“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
(Source: Editorial January, 2018, Rushipeetham)
சில நாட்கள் முன்பு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணர் பேசுகையில் “சுதந்திரம் கிடைத்தபின் தலைமைப் பொறுப்பேற்ற சில தலைவர்கள் ஹிந்துக்களுக்கு நாடு இல்லாமல் செய்து விட்டார்கள்” என்றார். அவர் ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அறிஞர்.
அவர் கூற்று ஆலோசிக்க வேண்டிய ஒன்று. ஹிந்துக்களின் மீது துவேஷம் மட்டுமே உள்ளவர்களைத் தவிர ஆரோக்கியமான கண்ணோட்டமுள்ள அனைவரும் இதில் உள்ள உண்மையை அங்கீகரிப்பார்கள்.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நம் நாட்டின் ஸ்வராஜ்ஜியத்திற்காக நடந்த போராட்டங்கள் அனைத்தும் ‘ஹிந்து’ என்ற சொல்லைக் கொண்டே நடந்தன. பாரத நாட்டவர் அனைவரும் ஹிந்துக்களாகவே அறியப்பட்டார்கள். ‘ஹிந்துஸ்தான் ஹமாரா!’ என்ற முழக்கம் இன்றைக்கும் சிலரின் நினைவில் நிற்கும் என்பது உண்மை.
‘ஹிந்து’ என்ற பதம் ‘ஸிந்து’ என்ற சொல்லிருந்து பிறந்ததென்பது அனைவருக்கும் தெரிந்ததே! கங்கை முதல் காவேரி வரை நம் நாட்டின் நதிகள் அனைத்தும் ‘சிந்து’ என்றே அழைக்கப்படுகின்றன. ‘சப்த சிந்து’ நதிகளை வர்ணிக்கிறது வேதம்.
இந்த சிந்து நதி தீரங்களில் வளர்ந்த பாரத வர்ஷத்திற்கு ஏற்பட்ட ‘ஹிந்து தேசம்’ என்ற பெயர் ஏற்புடையதே. இதன் மற்றொரு பெயர் பாரத நாடு. இந்த இரண்டு பெயர்களும் நம் நாட்டிற்குப் பொருந்தும் பெயர்களே!
ஆனால் மேலை நாட்டவர் இதனை இண்டியா என்று குறிப்பிட்டார்கள். சுதந்திரம் வந்தவுடன் இப்பெயரையே தீர்மானம் செய்தனர் அன்றைய முக்கியத் தலைவர்கள்.
உடனே சிலர் நம் நாட்டிற்கு பல காலமாக ‘பாரத தேசம்’ என்ற பெயர் உள்ளது என்று நினைவுபடுத்தினார்கள். ஆனால் நம் கலாசாரத்தின் மீதும் பாரம்பர்யம் மீதும் துவேஷம் நிறைத்துக் கொண்ட பிரதான தலைவர் அதனை ஏற்க மறுத்தார்.
அப்போது ஒரு வரலாற்று அறிஞர், ‘காரவேலரின் சாசனம்’ போன்ற சான்றுகளை எடுத்துக் கூறிய பின், “இண்டியா தட் ஈஸ் பாரத்” என்று கூறத் தலைப்பட்டார்கள்.
உண்மையில் நாடு பிளவு பட்டதற்கு மதமே காரணமாக இருந்த பட்சத்தில், தயவு தாட்சண்யமின்றி நாட்டைக் கூறு போட்டு இரண்டு பாகங்கள் முஸ்லீம் தேசங்கள் என்று துண்டாக்கிக் கொடுத்தபின், மீதி உள்ள பாகம் ஐயத்திற்கிடமின்றி ஹிந்து தேசம் தானே!
ஆனால் ஹிந்து தேசம் என்ற சொற்களை நீக்கி விட்டு அந்த இடத்தில் செக்யூலர் என்ற சொல் இடப்பட்டது.
ஹிந்து மதம் என்பது எதோ ஒரு புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டோ அல்லது யாரோ ஒரு குருவைச் சார்ந்தோ ஏற்பட்டது அல்ல. அது நம் நாட்டைக் குறிக்கும் சொல். நம் நாட்டின் தர்மம், ஞானம், நாகரிகம், பண்பாடு, கலாசாரம்,,, அனைத்தும் சேர்ந்ததே ’ஹிந்து’ என்ற சொல்.
முழுமையான பாரத நாட்டின் ஒன்றுபட்ட சூத்திரம் ஹிந்து என்ற சொல். பிற நாடுகளிலிருந்து வந்து நம் நாட்டில் குழப்பம், மானபங்கம், கொலை, கொள்ளை போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள் இச்சொல்லை ஏற்கவோ விரும்பவோ மாட்டார்கள். அவர்களை மகிழ்விப்பதற்காக ‘ஹிந்து’ என்ற பெயர் பாரத நாட்டிற்கு வராதபடி பார்த்துக் கொண்டார்கள்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய பிற இரு மதத்தினரும் நம் நாட்டின் இயல்பான கலாசாரத்தின் எந்த ஒரு அம்சத்தைத் தொட்டாலும் ‘இது மத தத்துவம். ஏற்க முடியாது’ என்று கூச்சலிட்டார்கள். இனமும் கூச்சலிடுகிறார்கள்.
அவர்களோடு சேர்ந்து தாமும் குரல் கொடுத்தனர் சிவப்பு முகத்தினர். உண்மையில் இந்த மூவருமே நம் மண்ணைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஹிந்து தர்மம் இவர்களுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் உள்ளது.
“தம் மதமும் தம் கட்சியின் கொள்கையும் மட்டுமே மனிதனாய் பிறந்தவனுக்கு கதி. அவற்றை அனுசரிக்காதவர்கள் வீணர். அவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும்” என்பதே இம்மூவரின் முக்கியக் கொள்கை.
எனவேதான் அவர்களுக்குச் சொந்தமில்லாத நம் நாட்டை அவர்கள் தம் வசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நம் நாட்டின் உயிர் மூச்சான சனாதன பண்பாட்டை துவேஷித்து, இம்சித்து, அழித்து விடும் நோக்கத்தோடு எழுபது ஆண்டுகளாக தீவிரமான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
வரலாற்றினைச் சரியாக அறியாத நம் மக்கள் தம் இயல்பான பாரதப் பண்பாட்டை மறந்து அயலார் போல் மாறி, நம் நாட்டின் தேசீய பாவனைக்கு விரோதிகளாகி வருகிறார்கள்.
அவர்களின் மதக் கூட்டங்களிலும் அரசியல் சபைகளிலும் பாரத நாட்டிற்கு இயல்பாக உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் மதக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்த்து அது கூண்டோடு அழிய வேண்டும் என்று கோஷம் போட்டு வருகிறார்கள்.
‘பாரத நாட்டு கலாசாரம் என்பது ஹிந்து மதமே!” என்பது அவர்களின் தீவிரமான நம்பிக்கை. அது உண்மையிலிருந்து விலகியதும் அல்ல.
‘ஹிந்து மதம் என்பது வாழும் வகை. அது ஒரு மதம் அல்ல!’ என்று சில உதார குணம் கொண்டவர்கள் கூறியதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘உங்களுக்குத்தான் மதம் என்று ஒன்று இல்லையே! நாங்கள் உங்களுக்கு மதம் தருகிறோம்” என்கிறார்கள் பிற மதத்தவர்.
ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கைக்குச் சரியான வழி காட்டும் சிறந்த மதம் என்பதை நாமனைவரும் உணர வேண்டும்.
ஹிந்து மதத்திற்கு நாடு எங்கே? தயவு செய்து இக்கேள்விக்கு தலைவர்கள் பதில் கூற வேண்டும்.
ஹிந்து மதத்தின் மூல வித்து எந்த நாட்டில் உதித்தது? ஹிந்து மதத்தின் மத நூல்களில் குறிப்பிட்டுள்ள ஹிமாலயம், விந்தியாசலம், மலயாசலம், கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, துங்கபத்ரா, தாம்ரவர்ணீ, மகாநதி, அயோத்யா, மதுரா, மாயா, காசீ, பூரீ, துவாரகா, வேங்கடாசலம், அருணாசலம், கன்யாகுமரி….
இவையனைத்தும் எந்த தேசத்தில் உள்ளனவோ ஹிந்துக்களின் சிரத்தை, பக்தி இவற்றின் தாய் பூமி எதுவோ.. அது ஹிந்துக்களின் நாடன்றி வேறென்ன?
எங்களுக்கென்று நாடு இல்லையா? எங்களுக்கென்று நாடு கொடுங்கள் என்று கேட்டால் எதைத் தருவீர்கள்? எங்கள் மத நூல்கள், நம்பிக்கைகள் எங்கெங்கு உள்ளனவோ அவையனைத்தையும் தர வேண்டுமல்லவா? அதாவது பாரத நாடு தானே எங்கள் நாடு? இதனை ஹிந்து தேசமாக அறிவித்தால் இந்த விஷமிகள் செய்யும் தீமைகள் நீங்குவதோடு நம் நாட்டின் சிறப்பும் பெருமையும் ஆலயங்களும் பண்பாடும் காப்பாற்றப்படும்.
பிறரின் ஆளுமையில் இருக்கையில் விடுதலைக்கு முன்பே 1896ல் சுவாமி விவேகானந்தர், “ஹிந்து தேசத்தின் அபிவிருத்தியும் உயர்வும் சனாதன தர்மத்தை கடைபிடித்தால்தான் சாத்தியமாகும்” என்று அறிவித்தார்.
அந்த தீர்க்கதரிசியின் கூற்றின் ஒவ்வொரு எழுத்தும் உண்மை.
“தவறிழைக்காதீர்கள்! ஹிந்து மதம் இன்றி பாரத நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. ஹிந்துத்துவம் என்ற மண்ணில்தான் இந்த நாடு வேரூன்றி உள்ளது .
இந்த தர்மத்திலிருந்து இந்த நாட்டைப் பிரித்தால் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட பயிர் போல் இந்த நாடே வாடிப் போகும்” என்ற அன்னிபெசன்ட் அம்மையாரின் கூற்று சத்தியத்தின் சொல் வடிவமே.
ஹிந்து தர்மத்தை கௌரவிக்கும் அயல் நாட்டவர்கள் அனைவரும் ஹிந்து மதம் என்ற பெயரைக் கேட்டாலே பாரத தேசத்தை நினைப்பார்களே தவிர வேறு நாட்டை பாவனை செய்ய மாட்டார்கள் அல்லவா?
நம் நாட்டை ஹிந்து தேசமாக அறிவித்தால், பிற மதங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்று கேட்டால் நிச்சயமாக இருக்கும் என்று கூற முடியும். பிற மதங்கள் ஆளும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக இருக்கும் வர்கத்தினருக்கு பாதுகாப்போ நன்மையோ விளைவதில்லை என்பது செய்திகள் படிப்போருக்குத் தெரியும். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்பது, பொறுமை என்னும் குணம் இயல்பாக உள்ள ஹிந்து மதம் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் குணமும் பண்பாடும் கொண்டது.
“எங்கள் கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் பாவிகள்’, “எங்கள் மத விசுவாசத்தைக் கடைபிடிக்காதவர்களைக் கொன்று விட வேண்டும்’ என்று இரு மதங்களும் இரக்கமின்றி குரூரமாக நடந்து கொள்ளும் சூழலில், ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகையோடு இருந்த இந்துக்கள் மிகக் குறைவான மக்கள் தொகையினராகவும் பயப்படுபவர்களாகவும் வாழ்ந்து வரும் உண்மையை மூடி மறைக்கவில்லையா?
இத்தகைய கொடுமையால் சுமார் ஏழு மாநிலங்களில் மிகக் குறைவான காலத்திலேயே ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனது.
அம்மாநிலங்களில் பிற இரு மதத்தவரும் அடிக்கடி ஹிந்துக்களை கொடுமைப்படுத்தி, இம்சித்து, நாட்டு ஒருமைபாட்டைக் குலைத்து நம் நாட்டின் பண்பாட்டை அழித்து, நேர்மையான எண்ணங்களுக்கு இடமளிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.
கேரளா, வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், மேற்கு வங்காளம் போன்ற இடங்களே இதற்குச் சான்றுகள்.
ஹிந்துக்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
நம் நாட்டின் இயல்பான உயர்வு ஹிந்துத்துவம் காட்டும் வழி முறைகளிலேயே உள்ளது என்பதை உணர வேண்டும். ஹிந்து தத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு அதிகாரத்தில் அமர இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். மத மாற்றம் செய்பவர்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
ஹிந்துத்துவமும் பாரத நாடும் உயிரும் உடலும் போன்றவை.



