
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம் வாருங்கள் என்று ராகுலுக்கு அமித் ஷா சவால் விடுத்திருக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எவருக்கும் எந்த பாதிப்புமில்லை என்றும், இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் தயாரா என்றும், ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்தார்.
ஜோத்பூர் கூட்டத்தில் அவர் பேசிய போது… கடந்த ஓர் ஆண்டில் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கான உறுதியான நடவடிக்கைகளை சமரசம் இன்றி மேற்கொண்டு வருகிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு தவறான வகையில் எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றன!
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற மாட்டோம்.
காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டதற்காக ராகுல் கேள்வி எழுப்புகிறார். இந்தியாவுக்கு எதிரான கோஷங்களையே ராகுல் எழுப்பி வருகிறார், தேச விரோத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அண்டைய நாடுகளில் சிறுபான்மை மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. இந்தக் கட்சிகள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது.
இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு சிக்கல் வரும் என்று மக்களையும் நாட்டையும் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. ஆனால் இந்தச் சட்டம் குடியுரிமையை வழங்குவதுதானே தவிர, குடியுரிமையை பறிப்பதற்கானது அல்ல என்பதை அனைவருக்கும் தெளிவாக்க விரும்புகிறேன்.
குடியுரிமை மசோதா குறித்து நேருக்குநேர் விவாதிக்க ராகுல் தயாரா? .. என்று சவால் விட்டார் அமித் ஷா.