
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ஒரு தாய் தன் மகனைப் பற்றி வருத்தப்பட்டு, “இப்போதெல்லாம் எங்கள் மகன் தினமும் கோயிலுக்குச் சென்று பிரதட்சிணம் செய்கிறான். எனக்கு கவலையாக உள்ளது. இந்த வயதிலிருந்தே இத்தனை கடவுள் பக்தியை பார்க்கும்போது என் மகன் சன்னியாசியாகி விடுவானோ என்று பயமாக இருக்கிறது” என்றார்.
ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த பல குடும்பங்களில் இது போன்ற பேச்சுகளை கேட்க நேர்கிறது. சனாதன தர்மத்தின் மீது ஆர்வமும், தெய்வபக்தியும் சிறிதளவே பிள்ளைகளில் முளை விட்டாலும் முன்பெல்லாம் பெற்றோர் மகிழ்ச்சியடைவர். ஆனால் சில பத்தாண்டுகளாக பல குடும்பங்களில் நம் தர்மம் குறித்து சிரத்தை குறைந்து வருவதோடு அது ஏதோ சந்நியாசிகளின் விஷயம் என்ற அறியாமை கூட பரவி வருகிறது.
இதனால் பாரம்பரியம், குடும்ப விழுமியங்கள், கலாச்சாரம் எல்லாம் படிப்படியாக அழிந்துவருகின்றன. ஹிந்து தர்மம் குறித்தும் சம்பிரதாயங்கள் குறித்தும் குறைந்த அளவு புரிதல் கூட இல்லாத தலைமுறை உருவாகி வருகிறது. நம் நூல்கள், நம் சான்றோர், பண்டிகைகள், கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் போன்ற எதுவுமே தெரியாத குடும்பங்கள் அதிக அளவு உள்ளன. இவர்களுக்கு ஹிந்து மதம் பற்றிய புரிதலின்மையோடு கூட சனாதன தர்மத்தின் மீது ஏளனமும் வெறுப்பும் நிறைந்துள்ளது.
உறவினர்களில் யாராவது மரணித்தால் உறவின் நெருக்கத்தை பொருத்து எத்தனை நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்? எவ்வாறு? என்பது கூட அறியாத குடும்பங்கள் பலப்பல. சிறிது காலம் முன்பு வரை வீட்டில் பெண்கள் கடைபடித்த மாதவிலக்கு நியமங்கள் கூட முழுமையாக மறைந்து விட்டன. அதோடு விதண்டாவாதம் செய்வதும் பரிகாசம் செய்வதும் அதிகமாகிவிட்டது. மறுபுறம் மேல்நாட்டு அடிமை உணர்வே மூச்சாக வாழும் இந்து குடும்பங்கள் அவற்றை கண்டு கொள்வதே இல்லை.
தற்போது இந்த விஷயங்களும் சம்பிரதாயங்களும் சரியானவைதான் என்று வெளிநாட்டு அறிஞர்கள் கூட ஆராய்ந்து கூறத் தொடங்கியுள்ளார்கள்.

மற்றொரு விந்தை என்னவென்றால் பிற மதத்தவரிடம் காட்டும் உதார குணமும் மதிப்பும் தம் மதத்தவரிடம் இந்துக்கள் துளியும் காட்டுவதில்லை. திரைப்படங்களும் ஊடகங்களும் இந்து தெய்வங்களையும் சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகின்றன. நம் தேசத்தில் கொடூரமான வன்முறை, அழிவு, கொள்ளைகளில் ஈடுபட்ட பிற மதங்கள் மீது அனுதாபமும் அவர்கள் குறித்து உயர்வாக சித்தரிப்பதும் தொடர்கிறது.
விடுதலைக்கு முன் நம் தேசத்தை ஆண்ட பிற மதத்தவரும், அதற்குப் பின்னர் இடதுசாரி மேதாவிகளும் விதைத்த தேச விரோதக் கொள்கைகள் முழுமையாக பலனளித்து ஹிந்துக்களிடம் தாழ்வு மனப்பான்மையும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. அவற்றின் தாக்கத்தால் நாட்டுப் பற்று அற்ற பலவீனமான ஹிந்து சமூகம் உருவாகி உள்ளது. எளிதாக பேராசைக்கும் வஞ்சனைக்கும் உள்ளாகி மதம் மாறுவது இந்துக்கள் மட்டுமே.
வேத தர்மத்தை கடைபிடிப்பவர்களை அவமானமாக பார்ப்பதும் அதை ஏதோ பெரிய குற்றமாக நினைத்து ஏளனம் செய்வதும் ஹிந்து மதத்தவரிடம் மட்டுமே காணப்படுகிறது.
ஒரு நண்பர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தபோது அவர் மனைவியும் மாமியாரும் அது ஏதோ செய்யக் கூடாத காரியம் என்பது போல் வெறுத்து முகத்தைச் சுருக்கி எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர் படிப்படியாக வீடு வாசலைத் துறந்து பைராகி ஆகிவிடுவார் என்று மாமியார் குற்றம் சுமத்தினார்.

அவரால் வளர்க்கப்பட்ட அந்த நண்பரின் மனைவி கணவரை ஒரு துரும்பை பார்ப்பதுபோல் நடத்தியதில் ஆச்சரியம் இல்லை. அவர் வியாபாரத்திலும் உத்தியோகத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்தான். பொருளாதார வசதியில் எந்த குறையும் இல்லாவிட்டாலும் கூட இந்த அவமரியாதையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உண்மையில் சந்தியாவந்தனமும் தெய்வ வழிபாடும் உலகியல் வாழ்க்கை மேலும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்காக ஏற்பட்டவையே என்பதை அவர்கள் அறியவில்லை. இல்லற தர்மத்தில் இவை முக்கியமான கடமைகள் என்பதை கடந்த தலைமுறைகள் மறந்துவிட்டன.
ஏதோ ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலாப் பயணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டும் தங்கும் வசதியும் செய்து கொண்டு திருப்பதிக்கோ வேறு ஏதாவது ஒரு புண்ணியத் தலத்திற்கோ கடனே என்று சென்று வந்து விட்டு தாம் ஏதோ உயர்ந்த ஹிந்துக்கள் ஆகி விட்டதாக திருப்திபடுபவர்கள் பலர் உள்ளனர்.
பிற மதத்தவர்களைப் பார்த்தும் கூட இவர்களுக்கு கண் திறப்பதில்லை. சிறு வயதிலிருந்தே தமது மத தர்மங்களை சிரத்தையோடும் அன்போடும் கடைபிடிக்கும் பண்பாட்டை அந்த மத குடும்பங்களில் கற்றுத்தருகிறார்கள். அவர்களின் மத அமைப்புகள் தர்க்கம் விதண்டாவாதம் பகுத்தறிவு வாதம் போன்றவற்றுக்கு இடமளிப்பதில்லை.
மத அமைப்புகளுக்கு தானங்களும் நன்கொடைகளும் சமர்ப்பித்து ஆதரவு தருகிறார்கள் அம்மதத்தவர்கள். தம் வாழ்நாளில் தம் மத நூல்களையும் ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் குருமார்களையும் துளியும் ஏளனம் செய்ய மாட்டார்கள். அவர்களின் கட்டுப்பாடு அப்படிப்பட்டது.

சிந்தனையிலும் பேச்சிலும் சுதந்திரத்தை அளவுக்கதிகமாகப் பெற்ற மெத்தப்படித்த ஹிந்துக்கள் பலரும் வெறிபிடித்த விதண்டாவாதமும் பகுத்தறிவு வாதமும் செய்து நம் சம்பிரதாயங்களை பரிகசித்து, கேலி செய்து வருகிறார்கள். வழிபடப்படும் தெய்வங்களையும் அவதார மூர்த்திகளையும் பழக்கவழக்கங்களையும் நிந்திக்கிறார்கள். பிற மதங்களை மகிழ்ந்து கௌரவிக்கிறார்கள்.
இவ்விதமான இயல்புகளை கவனித்துத்தான் செக்யூலர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இந்துக்களால் பயனில்லை என்று முடிவெடுத்த அரசியல்வாதிகள் தாம் தனிப்பட்ட முறையில் இந்துவாக இருந்தாலும் இந்துக்களின் நலனுக்கு எதிராகவும் கோவில்களைத் தாக்குவதிலும், கோவில் நிதியை அபகரிப்பதிலும் ஈடுபடுகிறார்கள். பிற மதங்கள் இத்தகைய அரசியல்வாதிகளின் ஆதரவுக்கும் அனுதாபத்திற்கும் பாத்திரமாகி வருகின்றன.
நம் கோவில்கள் அரசாங்கத்தின் தலையீட்டால் பலவிதங்களிலும் சூறையாடப்பட்டாலும் கோவில் சொத்து பிற மதங்களுக்காக செலவு செய்யப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது இந்துக்களுக்கு பழகிவிட்டது.
இந்துக்கள் தம் தம் பணிகளைப் பொறுத்து சிறிது நேரமாவது ஒதுக்கி கடவுள் தியானம், வழிபாடு, பூஜைகளில் ஈடுபட விரும்புவதில்லை. இந்தப் பிண்ணனியில் ஒவ்வொரு குடும்பமும் முன்வந்து ஹிந்துத்வ வெறுப்பு நிலவுவதை கவனித்து நம் தர்மம், கலாச்சாரம், நம் பண்டைய கலைகள் இவற்றின் உன்னதத்தை அறிந்து கொண்டு அவற்றைக் கடைபிடிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
நம்முடைய ஸ்வதர்மம் ஆதலால் இவற்றை நாம் விடக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாவிட்டால் எப்படி?
வீட்டில் பெற்றோர் தம் தந்தையும் தாத்தாவும் கடைபிடித்து வந்த தர்மத்தை விடாமல் கடைபிடித்து அவற்றை தம் குழந்தை களுக்கும் புரிய வைக்க வேண்டும். அதற்கு முதலில் நம் ஹிந்து தர்மம் மீது கௌரவமும் ஆதரவும் ஏற்பட வேண்டும். அவற்றை ஏற்படுத்துவது மதப் பெரியவர்களின் கடமை.
மூலம்: மே 2021 ‘ருஷிபீடம்’ இதழ் தலையங்கம்