
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
மர்கட மதிராபானாதி ந்யாய: (அல்லது) வ்ருச்சிக வானர ந்யாய:
மர்கட: – குரங்கு, மதிராபானம் – கள் குடிப்பது, ஆதி – முதலான. வ்ருச்சிக வானர – தேள் கொட்டிய குரங்கு.
குரங்கு சஞ்சலமான குணத்திற்கு குறியீடு. அமைதியாக ஒரு இடத்தில் உட்காராது. ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு தாவிக்கொண்டே இருக்கும். அதற்குத் தேவையில்லாத பொருள் என்று எதுவுமில்லை. பிருந்தாவனம் சென்றவர்களுக்குத் தெரியும். மூக்குக் கண்ணாடியைப் பறித்துவிடும். சற்று ஏமாந்தால் நம்மை சூறையாடிவிடும். அவை தின்னக் கூடிய பழமோ வேறு ஏதாவதோ கொடுத்தால் அப்போது கருணையோடு நம் கண்ணாடியை, நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து முழுவதாகவோ இரண்டு துண்டுகளாகவோ நம்மிடம் தூக்கிப் போடும். இது அதிகம் ஆபத்து இல்லாத விளையாட்டு.
ஆனால் குரங்கை கள் குடிக்கச் செய்தாலோ, தேள் கொட்டச் செய்தாலோ, பைத்தியம் பிடிக்க வைத்தாலோ என்ன ஆகும்? எந்த ஆபத்து வேண்டுமானால் நேரலாம் என்கிறது இந்த சமஸ்கிருத ஸ்லோகம்.
மர்கடஸ்ய சுராபானம் மத்யே வ்ருச்சிக தம்ஸனம் |
தன்மத்யே பூத சஞ்சாரம் யத்வா தத்வா பவிஷ்யதி ||
மனித புத்தியையும் அவனுடைய சிந்தனையையும் குரங்கோடு ஒப்பிடுவர். சிந்தனையால் ஆபத்து நேரலாம். நேராமலும் போகலாம் ஆனால், வெளியிலிருந்து சில விஷங்கள் ஏற்றப்பட்டால் ‘யத்வா தத்வா பவிஷ்யதி’. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
விஷங்கள் பலவகைப்படும். அதனால்தான் கீதாசாரியன் ஒரு எச்சரிக்கை விடுக்கிறான்.
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸனம் ஆத்மன: |
காம க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் || (16:21)
பொருள் – காமம், குரோதம், பேராசை மூன்றும் நரகத்தின் மூன்று வாயில்கள். இவை மனிதனை அழித்து விடும். அதனால் இம்மூன்றையும் கைவிட வேண்டும்.
குரங்கு தானாகச் சென்று கள்ளை குடிக்காது. அல்லவா? சுயநலவாதிகள் யாராவது வேண்டுமென்றே குடிக்க வைத்து அதனை துரத்துவார்கள். அந்த விஷத்தை யாரோ உள்ளே செலுத்துகிறார்கள். அதனால் அனர்த்தம் நேர்கிறது.
இதுவே இந்த ‘மர்கட மதிராபானாதி’ அல்லது ‘வ்ருச்சிக வானர நியாயம்’ கூறும் கருத்து. வானரத்தை அரக்கனாக மாற்றும் செயல்.
*கைகேயிக்கு ராமன் மீது பிரியம் அதிகம். ராமனுக்கு பட்டாபிஷேகம் என்றவுடன் மிகவும் மகிழ்ந்தாள். ஆனால் மந்தரை கைகேயிக்கு விஷத்தைப் புகட்டினாள். ஆத்திரமூட்டினாள். ‘கௌசல்யா மகாராணியாகிவிடுவாள். நீ அவளுக்கு ஊழியம் செய்ய வேண்டும்’ என்று சொற்களால் விஷத்தை செலுத்தினாள்.
அதே போல் அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசையை புத்தியில் ஏற்றிக் கொண்டு ஏமாந்து பணத்தை இழந்து அழிந்தவர்கள் எத்தனையோ பேர்.
*ராமாயணம் ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகையின் பாத்திரத்தை ஆராய்ந்தால், லக்ஷ்மணனோடும் சீதா தேவியோடும் வசித்த ஸ்ரீ ராமனைப் பார்த்தவுடனே, காமம், குரோதம், லோபம் என்ற மூன்றுக்கும் வசமாகி, அந்த விஷங்களை யாருக்கு எந்த அளவு பகிர வேண்டுமோ அந்த அளவுக்குப் பகிர்கிறாள். கரனிடம் குரோதத்தை வளர்க்கிறாள். அதன் மூலம் பதினான்காயிரம் அரக்கர்களின் மரணத்திற்குக் காரணமாகிறாள். சகோதரனான ராவணனிடம். சீதையின் அழகைப் புகழ்ந்து காமத்தைத் தூண்டுகிறாள்.
ஸா சுசீலா வபு: ஸ்லாக்யா ரூபேணா ப்ரதிமாபுவி|
தவானுரூபா பார்யா ஸ்யாத் த்வாம் ச தஸ்யாஸ்ததா பதி: ||
பொருள் – நல்ல நடத்தையும் புகழத் தக்க அவயவங்களும் பூவுலகில் ஒப்பற்ற அழகும் கொண்ட அவள் உனக்கு மனைவியாகத் தகுந்தவள். நீயே அவளுக்கு ஏற்ற கணவன்.
அயோக்கியனே ஆனாலும் ராவணன் சிறந்த சிவ பக்தன். வேத பண்டிதன். ராவணனுக்கு இருந்த பிறன்மனை நாடல் என்னும் ஒழுக்கக்கேட்டை சூற்பனகை தூண்டுகிறாள், குரங்கிற்கு கள்ளை ஊற்றிக் கொடுத்ததது போல. என்ன நடந்தது? ‘யத்வா தத்வா பவிஷ்யதி’ போல ஆனது.
*முதல் சுதந்திரப் போரில் (1857) கிடைத்த வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷார் பாரத சமுதாயத்தை வேறுபடுத்தி, பிரித்தாளும் ‘டிவைட் அண்ட் ரூல்’ போர் முறையின் தந்திரத் திட்டத்தை அமல்படுத்தி இரு பிரிவுகளிடையே சண்டை மூட்டத் தொடங்கினர்.
இயல்பாக இருக்கும் குரங்கு குணத்தைத் தூண்டுவது போல வெளிநாட்டு சக்திகள் முயற்சித்தனர் என்பது இதன் பொருள். இங்கு வானரம் என்பது சமுதாயம். குரங்காட்டி அதற்கு கள் கொடுத்து குடிக்க வைத்தான். காலைச் சுட்டான். தேளைக் கொண்டு கொட்டச் செய்தான்… பசுவைக் கொன்று கோவிலில் போட்டனர். பன்றியை துண்டு துண்டாக்கி மசூதியில் வீசினர். இரு பிரிவுகளிடையே பகையைத் தூண்டி வளர்த்து போஷித்தனர். ரத்த ஆறு ஓடச் செய்தனர் பிரிட்டிஷார்.
நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இருந்த பலவீனங்களை அடையாளம் கண்டு காமம், பேராசை போன்றவற்றைத் தூண்டி தாய் போன்ற தேசத்தைத் துண்டாடி, டைரெக்ட் ஆக்ட் என்ற பெயரில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும்படி தூண்டினர்.
அசாதரணமான வழியில் வன்முறையை நடத்தி லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமானது பிரிட்டிஷ் அரசாங்கம்.
அதனால்தான் மனிதனின் புத்தியும் சிந்தனையும் குரங்கோடு ஒப்பிடப்படுகின்றன. மனிதனின் யோசனைகளை ஆபத்தானவையாக மாற்றுவதற்கு வெளியிலிருந்து விஷங்களை ஏற்றிய உதாரணங்கள் பல உள்ளன.
*உலகில் வாழும் பல்வேறு மனிதர்களை அவர்களின் மதத்திலிருந்து பிரித்து, தம் மதத்தில் சேர்க்க வேண்டும் என்ற பெரிய சூழ்ச்சியை நடத்திய கிறிஸ்தவ மத அமைப்பு இதே கொள்கையை கடைப்பிடித்தது. யூதர்களை கூட்டமாகக் கொன்றது. முன்னாள் போப் ஹாட்ரியன் -3 (884-885) உயர் குடும்பப் பெண்களை நிர்வாணமாக தெருவில் இழுத்துச் சென்று சாட்டையால் அடிக்கச் செய்து மகிழ்வது வழக்கம். (மூல சூத்திரங்கள் பக் -44).
அண்மையில் மணிப்பூரில் நடந்த சம்பவம், அவற்றின் மூல காரணம் ஆகியவற்றை பரிசீலித்து பார்த்தால் குரங்குகள் யார்? அவற்றுக்கு கள் கொடுத்து குடிக்கச் செய்தது யார் என்பது விளங்கும். அமைதியை சீர்குலைக்கும் சக்திகள் நேரத்தையும் சந்தர்பத்தையும் பார்த்து குரங்குகளுக்கு கள்ளைக் கொடுத்து குடிக்கச் செய்த உதாரணங்கள் கொஞ்சமல்ல.
இரு பிரிவுகளிடையே பற்றவைத்து தீயைத் தூண்டி எரியவிட்டு திருப்தி அடைவது இந்த நியாயத்திற்கு உதாரணம்.
அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டார்கள் என்று புகார் கிளப்புவார்கள். (அல்லது அவர்களே போட வைப்பார்கள்). அவ்வளவுதான். நெருப்பை மிதித்த குரங்கைப் போல சமுதாயம் பொங்கி எழும். இரு வர்க்கங்களும் அடித்துக் கொள்வதே அவர்களுக்கு வேண்டியது. Mob என்னும் குரங்குக் கூட்டத்திற்கு கள்ளைக் குடிக்கச் செய்து இரு மாநிலங்களின் இடையில் நதி நீர் பங்கீட்டின் பெயரிலோ, மொழி பிரச்சினையின் பெயரிலோ தகராறு ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு தேசதுரோகக் கூட்டம் சிந்தித்து அமல்படுத்தும் சதியை இந்த நியாயத்திற்கு உதாரணமாக கூறாலாம்.
இளைஞர்கள் ஆணும் பெண்ணும் குழுவாகச் சேர்ந்து பொழுதுபோக்காக பேசிக் கொள்ளலாம். விளையாட்டாக சிரித்து காலம் கழிக்கலாம். ஆனால் அவர்கள் மது அருந்தினால் சூழல் மாறிவிடும். அதுவரை அமைதியாக இருந்தவர்களிடையே காமம், குரோதம் பேராசை பிரவேசித்து எது வேண்டுமானாலும் நடக்கலாம். ‘யத்வா தத்வா பவிஷ்யதி’ க்கு இது போன்ற செய்திகள் உதாரணம்.
குரங்கு போன்ற மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு கீதாசாரியன் பதில் கூறுகிறான்.
அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்|
அப்யாசேன து கௌந்தேய வைராக்யேன ச க்ருஹ்யதே|| (6:35)
பொருள் – நீ கூறிய சொற்கள் உண்மைதான். மனம் நிலையற்றது. கட்டுப்பாடற்றது. ஆனால் அர்ஜுனா, யோகாப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் மனதை அடக்க முடியும்.
மனக் குரங்கை மராமத்து செய்யவதற்கு வழிகள் – பயிற்சியும் வைராக்கியமும். குரங்கை தன் விருப்பம் போல் ஆட்டி வைப்பவரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
தெலுங்கில் புகழ்பெற்ற சுமதி சதகம் எழுதிய கவிஞர் நமக்கு ஒரு உபாயம் கூறுகிறார். இனிப்பாக யாராவது பேசினால் உடனே செயலில் இறங்காதே. விசாரி. யோசித்துப் பார் என்கிறார்.