
காய் மண்டி
தேவையானவை:
அரிசி கழுவிய கெட்டியான மண்டி
(கழுநீரைத்தான் செட்டிநாட்டில் மண்டி என்போம்) -6 கப், கத்தரிக்காய் -1,
முருங்கைக்காய் -பாதி,
கீரைத்தண்டு -6 துண்டு, வாழைக்காய் -பாதி, வள்ளிக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு – 4 துண்டுகள், மாங்காய் -4 துண்டுகள் அல்லது மாங்காய் வற்றல் 6, கூழ்வற்றல் 6,
வறுத்த தட்டைப்பயறு கால் கப், பச்சை மிளகாய் 7,
சின்ன வெங்காயம் 15,
பலா விதை 5,
உப்பு -தேவைக்கேற்ப, புளி எலுமிச்சை அளவு. தாளிக்க:
கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 1,
எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை:
கீரைத்தண்டையும், முருங்கைக்காயையும் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கூழ்வற்றல், மாவற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பலா விதையைத் தோல் நீக்கி, இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டியான அரிசி மண்டி ஒரு கப் ஊற்றி, புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
மீதமுள்ள மண்டியை கொதிக்கவிட்டு, முதலில் தட்டைப்பயறைப் போட்டு சிறிது வெந்ததும், கத்தரிக்காய், வெங்காயம், முருங்கைக்காய், பலாவிதை, தக்காளி, பச்சைமிளகாய், வாழைக்காய், வள்ளிக்கிழங்கு, மாங்காய் அல்லது மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கூழ்வற்றல், கீரைத்தண்டு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
பிறகு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, கொதிக்க விட்டு கெட்டியானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டி இறக்கவும். இரண்டு நாளானாலும் இந்த மண்டி கெடாது. கட்டுச்சாதம், முக்கியமாக தயிர்சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன் இந்த மண்டி.