருப்பவன் முழுவதும் தெரியாததால் தப்பு தப்பாக சொல்வான் சிறிதளவு அறிந்திருப்பதால் பேசாமல் இருக்க மாட்டான். குறை குடம் குத்தாடும் என்பது போல் எல்லாவற்றையும் அறிந்தது போல் அபத்தங்களை உளறுவான். அப்படிப்பட்ட மனிதனை திருத்துவது மிகக் கடினம் நம்மை விட அதிகமாக தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுடன் ஒப்பிட்டால் நமக்கு என்ன தெரியும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால் அகங்காரம் நாசமாகி விடும்.
அனைத்தையும் அறிந்த ஞானிகளும், அறிவாளிகளும் இத்தகைய அடக்கத்துடனே இருப்பார்கள் அவர்களிடம் உரையாடும் போதே அவர்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிகின்றதே என ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள் ஏனென்றால் தனக்கு அது தெரியும் இது தெரியும் என சுய தம்பட்டம் அடிக்கும் பழக்கமும் அவர்களிடம் இருக்காது.
அமைதியாக நடப்பதை கவனிப்பார்கள். அரைகுறையாக தெரிந்தவர்கள் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என அவர்களது அடக்கத்தைக் கண்டு முடிவுக் கட்டிவிடுவார்கள். ஆடம்பரம் பட்டோபம் தற்புகழ்ச்சி இல்லா அமைதியில் பணிவில் அவர்கள் அறிவு மிளிரும்.
அதனால் அனைவரும் அகம்பாவத்தை விடுத்து பணிவும் விநயத்தையும் வளர்த்துக் கொண்டு இறைவனின் அன்பிற்கு பாத்திரமாகுங்கள் என சிருங்கேரி மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் அருளுரை வழங்குகுகிறார்கள்