
தெலுங்கில் –
பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியமான நிகழ்வு. மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரத தேசத்தில் தேர்தல் நடக்கும் விதம் திருப்தியாக உள்ளதா? என்று கேட்டால் அறிஞர்கள் ஏமாற்றத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் குறித்த புரிதலே இல்லை. படித்தவர்களில் பெரும்பாலோர் ஓட்டு போடுவதற்கு செல்வதில்லை. தேர்தல் நடக்கும் நாளை விடுமுறையாக எண்ணி ஏதேதோ வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் முடிவுகளை கிரிக்கெட் நிகழ்ச்சியை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். தேர்தலில் பணத்திற்கோ இலவசத்திற்கு மதுவுக்கோ பேராசைப்பட்டு விவேகமின்றி அருகதையில்லாதவருக்கு வாக்களிப்பவர்களே அதிகம். நோட்டுக்கு ஓட்டு போடும் தேசத்தில் வாழும் குடிமக்கள், அரசாட்சியில் நியாயத்தையும் நீதியையும் எதிர்பார்ப்பதே தவறு.
போகட்டும். பொறுப்போடு வாக்களிக்கச் சென்றால் வாக்காளர் பெயரே இருக்காது. அல்லது அந்த பெயரில் வேறு யாரோ அதற்கு முன்பே வாக்களித்திருப்பார்கள். பொதுமக்கள் தம் வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையை தலைவர்களே உருவாக்குகிறார்கள். சில இடங்களில் கள்ள ஓட்டு, வாக்காளர் பட்டியல் காணாமல் போவது போன்ற செய்திகளைக் கேட்டாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.
ஒரு ஓட்டுக்கு லட்சங்களைக் கொடுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு வந்தால் எத்தனை கோடிகளை சம்பாதிப்பார்கள் என்பதை யூகிக்கலாம். தேசம் எப்படிப் போனால் என்ன? துண்டுதுண்டானாலும் பரவாயில்லை. தேசம் வளர்ச்சி அடையாவிட்டாலும் நஷ்டமில்லை. தம்முடைய மதமே தேசத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்று கூடியுள்ள மதவாதிகளை திருப்திபடுத்த தலைவர்கள் தேச விரோத செயல்களைச் செய்வதற்கும் பின்வாங்குவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.
தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் அரவணைக்கும் துஷ்ட தலைவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறோம். அவர்களைத் தோளில் சுமக்கும் ஊடகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த மத வெறியர்களின் ஆதரவோடு அக்கிரமமாக குடியேறிய போலி வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதும் தெரிந்த செய்தியே.
ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் அதிகாரிகளையும் பாதுகாப்பு துறையையும் தமக்கு அனுகூலமாக்கிக் கொண்டு தம் அக்கிரமங்களை எளிதாகத் தொடர்வதும் குண்டர்களும் ரௌடிகளும் களத்தில் இறங்குவதும் தேர்தல் நேரத்தில் அதிகமாகத் தென்படும் காட்சிகள்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்தபடி பிரச்சாரம், செலவு போன்றவை நடப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. நியமப்படி நடப்பவர்கள் தேர்தலில் வெல்வதில்லை. பல இடங்களில் நாற்பதிலிருந்து அறுபது சதவிகிதம் மட்டுமே வாக்கெடுப்பு நடக்கிறது. அதிலும் பல ஊழல்கள்.
முழுமையான தேச முன்னேற்றம். தேசத்தின் கௌரவம், ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து குடிமக்களின் நலம், அனைவருக்கும் தேவையான சாலை வசதி, அடிப்படை சௌகர்யங்கள் போன்றவை பற்றி சிறிதும் கவலைப்படாத குடிமக்களும் தலைவர்களும் இருக்கும் தேசத்தில் ஜனநாயகத்தின் பலன்களை எவ்வாறு ஆசைப்படுவது?
வியப்பு என்னவென்றால், தேர்தலில் அநீதியும் அட்டூழியமும் நடக்கின்றன என்று சாதாரண மக்களுக்கே தெரியும்போது, தேர்தல் கமிஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் தெரியாதா? ஆனால் அவர்களும் தகுந்த விதத்தில் நடவடிக்கை எடுக்காமலும், எடுக்க இயலாமலும் அலட்சியத்தோடு நடந்து கொள்கிறார்கள்.
காவல்துறை சோதனையிடல், வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்வது போன்ற நாடகங்கள் நடந்தாலும் சட்டவிரோத பணம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து கொண்டுதான் இருக்கிகிறது. பதவி மோகத்தில் ஆழந்தவர்கள் அட்டூழியம் செய்வதற்குத் தயங்குவதுமில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதால் சரியான முறையில் தேர்தல் நடக்கும் என்று பார்த்தால், அவற்றைத் தவறாக பயன்படுத்தும் அநீதியாளர்களுக்கு குறைவே இல்லை.
இந்தப் பின்னணியில் இந்த பிரசாரங்களின் ஆர்ப்பாட்டமும் ஊர்வலங்களும் வெறும் பொழுதுபோக்கே தவிர வேறு எதற்குப் பயன்படும்? இத்தகைய போலி தேர்தல்களின் வழிமுறையை மாற்ற இயலாத அளவுக்கு அனைத்துத் துறைகளும் பாழடைந்து விட்டன.
நம் தேசத்தில் இளைய தலைமுறை மக்கள்தொகை மிக அதிகம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். ஆனால் இளைஞர்களில் அதிகம் பேர் போதையிலும் பொழுதுபோக்கிலும் நேரம் கழிக்கிறார்களே தவிர தேசத்தின் வளர்ச்சி பற்றிய பொறுப்போ புரிதலோ இல்லாதவர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறந்த ஜனநாயக தேசமாக முன்னேறப் போகிறோமா? நல்ல ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ளப் போகிறோமா?
யாரும் எதுவும் செய்ய முடியாத தருணத்தில் கடவுள் மேல் பாரத்தைப் போடுவது மக்களுக்கு பழகி விட்டது..
— <தலையங்கம், ருஷிபீடம் நவம்பர் 2௦23> —-