
- விஜய பதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்!
- (சம்ஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமை பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
1.Strategy:
ஆலோசனை எவ்வாறு செய்ய வேண்டும்?
எவ்வாறு ஆலோசனை செய்ய வேண்டும்? என்பது குறித்து பரதனிடம் ஸ்ரீராமன் கூறியவற்றை ஆதிகவி வால்மீகி மகரிஷி ராமாயணத்தில் விவரிக்கிறார்.
ஸ்லோகம்:
கச்சின்மந்த்ர நைக: கச்சின்ன பஹுபிஸ்ஸஹ !
கச்சித்தே மந்த்ரிதோ மந்த்ரோ ராஷ்ட்ரம் ந பரிதாவதி!!
(ராமாயணம் அயோத்தியா காண்டம் – நூறாவது சர்க்கம் – பதினெட்டாவது ஸ்லோகம்)
பொருள்:
நாட்டு நலன் தொடர்பான விஷயங்களில் நீ தனித்து ஆலோசிக்கவில்லை அல்லவா? (அதற்காக) அதிகம் பேரிடம் கலந்தாலோசிக்கவில்லை அல்லவா? நீ அறிவிப்பதற்கு முன்பாகவே உன் ஆலோசனை நாட்டை தாண்டி (எதிரிகளுக்கு) செல்லவில்லை அல்லவா?
இமயமலை. நான்காயிரம் அடி உயரத்தில் உள்ள அமர்நாத் க்ஷேத்திரம். அங்கு ஒரு குகையில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தில் பரம சிவனை தரிசிக்க வழி திறந்தார்கள். பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் க்யூ வரிசைவில் நின்றார்கள். கழிகளைப் பற்றிக்கொண்டு இளைஞர்கள் நடந்து வந்தார்கள். நடக்கக் கூட வராத சிறு குழந்தைகளை இடுப்பில் கட்டி தூக்கி கொண்டு இளம் பெற்றோர் நடந்து வந்தார்கள். தள்ளாடும் முதியவர்களை அவர்களின் பிள்ளைகள் தோளில் சுமந்து வந்தார்கள். “போலேனாத் கீ ஜெய்!”, “சம்போ சங்கரா!”, ஹர ஹர மஹாதேவா!” என்ற பக்தர்களின் கோஷத்தை அமர்நாத் மலை எதிரொலித்தது. எங்கு நோக்கினும் பக்தி பரவசத்தில் திளைக்கும் பக்தர்கள்!
திடீரென்று…!
“யாத்ரா பந்த் கரோ!” என்று உத்தரவு வந்தது. யாத்திரிகர்கள் ஸ்தம்பித்து நின்றனர். மேலே ஏறியவர்கள் மட்டும் தரிசனம் செய்து கொண்டார்கள். அவ்வளவே…!
வெளியூர்களில் இருந்து வந்து காஷ்மீரில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு திடீரென்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் வாசிகளைத் தவிர வேறு யாருமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கி விடாமல் கவனம் வகித்தார்கள். எப்போதையும் விட அதிக அளவில் படைவீரர்கள் எங்கும் குவிக்கப்பட்டார்கள். கலகக்காரர்களை வீட்டுக்காவலில் முடக்கினார்கள். தொலைபேசிகளின் வாயைக் கட்டினார்கள்.
என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
2019 ஆகஸ்ட் 5ம் தேதி இந்திய அரசியலமைப்பின் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்வதற்கு முன்பாக நடந்த மூலோபாயம் (Strategy) இது!
யாருக்கும் தெரியாமல் மிக மிகத் துல்லியமாக, ரகசியமாக இந்த நடவடிக்கைகள் நடந்தேறின.
பாதுகாப்பு திட்ட ஆர்டினென்ஸ் அவசரச் சட்டத்தின் மூலம் அதுவரை ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட பிரத்தியேகமாகக் காண்பித்து அளிக்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது.
ஜம்மு காஷ்மீர் பகுதி முழுமையாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சமம் என்ற உண்மையை தெளிவாக்கியது.
ஆம்! அரசியல் பீஷ்மர்கள், பத்திரிகை யானைகள், எதிர்க்கட்சி மேதாவிகள்… யாரும் யூகிக்க இயலாத வேகத்தில் விளம்பரம் எதுவுமின்றி ஒரு அற்புதம் நடந்தேறியது. நாட்டிற்குச் சிறப்பான நன்மை ஏற்பட்டது.
2016 ம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் உரையாற்றுவார் என்று அறிவிப்பு வந்தது. எதற்காக என்பது யாருக்கும் தெரியாது. அனைவரும் தொலைக்காட்சியின் முன்னால் கூடினார்கள். அன்றிரவு மோடி செய்த அறிவிப்பு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுதான் டீமானிடைசேஷன். பெரிய பண மதிப்பிழப்பு.
இரவோடு இரவாக 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இத்தனை பெரிய காரியம் 130 கோடி மக்கள் தொகை உள்ள நம் இந்திய நாட்டில் எவ்வாறு சாத்தியமானது? இந்த ரகசியத்தைக் காப்பாற்றிய அதிகாரிகளின் கடமை உணர்வு போற்றத்தக்கது!
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த பகைவர்களின் இருப்பிடத்தை அழித்து பாதுகாப்பாகத் திரும்பி வந்த இந்தியப் படைவீரர்கள் செய்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஒரு வரலாற்று நிகழ்வு! பாகிஸ்தான் நம் நாட்டிற்கு எதிராக நடத்தி வந்த வன்முறைக்கு சிறந்த பாடம் புகட்டப்பட்டது. இந்த தண்டனையை அமல்படுத்திய பிறகே அது பற்றி நம் நாட்டிற்கும் உலகிற்கும் தெரிந்தது.
எத்தனை பேர் இந்த ஆபரேஷனின் பின் பணிபுரிந்து இருப்பார்கள்? ஆயினும் இதனை மிக ரகசியமாக மறைவாக நடத்திக் காட்டினார்கள். இத்தனை வியூகங்களோடு கூடிய எதிர்நிகழ்வு எதிரிகளுக்குச் சிறந்த பாடமாக அமைந்தது. 2016 செப்டம்பர் 29 ல் இந்திய அரசு வெளியிடும் வரை இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.
முழுமையான ஆலோசனையின் முக்கியத்துவம்:
தனியாக ஒருவரே ஆலோசித்தால் முழுமையாக ஆலோசிக்க இயலாது. ‘முகே முகே சரஸ்வதி!’ என்று கூறுகிறார் போல் அறிவுத்திறன் பலதரப்பட்டது. நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து முழுமையாக யோசிக்கும்போது பயனுள்ள யோசனைகள் பல வெளிவரும்.
அரசன் ஒருவனே தனியாக யோசித்தால் சரியான தீர்மானத்திற்கு வர இயலாது என்கிறார் வால்மீகி. அதனால் முதிர்ந்த அனுபவம் கொண்ட அறிவாளிகளோடும் அரசாட்சியின் நெறிமுறையில் திறமை உள்ளவர்களோடும் முழுமையான யோசனைக்காக அமரவேண்டும்.
“அர்த்த சாஸ்திரத்தை படித்தறியாதவர்கள் ரகசியமாக கலந்தாலோசிக்கும் அடிப்படைக் குழுவில் (Core Team) இருக்கக்கூடாது என்று சாணக்கியர் (அர்த்தசாஸ்திரம் 11வது பிரகரணம்) செய்த எச்சரிக்கை இப்போதும் தலைவர்கள் தலைமேல் தாங்கி ஏற்க வேண்டிய ஒன்று.
எடுத்துக்கொண்ட வேலை செய்து முடிக்க கூடியதா? இல்லையா? இதன் லாப, நஷ்டங்கள் என்னென்ன? என்பது குறித்து நான்கு பேர் சேர்ந்து அமர்ந்து கலந்து பேசுவது சிறந்தது. அவ்வாறின்றி அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமாக சேர்ந்து யோசித்தால் ஒரு முடிவுக்கும் வர இயலாது. அதனால் அளவான சிறு குழு கலந்தாலோசித்து செய்யக்கூடிய தீர்மானமே வெற்றியை பெற்றுத்தரும். தற்போது நடைமுறையில் உள்ள அமைச்சரவைகள் அத்தகைய ஆலோசனையால் ஏற்பட்டவையே!
ஆலோசனைகளை ரகசியமாக வைத்திருக்க கூடிய புரிதல் கொண்ட அமைச்சரகம் இருந்தால் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருக்கும். அப்படிப்பட்ட அரசாங்கத்தை பகைவர்களால் அழிக்க இயலாது என்று மகாபாரதத்தில் வியாசமுனிவர் தெரிவிக்கிறார்.
அமல்படுத்துவதற்கு முன்பாக பெரிய நோட்டுகள் ரத்து, சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற செயல்கள் அவசியமான சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அப்படிப்பட்ட அளவான சிலரைக் கொண்ட சிறிய டீம் அற்புதமாக வெற்றியை சாதித்தது.
அதனால் தலைவன் ஒருவனே அன்றி குழுவோடு சேர்ந்து ஆலோசித்து செயல்களை அமல்படுத்தி வெற்றியைச் சாதிக்க வேண்டும்!
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்