spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்இந்தியாவில் மகளிர் மேம்பாடு!

இந்தியாவில் மகளிர் மேம்பாடு!

- Advertisement -

இந்தியாவில் மகளிர் மேம்பாடு


உலகில் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தவர் யார் என்று கேட்டால், நாம் அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த அம்மாவைத்தான் கூறுவோம். தாய்மார்களே இந்த உலகம் சீராக இயங்கக் காரணம் ஆனவர்கள். தாய்மை என்பது பெண்களுக்குரிய தனிச் சிறப்பு.

மனித குலத்தின் துவக்க கால கட்டத்தில் இந்த சமூகத்தை வழி நடத்தியவர்கள் பெண்களே. அதனால்தான் பெண் கடவுள் வழிபாடுகள் பாரம்பரிய இந்திய சமூகத்தில் தோன்றின. கல்வியும், செல்வமும், வீரமும் என மனித குலத்தின் முக்கிய மூன்று தேவைகளுக்கும் உரியவர்களாக பெண் கடவுளர்களை இந்திய பாரம்பரிய சமூகம் கொண்டாடியது.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் பெண்ணின் பங்கு மகத்தானது. சமூகத்தில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியைப் பேணுபவர்களும் பெண்களே. இப்படி வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்களைப் பாதுகாப்புடனும் உயர்வாகவும் நடத்த வேண்டியது நம் சமூகத்தின் கடமை.

மகளிர் மேம்பாடு குறித்து சென்ற நூற்றாண்டில் மகாகவி பாரதி வெகு அழகாக சிந்தித்தார். சகோதரி நிவேதிதையை முன்னுதாரணமாகக் காட்டி, இந்த சமூகத்தின் பெண் இனம் மேம்பட தன் பாடல்களால் கருத்துக்களை விதைத்தார். பெண் சுதந்திரம், பெண் கல்வி, மேம்பாடு என்று பல உயர்வானச் சிந்தனைகளை விதைத்தார். அவர் பின் வந்த சீடர் பாரதிதாசனும் பெண்களுக்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே, பெண்களுக்குக் கல்வி வேண்டும் நன்மக்கள் பேணுதற்கே என்று பெண் கல்வி பற்றிப் பாடினார்.

இப்படி பெருமிதத்துடன் நடத்தப் பட வேண்டிய பெண் சமூகத்தை நாம் கனவில்தான் காண முடிகிறது. நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல வகையிலும் வன்முறைகளுக்கு ஆளாவது வருந்தத் தக்கது . ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில், பெரும்பாலான பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். உலகின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.

பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்தால் அவர்கள் எந்த அளவுக்கு இந்த சமுதாயத்தில் வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவரும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகை வன்முறைக்கு ஆளாகின்றனர்.
ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

கல்வி கற்று பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குவதாக வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்தத் துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் கேள்விக்குறிதான்.
பெரும்பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுகின்றன. பெரும்பாலான உயர் அதிகாரிகள் ஆண்கள். எனவே அந்தத் துறைகளில் பெண்கள் அடிமைப்பட்டே வாழ்வைக் கடக்க வேண்டியுள்ளது.

நகர்புறங்களில் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்கின்றனர். கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றியே வாழ்க்கையை தொடர்கின்றனர்.

இப்படி பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. அதன் பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையிலும் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஆனால் நடைமுறையில், பெண்களின் பாதுகாப்பற்ற நிலை இந்தியாவில் மிகவும் அபாயகரமான அளவில் உள்ளதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை இதனைக் கண்டித்ததுடன், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியது.

1993-ல் வியான்னாவில் நடந்த “உலக மனித உரிமை மாநாட்டில்” பெண் உரிமை மீறல், மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டப்பட்டது. 1993ல் இருந்து இந்திய அரசு பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முயற்சிகள் பல எடுத்து வருகிறது .

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2010ஆம் ஆண்டு, பென்கள் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. “பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தச் சட்டம் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கும். பணி இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம்.

இந்தச் சட்டம் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்றது. அரசுத் துறை, தனியார் துறை அல்லது வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலும் அங்கே பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம்.

இந்தச் சட்டத்தின் மூலம், பாலியல் வன்முறைக்குத் தூண்டிய அதிகாரிகளை, பிற ஆண்களை, சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு துணை புரியலாம்.

இந்த பாதுகாப்புச் சட்டம் “பாலியல் வன்முறை’ குறித்த தெளிவான விளக்கத்தைத் தருகிறது. “பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தித் தராத நிலையே பாலியல் வன்முறை என்ரு கூறி, அத்தகைய நிலையை தடைசெய்ய முயற்சிக்கிறது. இச்சட்டம் ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக் கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோய் வாய்ப் பட்டிருப்போர் உள்ளிட்டோருக்கும் முழுமயான பாதுகாப்பை வழங்க முற்படுகிறது.

இச் சட்டத்தின் படி, ஒவ்வோர் அமைப்பிலும் அந்த அந்த அமைப்புக்கு உள்ளாக, புகார் குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான அபராதத்தையும் செலுத்த நேரிடும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இப்படி பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் இச்சட்டம் அமைகிறது. இது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது. இந்திய அரசு மகளிர் மேம்பாட்டில் கொண்டுள்ள அக்கறையை இந்தச் சட்டம் வெளிப்படுத்துகிறது.


மகளிர் மேம்பாட்டில் முக்கிய இடம்பெறுபவை மகளிர் பாதுகாப்புச் சட்டம், அவர்களுக்கான சொத்துரிமைச் சட்டம், பெண் கல்வி, குடும்ப அமைப்புக்கான பாதுகாப்பு சட்டம், திருமணச் சட்டம், பெண்ண் குழந்தைகளுக்கான உதவித் தொகைகள், சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கான முன்னுரிமைச் சட்டங்கள், மகளிருக்கான இட ஒதுக்கீடுகள் என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சொத்துரிமைச் சட்டம் என்ற வகையில், ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என நமக்குத் தெரியும். ஆனால் பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்ன உரிமை உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

‘பெண்களுக்கான சொத்துரிமை குறித்த சட்ட விழிப்புணர்வு பெண்களுக்கு மேலும் தேவைப்படுகிறது. 1956 இல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படியே பெண்களுக்கான சொத்து உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்கிறது.

இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்துப் பெண்கள் சொத்து சட்டம்’ இருந்தது. இதன் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது. ஆனால், 1956, ஜூலை 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாகக் கிடைக்கும். இதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு.

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால் 2005இல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆம் ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குப் பிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

மகளிருக்கான சொத்துரிமையைப் போல், இந்து திருமணச் சட்டம் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் இதனை இன்னும் நிலுவையில் வைத்துள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.

இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் தெளிவாக இருக்கின்றன. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்தச் சட்டங்கள் பொருந்தாது.

இருப்பினும், சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆண் பெண் விகிதாச்சாரம் தற்போதைய நாட்களில் குறைந்து வருகிறது. தேசிய அளவிலும் சரி, மாநிலங்களின் கணக்கெடுப்பு விவரங்களிலும் சரி, ஆயிரம் ஆண்கள் என்றால் பெண்கள் குறைந்தே காணப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமூகத்தின் பெண் குழந்தைகள் குறித்து படிந்துள்ள எண்ணமே மூல காரணமாக இருக்கிறது. எனவே தான் அரசு பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்கப்படுத்த பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகைகளை அறிவித்து அளித்து வருகிறது.

வட இந்தியா, நம் நாட்டின் வடகிழக்குப் பகுதி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் என பரவலாக, பெண் குழந்தைகளின் கல்வி, முன்னேற்றத்துக்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன., மகளிருக்கான உதவித் தொகைகள், கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை என இருந்தாலும், தமிழகத்தில் சில திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த, ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்த, ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகளையும் அரசு குழந்தைகள் காப்பகங்களின் மூலம் தங்கிப் படிக்க வழி செய்கிறது.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத அல்லது தாயோ, தந்தையோ மட்டுமே உள்ள குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரால் பராமரிக்கப்பட இயலாத குழந்தைகள் மற்றும் சிறை வாசிகளின் குழந்தைகள், பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தும் தந்தை அல்லது தாய் கடும் மாற்றுத் திறன் உடையோராக இருக்கும் குடும்பத்திலுள்ள குழந்தைகள் ஆகியோர் தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

அவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி, சீருடை, இலவசப் பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மருத்துவ வசதி, காலணிகள், படுக்கை வசதி அளித்தல் ஆகியன இத்திட்டத்தில் உள்ளன.

இத்திட்டத்தின் படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் 5 வயது முதல் 18 வயது வரை தங்கிப் பயில அனுமதிக்கப்படுவர். பெற்றோர் இருவரும் இல்லாத பெண் குழந்தைகள் மேற்படிப்புக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுவர். இதற்கு, கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் காப்பகங்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள், சமூக நல விரிவாக்க அலுவலர்கள, மகளிர் ஊர் நல அலுவலர் ஆகியோரை அணுகி பயன்பெற வழி உள்ளது

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்பது, பெண் குழந்தைகளுக்கான, மற்றுமொரு வரப் பிரசாதம். ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறுவதற்கென இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை நிலை வைப்புத் தொகையின் 20-ஆம் ஆண்டின் முடிவில் வட்டியுடன் சேர்த்து, முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம்- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படுகிறது.
இதற்கு 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
விண்ணப்பிக்கும்போது, பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வைப்புத் தொகை ரசீது பெறப்பட்ட ஆறாம் ஆண்டு முதல் சூ1,800 பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும். இது தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் திட்டம்.

திருமணச் சட்டங்களைப் போல், அடுத்து மகளிர் மேம்பாட்டில் முக்கிய அம்சமாகத் திகழ்வது, குடும்ப ஆலோசனை மையம் பற்றிய தகவல்கள்தான்.

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி தொடர்பான மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இக்குடும்ப ஆலோசனை மையங்கள் இப்பிரச்சனைகளில் தலையிட்டு தார்மீக மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாக திகழ்கின்றன.

குடும்ப ஆலோசனை மையங்களில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், குடும்ப வன்முறை மற்றும் குடும்பத் தகராறுகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை, பரிந்துரை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இது அவர்கள் பிரச்சனைகளை எளிதாகக் கையாள உதவுகிறது. மேலும் வரதட்சணை கொடுமை, குடிப்பழக்கம் மற்றும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் பிரச்சனைகளை இம்மையங்களை அணுகி தெரிவித்து தேவையான ஆலோசனைகள் பெறலாம்.


இப்போதெல்லாம் அடிக்கடி பெண்ணுரிமை என்ற சொற்கள் நம் காதுகளில் விழும். அடுத்து, சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் நம் முன் வந்து போகும். அப்போதெல்லாம் பெண்ணுரிமை குறித்து பலரும் பேசுவதைக் கேட்போம். மார்ச் 8ஆம் தேதி இந்த மகளிர் தினத்தில் பெண்ணுரிமை குறித்து கருத்துகளைச் சொல்லக் கேட்டிருப்போம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் மனித உரிமை நாளும், பெண்கள் வலிமை நாளும் கொண்டாடப் பட்டு வருகிறது. உரிமை என்பது உறுதி செய்யப் பட்ட சுதந்திரம். ஆனால் பெரும்பாலானோருக்கு, தாங்கள் என்னென்ன உரிமை பெற்றிருக்கிறோம் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு முறையான படிப்பு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டத் தவறி விடுகிறார்கள்.

சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால், ‘ஒரு சமூதாயத்தில் பிரபலமான சாதனைப் படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமூதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

ஆண்களும் பெண்களும் சமுதாயம் என்ற அழகுக் கட்டிடத்தைத் தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களாவர். ஆனால் அண்மைக் காலமாக பெண்களை தரம் தாழ்த்தும் இழி நிலையை நம் சமுதாயம் கண்டு வருகிறது. இதற்கு நாகரீகம் என்று ஒரு பெயரையும் மேம்போக்காக வைத்து வருகிறது.

ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமுதாயம் தான் உள்ளது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும் என பல சம்பவங்களை இப்போதும் நாம் செய்திகளில் கேட்டு வருகிறோம். எனவே அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னென்ன என்பதைப் போதிக்க வேண்டும்..

இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டவர்கள் பெரிதும் பெண்களே. எனவே பெண்களின் நலன் என்பது ஐ.நா.சபை தீர்மானத்தில் 1945 ஆம் வருடம் அதிகமாக காணப் பட்டது. 1946 ல் உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு ஆணையம் அமைக்கப் பட்டது. அதன் பலனாக 1948ல் மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது.

பெண்களைப் பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்கமுள்ள அந்நாளில் 1949 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடு பட்டவர்களை நல்வழிப் படுத்துவது அரசின் கடமை என்று அறிவிக்கப் பட்டது. 1952 ஆம் ஆண்டு பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பும் வழங்கி, பெண்களை ஓட்டுப்போடாமல் தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்து அவர்களை கணவர்மார்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையினை 1957 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டுக் குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது.

1967 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அமைக்கப் பட்ட கமிஷன்கள், பெண்கள் என்பதால் ஒதுக்குவது குற்றம் என்று அறிவித்ததோடு அவர்களுடைய சுய கௌரவத்தினைப் பாதிக்கும் செயலாகவும் அறிவித்தது.

1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிராக, பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ வன்முறையில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்க வகை செய்தது.

இந்தியாவில் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவை.

அரசியல் சட்டம் பகுதி நான்கில், டிரெக்டிவ் ப்ரின்ஸ்பில் ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கை வழி செலுத்தும் நெறிகள் என்ற பகுதியில், வேலையில் பெண்களுக்கு – ஆண்களுக்கு நிகரான ஊதியம், கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவிப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமானம் ஏற்படும் செயல்களில் இருந்து விலக்கு அளித்தல் போன்ற நடவடிக்கைகள் செயல் படுத்தப்பட்டன.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் இந்திய நீதி மன்றங்களின் பல்வேறு தீர்ப்புகள் மெச்சத் தகுந்தவை என்று உலக நாடுகள் போற்றுகின்றன.

மகளிருக்கான உரிமைகளில் பழங்காலத்தில் இருந்து இப்போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் பல..
அவற்றில் ஒரு சில.. இங்கே உதாரணத்துக்கு….

கைதிகளுக்கு கைவிலங்கு இடுவது தடுக்கப் பட்டுள்ளது
இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேளையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப் பட்டுள்ளது.
பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப் பட்டுள்ளது.
உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப் பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது
பாலியல் கொடுமை மனித உரிமைக்கு எதிரான குற்றம் என்று அறிவித்தல்.
சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் விவகாரத்தில் ஒரு முடிவினை நோக்கி நாடு நகர்ந்து கொண்டுள்ளது.
சமூகத்தில் பெண்களுக்கு வலிமை சேர்த்தல்
ஒவ்வொரு மார்ச் 8 ஆம் தேதியும் பெண்களுக்கு வலிமை சேர்க்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.


மார்ச் 8 ஏன் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்ய வரலாறு ஒளிந்துள்ளது

1857ல் நியூயார்க் நகரில் மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக் கணக்கான வேலை பார்க்கும் பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போலீஸாரால் ஓட, ஓட விரட்டி அடிக்கப் பட்டனர். அந்த நாளை குறிக்கக்கூடிய தினமே பெண்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு நிகரான ஊதியம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா ஜனாதிபதியான பின்புதான் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.


பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் செல்லச் சீமாட்டிகளாக போற்றப்பட, பெரும்பாலும் புகுந்த வீட்டில்தால் பலரும் கொடுமையினை அனுபவிக்கின்றனர்.
இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலக விலைவாசி உயர்வில் ஒரு வேளை உணவு உண்பது என்பதே பெண்களுக்கு அரிதாக இருக்கும்போது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாலூட்டமுடியும் என்பதை சோமாலிய, மொசாம்பிக், நைஜீரியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலையும், குழந்தைகள் நிலையினையும் தொலைக்காட்சிகள் பல படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகில் படிக்காதவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்தான். எச்,ஐ.வி. போன்ற நோயால் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவ மனைகளும் உண்டு.

இந்திய நாட்டில் கூட வடமாநிலங்களில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பலர் படிக்காமல் நின்று விட்டனர். காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், பள்ளிக்கூடத்தில் தனியான கழிவறை இல்லை என்பதுதான். இதை உத்தேசித்தே, இந்திய அரசு, திறந்த வெளிக் கழிப்பிடங்களை அகற்றி, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கழிப்பறைகளை அனைத்து வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் கொண்டு செல்கின்றது. பாதுகாப்பான கழிப்பறைகள், மகளிரை வன் கொடுமையில் இருந்து பாதுகாக்கும்.

அடுத்து, பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற மைக்ரோ பினான்ஸ் என்ற சிறு பொருளுதவி தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நாடு முழுதும் பரவலாக வழங்கப் படுகிறது. இதனால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வழி செய்யப் படுகிறது.

இன்று இந்திய நாட்டில் பஞ்சாயத் ராஜ் என்ற மூன்றடுக்கு தேர்தல் முறையும் அதில் பெண்களுக்கான முப்பது சதவீத ஒதுக்கீடு மூலம் ஆயிரக்கணக்கான மகளிர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று பிற்பட்டோருக்கும் மகளிரில் ஒதுக்கீடு செய்து சட்டமன்றம் மற்றும் மக்களவையிலும் ஒதுக்கீடு செய்து பெண்கள் குரல் அதிகமாக இந்திய ஜனநாயகத்தில் ஒலிக்க வழி வகை செய்ய வேண்டும்.

அவர்களுக்கு கல்வியும் உரிய உரிமையும் கொடுத்தால் அவர்கள் ஆண்களை மின்சுபவர்களாக இருக்கின்றார்கள் பல உதாரணங்களால் நிரூபிக்க முடியும்.

இன்று உலகின் முக்கிய நாடுகளான ஜெர்மனி, தென் கொரியா, பிரேசில், கொசோவோ, அயர்லண்ட், செர்பியா, மாளவி, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பெண் அதிபர்கள் உள்ளனர். அல்லது அரசியல் ரீதியாக கோலோச்சுகின்றனர்.

பர்மாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை சென்றாலும் போராடி ஜனநாயகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஆங் சன் சூகி வழி வகுத்துள்ளார்.
தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும் பரவாயில்லை என்று பெண் கல்விக்காக குரல் பாகிஸ்தானைச் சார்ந்த மலாலா கொடுத்துள்ளார்.
விண்வெளிப் பயணத்தில் ஆண் துணையில்லாது விண்கலத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று திரும்பி இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
அன்று அண்டை நாட்டின் வாலாட்டத்தை 1971 ஆம் ஆண்டுப் போரில் ஒடுக்கியும், தேசிய ஒருமைப்பாட்டினை காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கியும் வலிமையை உலகிற்கு காட்டியவர் இந்திரா காந்தி …
இன்றும் வல்லரசு அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணராக பொறுப் பேற்று திறம்பட பெயர் வாங்கியிருக்கிறார் ஒரு இந்திரா நூயி
இன்னும் பல துறைகளில் பெண்கள் சாதனைகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கான தளத்தை அரசுகளும் சமூகமும் சுய விருப்பு வெறுப்பின்றி திறந்த மனதுடன் செய்து கொடுப்பது காலத்தின் தேவை.

  • செங்கோட்டை ஸ்ரீராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe