விஜய பதம்
– வேத மொழியின் வெற்றி வழிகள்!
தெலுங்கில்: பி.எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
6. Talent Management
– தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்?
தூதன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி!
ஸ்ரீமத் ராமாயணத்தில் தூதனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளை வால்மீகி முனிவர் இவ்வாறு விவரிக்கிறார்… தற்போதும் பயன்படும் குணங்கள் இவை.
“அனுரக்த: ஸுசிர்தக்ஷ: ஸ்ம்ருதிமான் தேசகாலவித் !
வபுஷ்மான் வீதபீர்வாக்மீ தூதோ ராஞ்ஜ: ப்ரஸஸ்யதே !!”
அரசனிடம் கௌரவத்தோடு கூடிய அன்புள்ளவன், சாமர்த்தியசாலி, ஞானமுள்ளவன், தேச கால தத்துவமும் சமயோசிதமும் அறிந்தவன், பூகோள அறிவு உள்ளவன், அழகான வடிவுள்ளவன், அச்சமற்ற பேச்சு வல்லமை நிறைந்தவன் – சிறந்த தூதுவனாக புகழ் பெறுவான்.
மனம் நிலையற்று அலையும் குணம் கொண்ட தூதர்கள் தாம் பணிபுரியும் இடத்தையும் சமய சந்தர்ப்பத்தையும் கவனிக்காமல் நடந்து கொண்டால் காரியம் கெட்டுப்போகும்.
தூதனுக்கு இருக்க வேண்டிய மேலும் எட்டு குணங்களை விதுரர் குறிப்பிடுவதாக மகாபாரதத்தில் வியாசர் விவரிக்கிறார்.
“அஸ்தப்தமக்லீபம தீர்க சூத்ரம்
சானுக்ரோசம் ஸ்லக்ஷ்ணமஹார்ய மன்யை:
அரோக ஜாதீய முதார வாக்யம்
தூதம் வதம்த்யஷ்ட குணோபபன்னம்”
– மகாபாரதம் உத்யோக பர்வம் 37/ 27.
தூதனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்-
கர்வமற்ற குணநலம்.
திறமை, சாமர்த்தியம்.
வேலையை இழுத்தடிக்காமல் முடிக்கும் குணம்.
தயை, பரோபகாரம்.
அனைவரும் விரும்பும் தன்மை. செல்வம் பெண் சொத்து வாகனம் போன்றவற்றில் பேராசைக்கு அடிமையாகாது இருத்தல்.
உடல் வலிமை, ஆரோக்கியம் கொண்டிருத்தல்.
மரியாதையோடு உரையாடும் இயல்பு.
“கார்ய கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன்யபி ஸாதயேத் !
பூர்வ கார்யா விரோதேன ஸ கார்யம் கர்துமர்ஹதி !!
– சுந்தரகாண்டம் 41/5
உரிமையாளர் ஆணையிட்ட பணியை செய்து முடிப்பதோடு தொடர்புடைய சில பணிகளையும் சேர்த்து வெற்றிகரமாக முடிப்பவனே சாமர்த்தியசாலி, செயலூக்கம் கொண்டவன்.
“காதயன்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின: !”
– சுந்தரகாண்டம் 2/40
தாமே புத்திசாலி என்று கர்வம் கொள்ளும் தூதுவர்கள் செய்ய வேண்டிய பணியை கெடுத்துவிடுவர்.
சுபம்!