
மத்திய அரசின் அடுத்த அதிரடியாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப் படக் கூடும்.. அதற்கான முயற்சியை தீவிரப் படுத்த உச்ச நீதிமன்றம் தனது கிடுக்கிப் பிடியை போட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக.,வின் முக்கிய மூன்று கொள்கைகள் அயோத்தியில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் அந்தஸ்தை ரத்து செய்து நாட்டுடன் இணைப்பது. இந்த மூன்றில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஒன்றை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. அடுத்ததாக, முத்தலாக் விவகாரத்தை சட்டவிரோதமாக்கி, பொது சிவில் சட்டத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது மத்திய அரசு.
அடுத்தது பொது சிவில் சட்டம். நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப் படுவது. இது பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கி இருந்ததால், இதுவரை மத்திய பாஜக., அரசு கூட அதில் கைவைக்க யோசித்து வந்துள்ளது. இருப்பினும், இந்த முறை முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்திருப்பதாலும், மாநிலங்களவையிலும் அதற்கான பலம் கூடிவருவதாலும், இந்த விவகாரத்தில் தனது கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதற்கு ஏற்றது போல், இந்தக் குரலை முதலில் உச்ச நீதிமன்றமே தொடங்கி வைத்திருக்கிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டத்தை அமல்படுத்த கடந்த 63 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. இந்தக் கருத்தானது, மத்திய அரசின் அடுத்த கட்ட தனது கொள்கையை நிறைவேற்றுவதற்கான வலுவான ஒரு காரணத்தை முன்னிறுத்தப் போதுமானதாக அமையும்.
வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத் போஸ் அமர்வு இது குறித்துக் குறிப்பிட்ட போது, அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் ஒரு நாள், சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தனர். மத ரீதியான நம்பிக்கைகள் அடிப்படையிலான திருமண தனிச்சட்டங்கள், விவாகரத்து சட்டங்களை மாற்றி சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என நம்பினர்.
மக்களைப் பாதுகாக்கும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மாநிலங்களின் கொள்கைகள் குறித்து விவரிக்கும் சட்டப்பிரிவு 44 ன் 4 வது பத்தியில் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

1956ல் ஹிந்து சட்டங்கள், நெறிமுறைப் படுத்தப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த 1985 ல் இரண்டு வழக்குகளில் சிவில் சட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.
சிவில் சட்ட விவகாரத்தில், கோவா சிறந்த உதாரணமாக உள்ளது. அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டம் உள்ளது. முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற முடியாது… என்று கருத்து தெரிவித்தன.
மத்திய அரசின் முத்தலாக் விவகாரம், மற்றும் அதில் அடங்கியுள்ள சில பிரிவுகள் பொது சிவில் சட்டத்தை நோக்கி மத்திய அரசு நகர்வதற்கான முன்னேற்பாடுதான் என்பதை வல்லுநர்கள் பலரும் கூறியிருந்தனர்.



