
என்ன நடந்தது ? நடிகர் ராஜசேகர் விளக்கம். கார் விபத்தில் தனக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் நலமாக இருப்பதாகவும் ஹீரோ டாக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.
மேலும், அந்த விபத்து நடந்த போது தான் ஒருவரே காரில் இருந்ததாக கூறினார். ஆனால், விபத்துக்கான காரணத்தை அவர் கூறவில்லை. இருப்பினும், அதி வேகமே காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
புதன்கிழமை ராஜசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “செவ்வாய் இரவு இரண்டரை மணி அளவில் ராமோஜி பிலிம் சிட்டியில் இருந்து வீட்டுக்கு வரும்போது அவுட்டர் ரிங் ரோடில் ‘பெத்த கோல்கொண்டா ஜங்ஷன்’ அருகில் என் கார் விபத்துக்குள்ளானது.

எதிரில் வந்த காரில் இருந்தவர்கள் தங்கள் காரை நிறுத்தி என் கார் அருகில் வந்தனர். காருக்குள் இருப்பது நான் என்று அறிந்து ‘வின் ஷீல்ட் ‘ உள்ளே இருந்து என்னை வெளியே எடுத்தார்கள்.
நான் உடனே அவர்களிடம் இருந்து போனை வாங்கி போலீசாருக்கும் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தேன். அங்கிருந்து அவர்கள் காரிலேயே வீட்டுக்குக் கிளம்பினேன். ஜீவிதாவும் என் குடும்பத்தினரும் எதிரில் வந்து என்னை பிக்கப் செய்து கொண்டார்கள். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.
ராஜசேகரின் கார் விபத்து குறித்து ஷம்ஷாபாத் போலீசார் கூறியபோது… அவுட்டர் ரிங் ரோடில் பெத்த கோல்கொண்டா டோல்கேட் அருகில் கார் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது என்று ஷம்ஷாபாத் ரூரல் சிஐ வெங்கடேஷ் தெரிவித்தார். அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் டிரைவ் செய்ததால் விபத்து நடந்ததாக கூறினார். அங்கிருந்து காரை காவல்நிலையத்துக்கு அனுப்பினார்… என்றார்.
போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார் முழுமையாக பழுதடைந்த நிலையில் விலை உயர்ந்த காரில் இருந்த ஏர்பலூன்களால் ஹீரோ ராஜசேகர் மயிரிழையில் காப்பாற்றப் பட்டார் என்பது தெரிகிறது.